ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட பெண் துறவிகளுக்கான சேவைதான்!

 

 

 






 

 ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட சேவைதான்!

இந்தியத் தலைநகரில் நடந்த சம்பவங்களைப் பார்க்கப்போகிறோம். அத்ஹியாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் இந்த ஆசிரமங்கள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன. அண்மையில் கோவையில் இருந்து கூட பதினாறு வயது சிறுமி, ஒருவர் ஏவிவி எனும் இந்த ஆசிரம கிளைக்கு ஓடிப்போனார். ஆம். நகைகளுடன் சென்று துறவியானார். இப்போது அந்த இளம்பெண்ணின் அம்மா, மகளை மீட்க சட்ட உதவியை நாடியிருக்கிறார். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஆசிரமத்தை நடத்தும் வழக்குரைஞர் அமோல் கோகனேவை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, துறவியான மகளை தினசரி நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சந்தித்துக்கொள்ளலாம் என கருணை காட்டியது. நீதிமன்றத்தில் கூட மாட்டு மூத்திரத்தை குடிக்கும் ஆட்கள்தானே நியமிக்கப்படுகிறார்கள். பெரிதாக பயன் ஒன்றும் இருக்காது. மக்களே ஒன்று திரண்டு ஏதாவது செய்தால்தான் பயனுண்டு.

ஏவிவி என்ற ஆசிரமம் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். நான்கு மாடி கட்டிடங்களைக் கட்டி அதில் கன்னி கழியாத பெண்களை நேர்காணல் வைத்து குரு தீக்சித் தேர்வு செய்வார். அதிகாலை இரண்டு மணிக்கு ஆசிரம வேலைகள் கிரமமாக தொடங்கி நடக்கும். ஒரு நாளைக்கு ஐந்து முறை வழிபாடு. இப்படியே அனைத்து நாட்களும் நடக்கும். புதிதாக வந்த இளம்பெண்கள் ஆசிரமத்தில் தூய்மை செய்வது, சமையல் செய்வது, மூத்த துறவிகளுக்கு பணிகளை செய்வது என இயங்க வேண்டும்.

இரவில் குரு குறிப்பிட்ட பெண்களை சேவைக்கு அழைப்பார். அவர்களை அறைக்கு உள்ளே விட்டு வெளியே கதவு பூட்டப்பட்டு விடும். பெண்ணுக்கு விருப்பம் உள்ளதோ இல்லையோ, குருவுக்கு இச்சை உண்டு என்பதால் வல்லுறவு நடக்கும். வல்லுறவு நடந்ததே என பெண் வருத்தப்படக்கூடாது அல்லவா? ஆசிரமத்தில் உடனே பதவியும் வழங்கப்படும். இப்படி ஆந்திரத்தில் பத்தொன்பது வயதில் பிடெக் முடித்த பெண், துறவியாக விரும்பினார். உடனே ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார். புதிய உறுப்பினரை சந்திக்க குரு விரும்பினார். அன்று இரவே அவர் குருவால் வல்லுறவு செய்யப்பட்டார். உடனே அந்தப்பெண், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை, அங்குள்ள பெண்களை கும்பலாக சுற்றிவளைத்து தடுத்தனர். அடுத்த பதினாறு ஆண்டுகள் வேறொரு ஏவிவி ஆசிரம கிளையில் பணியாற்றி, 2021ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பித்து வந்திருக்கிறார்.

தப்பி வெளியே வர பதினாறு ஆண்டுகள் தேவையா? அந்த பெண்ணுக்கு மனதில் துணிவு பிறக்க அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பிறரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கையில் கொடுக்கப்பட தனக்கு நேர்ந்த அநீதியைக் கூட அந்த பரிதாபமான முட்டாள் ஜீவன் மறந்து தொலைத்துவிட்டது. ஆசிரமங்கள் பலவும் உளவியல் உத்திகளை அடிப்படையாக கொண்டே நடத்தப்படுகின்றன. இல்லையெனில் டெல்லி ஏவிவி ஆசிரமம், இருநூறு பெண்களை கொண்டு நடந்து வந்திருக்குமா என்ன?

