அதீதசுயமோக வெறியால் துண்டாடப்படும் குடியரசு!

 

 


 

 


வினோதரச மஞ்சரி

ஐந்தாம் வரிசை இருக்கையும், அதீத சுயமோகமும்

கூலிப்படை ஊடகங்களில் வேலை செய்து பிறகு, அவை தொழிலதிபர்களின் கைகளுக்கு போனபிறகு வெளியே வந்த பத்திரிகையாளர்களில் பர்கா தத், ரவீஷ் குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். ரவீஷ் குமார், யூட்யூபில் தனி சேனல் ஒன்றைத் தொடங்கி இந்தியில் அரசியல் விவகாரங்களை அவருடைய அனுபவங்கள் வழியாக அலசி பேசிக்கொண்டிருக்கிறார். பர்காதத் மோஜோ எனும் யூட்யூப் சேனலைத்தொடங்கி நடத்தி வருகிறார். நேர்மையான, பாகுபாடற்ற செய்திகளை விரும்புவர்கள் எவரும் இந்த சேனல்களை அணுகி செய்திகளை புரிந்துகொள்ள முயலலாம்.

ரவீஷ்குமார் யூட்யூப் சேனலில் குடியரசு விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கும் பின்னால் ஐந்தாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது பற்றி பேசியிருந்தார். அதில் முக்கியமானது, தற்போதைய பிராமண இந்து மதவாத கட்சியின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமான வீடியோக்கள், அதில் நாம் அறிந்துகொள்ளும் செய்தி. ஒருவர் அதிகாரத்திற்கு வந்து அதை வைத்து என்ன செய்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்பதே முக்கியம். இன்று எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல், அடிப்படையில் கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து கொண்டவர். சட்டப்படியான அணுகுமுறையில் இப்படி கூறலாம்.

ராகுல்காந்தி, தன்னைப் பற்றி அணியும் உடைகளைப் பற்றிய விமர்சனங்களை பெரிதுபடுத்துவதில்லை. மக்களை சந்திப்பதில், பேசுவதில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.பிராமண இந்து பாசிச கட்சியின் காசை வாங்கி பையில் போட்டுக்கொண்ட கைக்கூலி ஊடகங்கள் தொடர்ச்சியாக ராகுல்காந்தியை அவதூறும் இழிவும் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி, டிவி சேனல்களை நம்பவில்லை. இணையத்திற்கு நகர்ந்துவிட்டது. கட்சி தொடர்பான செய்திகளை யூட்யூப் உள்ளிட்ட ஊடகங்களில் அவர்களே பதிவு செய்து வருகிறார்கள். தனியாக டிவி சேனல் எதையும் அவர்களை நம்பி உரையாடுவதில்லை.

சிறுபான்மை பிராமண இந்து பாசிச அரசின் ஆட்சித்தலைவர், உள்ள வீடியோக்களை பார்த்தாலே தெரியும். அவர் தன்னை புகைப்படத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டவர் என. எந்த இடத்திலும் துறைசார்ந்த அமைச்சர்களை பார்க்க முடியாது. கேமராமேன் மட்டுமே கூடவே வருவார். அனைத்து விஷயங்களையும் தனியாக அவரே செய்தது போல காட்டிக்கொள்வார். 78ஆவது சுதந்திர தின விழாவுக்கு முழுக்க தயாராகி தலைப்பாகை எல்லாம் வைத்துக்கொண்டு ராணுவ மிடுக்கில் செங்கோட்டைக்கு வந்தார். தனியாக நடந்து வந்தவரை, அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். பின்னே பதவி தப்பிக்க வேண்டுமே? தன் பெயரையே அச்சிட்டு உடையாக அணிந்த சுயமோக மனிதனுக்கு இதெல்லாம்  ஒரு விஷயமா?

