நான்கு நிமிடத்தில் செய்திகளை கதைபோல எளிமையாக விளக்கும் பேப்பர்கிளிப்!

 

 

 



 


நாளிதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள் என நிறைய வாசிப்போம். அதிலுள்ள செய்திகளை முக்கியம் என்றால் குறித்துவைப்போம். அல்லது அதை எழுதும் பழக்கம் இருப்பவர்கள் உடனே கட்டுரையாக எழுதி விடுவார்கள். இப்படியான செய்திகளை பிறருக்கு கதைபோல சொல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. நவீன காலத்தில் இப்படியான பாணி செய்திகள், கட்டுரைகள் பலருக்கும் தேவைப்படுகிறது.
பேப்பர்கிளிப் தளத்தில் நாளிதழ், டிவி சேனல், இணைய கட்டுரைகள் என பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களை சேகரித்து அதை கதையாக மாற்றுகிறார்கள். நான்கு நிமிடங்கள் போதும். அழகான ஒரு ஊக்கமூட்டும் கட்டுரையைப் படித்துவிடலாம். உதாரணத்திற்கு காந்தியால் தாக்கம் பெற்ற டெக் ஆளுமை ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தை எலக்ட்ரானிக்ஸ் சார்ந்து திசை திருப்பிய தலைவர்களில் ஒருவர், ஸ்டீவ் ஜாப்ஸ். அவர், தனது இளமைக்காலமான பத்தொன்பது வயதில் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்திருக்கிறார். பிறகு, ஆப்பிளில் இருந்து பணி விலக்கப்பட்டபோதும், தேறுதலுக்காக இந்தியாவை நாடியிருக்கிறார். அவர் இந்தியாவில் இருந்து காந்தியின் இயல்பைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார. காந்தியின் பேச்சு, செயல், ஸ்டீவ் ஜாப்ஸை பெரிதும் மாற்றியுள்ளது. அவரது செவ்வக வடிவ கண்ணாடியைக் கூட காந்தியின் அடையாளமாக உள்ள வட்டவடிவத்தில் மாற்றிக்கொண்டுள்ளார். இப்படியாக டைம் இதழின் கட்டுரையை அழகாக கதை சொல்வது போல மாற்றியிருக்கிறார்கள்.

தி பேப்பர் கிளிப்.இன் என்ற வலைத்தளத்திற்கு சென்றால் கட்டுரைகளைப் படிக்கலாம். இன்ஸ்டா, எக்ஸ் தளத்தில் இருக்கிறீர்களா? அங்கும் அவர்களது கட்டுரைகளை வாசிக்கலாம். அதிக நேரம் கிடையாது. நான்கே நிமிடங்கள்தான். அதற்குள் நீங்கள் ஆக்கப்பூர்வமான வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ளலாம். பல்வேறு துறைகளைச் சார்ந்த தகவல்களை கதைபோல உருவாக்கி வாசிக்க தருபவர்கள் அனைவருமே இளைஞர்கள். பிழைக்க தனியாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கதை சொல்வது பிடிக்கும் என்பதற்காக பேப்பர்கிளிப் வலைத்தளம் பிறந்திருக்கிறது. இதை தொடங்கியவர்கள் வங்காளிகள். மேற்கு வங்கம்தான் பேப்பர்கிளிப்பின் தாயகம். எனவே, அதன் தாக்கம் கட்டுரைகளில் உள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள், ஆளுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதை தவறு என்று கூறமுடியாது அல்லவா?

செய்திகளைப் படித்து ஆய்வு செய்து கதையாக எளிமையாக வடிவமைக்கவென இளைஞர்கள் குழு உள்ளது. இப்படியான செய்திகளை அவர்கள் தேடி எடுத்து எழுதினாலும், நன்றி என வலைத்தளங்களைக் குறிப்பிட்டாலும் கூட சர்ச்சைகள் தேடி வருகின்றன. அவர்களது கட்டுரைகளைத் திருடிவிட்டதாக மூலக்கட்டுரைகளை வெளியிட்ட நிறுவனங்கள் கூறியுள்ளன. அறிவுசார்ந்த காப்புரிமை பிரச்னை வருவதால், உடனே தீர்வு காண்பது கடினம். செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வமாக இருங்கள் என்பதுதான் பேப்பர்கிளிப்பின் கேப்ஷன். அதற்கு ஏற்ப, முக்கியமான ஆளுமைகளின் வாழ்க்கையில் உள்ள சுவாரசியமான தகவல்களை எடுத்து கட்டுரையாக்குகிறார்கள். இதில் பாட்காஸ்ட்டும் உள்ளது. உங்களுக்கு எது வசதியோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  

வலதுசாரி மதவாத அரசின் கூலிப்படையாக மைய ஊடகங்கள் மாறிவிட்ட நிலையில், செய்திகளை அறிந்துகொள்ள, சமூக வலைத்தளங்கள், மக்களின் நன்கொடையை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஊடகங்களை நாட வேண்டியதுள்ளது. அழிவுசார்ந்த, பழிவாங்கும், கலவரம், வன்முறை, வல்லுறவு என செய்திகளைப் படிக்கும்போதே மனதில் தளர்ச்சி உண்டாகிறது. என்ன மாதிரியான நோய்வாய்ப்பட்ட சமூகம் இது என விரக்தி பிறக்கிறது. இப்படியான சூழலில் பேப்பர்கிளிப்பில் உள்ள எளிமையான கட்டுரைகள் சற்று ஆசுவாசம் தருகின்றன. நேரம் இருந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

thepaperclip.in

நன்றி
பிரன்ட்லைன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்