இளம்வயதிலேயே மூடநம்பிக்கையை மனதில் ஊட்டி வளர்க்கப்படுகிற பெண்கள் அநீதிக்கு எதிர்வினை புரிவதில்லை. பழகிப்போகிறார்கள். ஆசிரமத்தில் சேரும் பெண்கள், குருவுக்கு இச்சையை பூர்த்தி செய்பவர்களாக மாறுகிறார்கள். பரிசாக பெண்களை அதிகாரம் செய்யும் பணி வழங்கப்படுகிறது. எனவே, பெண்கள், கேள்விகளைக் கேட்பதில்லை. அப்படி கேள்வி கேட்பவர்களை போட்டி மெயில் என தனி திட்டத்தின் வழியாக மனதிலுள்ள உணர்ச்சிகளை, கேள்விகளை கண்டுபிடித்து தனியாக அடைத்து வைத்து சித்திரவதை செய்வார்கள். இவர்களுடன் யாரும் பேசுவதில்லை. ஆசிரமத்தில் உள்ளவர்கள் கடிதங்களை தினசரி எழுதவேண்டும். அவற்றை குரு வாசிப்பார். பெண்களின் மனநிலையை எளிதாக அறிந்துகொள்வார்.

பெண்கள், குரு தீக்சித்தின் உரைகளை கேட்டு தன் வசமிழந்து துறவியாகலாம் என ஆசிரமத்திற்கு வருகிறார்கள். அவர்களை குரு நேரடியாக நேர்காணல் செய்து திருமணமாகாதவரா, கன்னித்திரை கிழியாதவரா என பார்த்து தேர்ந்தெடுக்கிறார். பிறகு  அந்த பெண்களை தனக்கு சேவை செய்ய நியமித்து வல்லுறவு செய்கிறார். பெண்களின் மனதிலுள்ள தடைகளை உடைக்க இசை, வழிபாட்டு பாடல்கள், பேச்சுகள் என நிறைய வழிமுறைகளை ஆசிரமத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஆசிரமம் எப்படி அமைந்திருக்கும்? காடுகளை அழித்து யானைகளைக் கொன்று கோவையில் அமைக்கப்பட்ட ஈஷா போல இருக்குமா? ரிசார்டுகளைப் போல கட்டியிருப்பார்களா என கேள்விகள் மனதில் எழலாம். அப்படியெல்லாம் இல்லை. சிறை. அதுதான் சரியான சொல். ஜன்னலில் கூட கருப்பு ஸ்டிக்கரை ஒட்டியிருப்பார்கள். பெண்கள் மணம் செய்யக்கூடாது. அவர்கள் வெளியில் இருப்போரிடம் பேசக்கூடாது. துறவிகள் வெளியே சென்றால் கூட அவர்களுக்கு பாதுகாவலர்கள் துணையாக வருவார்கள். லாபியைத் தாண்டி யாரும் உள்ளே வரமுடியாது. இப்படியான கெடுபிடி பெண் துறவிகளுக்கு உண்டு. அவர்களுக்கு எதற்கு இந்தளவு பாதுகாப்பு? நடந்த உண்மைகளை நீங்கள் வெளியே சொல்லிவிட்டால் என்ன செய்வது? ஆசிரம சுவர்களில் குரு தீக்சித்தின் பல்வேறு மேற்கோள்கள், உரைகள், விதிகள், மூளையை நெரித்துக்கொள்ளும் ஆன்மிக வாசகங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

பிரஜாபீட பிரம்மகுமாரிகள் என அழைத்துக்கொள்ளும் ஏவிவி ஆசிரமம், 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீரேந்திர தேவ் தீக்சித் என்ற காம கொடூர குரு, இதை தொடக்கத்தில் தனது வீட்டில் தொடங்கினார். பிரம்மகுமாரிகள் அமைப்பின் அட்வான்ஸ்டு வெர்சன். பிரம்ம குமாரி இயக்க தலைவர் லேக்ராஜ் பிரம்மாவிடம் பேசுவதற்கான மனித ஊடகம்,குரு தீக்சித்தான் பிறகு, பலரிடமும் நிதியுதவிகள் வாங்கி, பற்பல அரசியல் பல்டிகள் அடித்து நாடெங்கும் கிளைகளை அமைத்தார். சிபிஐ விசாரணை செய்து இரண்டு ஆசிரம கிளைகளி்ல இருந்து நாற்பத்தொரு பெண்களை மீட்டது. ஆசிரம தத்துவம் என்பது உலகம் அழிந்துவிடும் என்பதே. ஆண்டுகளை மாற்றி மாற்றி சொல்லி இந்தியா வளர்ந்துவிடும் என மதவாத கட்சியைச் சேர்ந்த ஆட்சித்தலைவர் எப்படி, அட்ரா பல்டி என்கிறாரே அதே கதைதான். இங்கு சற்று வேறுவிதமாக அமைக்கப்படுகிறது. இப்போது வழக்குரைஞர் கையகப்படுத்திய ஆசிரமத்தில் உலகம் 2036இல் அழிந்துவிடும் என இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களை அவர் எப்போதும் போல வலைபோட்டு இழுத்து சேர்த்து வருகிறார். வல்லுறவை பெண் துறவிகளுக்கு இயல்பானதாக மாற்றிய குரு வீரேந்திர தேவ் தீக்சித், ஒரு பார்ப்பனர். வலைத்தளத்தில் தன்னை வறிய பார்ப்பனர் என்று கூறிக்கொள்கிறார்.