எதிர்க்கட்சி தலைவர் ஐந்தாவது வரிசைக்கு நகர்வது இருக்கட்டும். நாடு தொடர்ந்து பின்னே தள்ளப்பட்டுக்கொண்டே வருவது நல்ல விஷயமல்ல. பங்குச்சந்தை முதலீடுகளை மட்டுமே வைத்து நாட்டை பெரிய பொருளாதாரம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனம். அந்த முதலீடுகள் நொடியில் காணாமல் போகும். அவை நிலையானவை அல்ல. இன்று பாசிச கட்சி அல்லாத அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒன்றிய அரசின் அமைப்புகள் மூலம் ஆளுநர்கள் மூலம் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் சிறை சென்றனர். இந்த ஐந்தா்ண்டு காலத்தில் இன்னும் நிறைய எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சிறைக்குள் அடைக்கப்படுவார்கள். இப்படியான காட்சி நாட்டிற்கு நல்லதல்ல.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஒருவரது தனிபட்ட விஷயம், ஆனால்  அரசு எந்திரம் முழுமையும் அதேபோல மனநிலையில் இருந்தால், மக்கள் பிரச்னைகள் தீராது. நிர்வாக செயலின்மையை எத்தனை நாட்கள் இந்து முஸ்லீம் பிரிவினையைத் தூண்டிவிட்டு மறைக்க முடியும்? அமைச்சரவை சகாக்களின் பயத்தை விளக்க ஒரு வீடியோ போதுமானது. ஒரு விழா. அதில் பிரதமர், ராணுவ அமைச்சர், கட்சி தலைவர் ஆகியோருக்கு பெரிய மலர்மாலை அணிவிக்கிறார்கள். பெரிய மாலைதானே அதில் நமக்கும் இடமுண்டு என ராணுவ அமைச்சர் நினைத்து தனது தலையை உள்ளே உழைக்கிறார். பிறகு, மற்றவர்கள் அப்படி செய்யாமல் இருப்பதைப் பார்த்து, தலையை வெளியே எடுத்துக்கொண்டு மாலையை பிரதமருக்கு மட்டுமே தூக்கிப்பிடிக்கிறார். பரிதாபமான காட்சி அல்லவா? அதீத சுயமோகம் தனிப்பட்ட மனிதனை மட்டுமல்ல, நாட்டையே அழிக்கக்கூடியது. அதை அவருக்கு வாக்களித்த மக்களுமே காண்பார்கள்.

பிராமண இந்து பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் பற்றி யாராவது கேள்வி கேட்டால் அவர்களை தனிப்பட்ட ரீதியில் அவதூறு செய்ய முயலும். சுயநலனுக்கான எந்த எல்லைக்கும் செல்லும் அமைப்புதான் காந்தியை படுகொலை செய்தது. பிறகு, பாபர் மசூதியை இடித்தது. இந்த இரண்டு சம்பவங்களுமே இந்தியாவை பெரும் களங்கத்திற்குள், பின்னடைவில் தள்ளியது.  அந்த தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக, மேற்படி அதே சூத்திரத்தை எதிராளிகளிடம் கடைபிடிக்கிறது. மக்கள் பிரச்னைகள் பற்றிய கேள்விகளை ஒருவர் கேட்டால், என்ன செய்வது என சமாளிக்கமுடியாமல் மக்களவையில் தரம் தாழ்ந்த பேச்சுகளை பேசசெய்கிறார்கள். இப்படித்தான் ராகுல்காந்தியை சாதி தெரியாதவர் என அனுராக் என்பவர் இழிவாக கூறினார். யாரெல்லாம் பாசிச அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை தொடங்கி உள்ளூர் காவல்துறை வரை நடவடிக்கை பாயும்.   

ஐந்தாவது வரிசை இருக்கை மட்டுமல்ல நாடு அனைத்து விஷயங்களிலும் ஆபத்தான திசை நோக்கி பயணித்து வருகிறது. பயமும், வெறுப்பும் பரவி ஒருவருக்கு உதவி செய்யும் நிலை வந்தால் கூட அவன் சாதி என்ன, குலம் என்ன, நம்முடைய மதம்தானா என்று கேட்டுக்கொண்டிருந்தால் அந்த நாடு விளங்க வாய்ப்புண்டா?

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான ராகுல்காந்தி, தன்னை சரியான திசையில் வளர்த்தெடுத்துக்கொண்டு மக்களுடைய ஆதரவை வென்றால் இந்தியாவிற்கு எதிர்காலம் சிறப்பாக அமையக்கூடும். பிரதமராக ஒருநாள் இருக்கையில் அமர்ந்தாலும், உடைந்து சீர்குலைந்து போல அனைத்து அரசமைப்புகளையும் கண்டறிந்து சரிசெய்வது பெரிய பணியாகவே இருக்கும். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை அரசமைப்பில் இருந்து முற்றாக நீக்க இருபது அல்லது முப்பது ஆண்டுகள் ஆகும் என பத்திரிகையாளர் விஜய்சங்கர் கூறினார். உண்மையில் வரலாறு மக்களை உருவாக்குவதில்லை. மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்