2018ஆம்ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி பெண்கள் கமிஷனின் முன்னாள் தலைவர் சுவாதி மாலிவால் ஆகியோர் தலையிட்டதால், ஏவிவி ஆசிரம விவகாரம் பேசப்படத்தொடங்கியது. புகார்கள், நெருக்கடி அடிப்படையில் சிபிஐ விசாரணையை கையில் எடுத்தபிறகுதான் அங்கு பெண் துறவிகளுக்கு நடந்த அநீதிகள் வெளியே தெரிய வந்தன. சட்டப்போராட்டம் சாதாரணமாக நடக்கவில்லை. சிபிஐ, பெண் துறவிகளை மீட்டபோது, ஆசிரமத்தினர் அவர்களை தாக்குவதற்கு முயன்றனர். உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பெண் துறவிகள் அப்படியான பைத்தியக்காரத்தனத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தனர். தங்கள் மீது நடத்தப்பட்ட அநீதியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதை ஏற்றுக்கொண்டிருந்தனர். மீட்கப்பட்ட பெண் துறவிகள். தொடக்கத்தில் குரு தீக்சித் மீது புகார் கொடுத்தனர். ஆனால் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரை மறுத்தனர். இப்படியான முரட்டு முட்டாள்தனங்களை கடந்து சில புத்திசாலித்தனமான பெண் போராளிகளால் மட்டுமே நிறையப் பெண்கள் காப்பாற்றப்பட்டனர். தப்பி ஓடிய குரு தீக்சித்தை பிடிக்க பிடியாணை பிறக்கப்பட்டது. ஆனால் ஆள் இன்னும் சிக்கவில்லை.

குரு தீக்சித் காவல்துறையில் இருந்து தப்பித்து ஓடி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. ஆசிரம வழக்கை எடுத்து நடத்திய அமோல் கோகனே, ஆசிரமம் நடத்துவதில் உள்ள பலாபலன்களை அடையாளம் கொண்டதால் அவர்தான் இப்போது புதிய ஓனர். இளம்பெண்களை ஈர்க்க நவீனமான வாட்ஸ்அப் சாட்களை செய்து வருகிறார். இம்முறையில்தான் கோவையில் உள்ள இளம்பெண்ணை நகையுடன் வரச்செய்து துறவியாக்கினார். பெண்கள், நம்மை நரகத்திற்கு அழைத்து செல்லும் வாசல் என பேசி இணையத்தில் பிரபலமான நபர் இவர்தான். 2005ஆம் ஆண்டு ஏவிவி ஆசிரமத்தில் இணைந்தவர் அமோல்.

இதுபோன்ற மூளை அழுகிப்போன ஆட்களிடம் பெண்கள் எப்படி வந்து சேருகிறார்கள். இதற்கென நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் நல்ல காசை வாங்கிக்கொண்டு அவர்களுக்கென ஒரு தொடரை எழுத வாய்ப்பு தருகின்றன. இதில் பயன்கள் இதழ்களுக்கும் உண்டு, அதில் எழுதும் சாமியாருக்கும் உண்டு. பரஸ்பர சகாயத்தை அனுபவிக்க வேண்டியதுதானே? கன்னி கழியாத இளம்பெண்களை ஆசிரமத்தில் சேர்ப்பதன் வழியாக பாலுறவு, பணம், ஆசிரம வேலை என அனைத்தையும் செய்துகொள்ள முடிகிறது. பெண்களை மூளைச்சலவை செய்தால், கிறுக்குத்தனமாக பேசுவதில் ஆண்களையும் மிஞ்சக்கூடியவர்கள் என்பதை மதவாத கட்சியின் பெண் எம்பிகள் பேசுவதைக் கேட்டாலே அறிந்துகொள்ளலாம். வாக்களித்த மக்கள் தங்களை செருப்பால் அடித்துக்கொண்டால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் நடக்கலாம். எதிர்ப்பு என்பது இதயத்தின் நலனை ஒருவர் உறுதி செய்துகொள்வது.. என கவிஞர் மஹ்மூத் தார்விஷ் தனது கவிதையில் கூறியிருக்கிறார். வேறு வழியில்லை. நடக்கும் மோசமான விஷயங்களை தடுக்க முடியவில்லை. கவிதை படித்து மனதை ஆற்றுபடுத்துவோம்.


அவுட்லுக் இதழில் அவந்திகா மேத்தா எழுதிய கட்டுரையை லேசுபாசாக தழுவியது.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்