சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம்

 

 

 

 

 




 

சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம்

சீனாவுக்கு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. குறிப்பாக, ஷின்ஜியாங் என்ற பகுதியில் பெருமளவு உய்குர் இன முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தாலிபன், பிற இஸ்லாமிய பிரிவினைக் குழுக்களோடு தொடர்பு இருக்கிறது என சீன அரசு சந்தேகப்பட்டது. தீவிரவாதம், பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றை அழிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதைத் தொடங்கியது. இதில் ரஷ்யா, கசக்கஸ்தான், உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான் என பல நாடுகள் சேர்க்கப்பட்டன. தீவிரவாத எதிர்ப்பு முகமைக்கான தலைமை அலுவலகம் சீனாவில் அமைக்கப்பட்டது. பிராந்திய அலுவலகங்கள் உறுப்பினர் நாடுகளில் அமைந்தன.

தொடக்க காலத்தில் இந்தியாவை இதில் இணைத்துக்கொள்ள சீனா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் ரஷ்யாவின் உறவைப் பெற்று மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கிக்கொள்ள நினைத்தது. ரஷ்யா, சீனாவின் அமைப்பில் இந்தியாவை உள்ளே கொண்டு வர நினைத்தது. அன்று பாகிஸ்தான், இரான், மங்கோலியா இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவுடன் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டின. நவீன காலத்திற்கு வந்தால் மேலே குறிப்பிட்ட நாடுகள் பலவும் சீனாவிடம் கடன் பெற்று அடிப்படை கட்டமைப்புகளை செய்து வருகின்றன. வணிக உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியா நேரடியாக சீனாவை வசைபாடினாலும் மறைமுகமாக வணிகத்தை செய்துகொண்டுதான் இருக்கிறது. சீனா, இன்று ஆசியாவின் தவிர்க்கமுடியாத சக்தி. ஒப்புக்கொள்ள மனமில்லை என்றாலும் அதுவே உண்மை.

செப்டம்பர் 11, 2011ஆம் ஆண்டு, இஸ்லாம் மதம் மீது உலகத்தின் பார்வையே மாறியது. சீனாவைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் அதன் வணிகத்தை உலகம் முழுக்க கொண்டு சென்றார்கள். சீன இந்திய வணிக உறவு வலுவாகவும் முஸ்லீம் வணிகர்களே முக்கியக் காரணம். அதை மறுக்கமுடியாது. வரலாற்றுரீதியாக ஆதாரம் தேடினால் பத்தாம் நூற்றாண்டு தொடங்கி சீனாவில் முஸ்லீம்கள் வணிகம் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி மானுடவியலாளர் ட்ரூ கிளாட்னி தன்னுடைய முஸ்லீம் சைனீஸ் நூலில் விளக்கி எழுதியுள்ளார்.  1949ஆம் ஆண்டு மக்கள் சீன குடியரசு உருவானபிறகு, சீன பொதுவுடைமைக் கட்சி, இஸ்லாம் மதத்தை அழுத்த தொடங்கியது. கலாசார புரட்சி நடைபெற்றபோது வெய்சூவில் அழகான மசூதி என்று புகழப்பட்ட வழிபாட்டுத் தலத்தை சீன அரசு இடித்து தள்ளியது. அந்த காலம்தொட்டே முஸ்லீம்கள் அரசியல், பொருளாதார ரீதியாக கலாசார ரீதியாக தங்கள் பிரதிநிதித்துவம் செய்ய மெனக்கெட்டனர். அரசு, மசூதிகளை சீன கலாசாரப்படி கட்டவேண்டும், முஸ்லீம்களின் பிள்ளைகள் பதினெட்டு வயதுக்கு மேல்தான் அதிகாரப்பூர்வமாக மசூதிக்குள் நுழைந்து தொழ வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அரசு பார்வையில் பார்த்தால், சோசலிச அரசு பிரிவினைவாதம் எழாமல் தடுக்கும் முன்னேற்பாடு முயற்சி என கருதலாம்.

சீனாவில் பத்து முஸ்லீம் இனக்குழுக்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது உய்குர் இனம். அவையன்றி ஹூய், கசாக், டாங்ஜியாங், கைர்ஜிஸ், சலார், தஜிக், உஸ்பெக், பாவோவன், டாடார் ஆகிய இனங்கள் வாழ்ந்துவருகிறார்கள். நிங்ஷியா, கான்சு, ஹெனன், ஷின்ஜியாங், குயிங்காய், யுன்னான், ஹெபாய் ஆகிய பகுதிகளில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இடிஐஎம், சாலாஃபியா ஆகிய அமைப்புகள், முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தன. உலகநாடுகளில் கூட இந்த அமைப்புகள் பிரபலமாக இருந்தன. கண்காணிப்பை அதிகரித்து அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்காணித்து கைது செய்து வருகிறது காவல்துறை.

பலவீனமாக இருந்ததால் இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடிமைப்பட்டு சுயமரியாதை தன்மானத்தை இழந்து வாழும்படி ஆனதை சீனர்கள் என்றும் மறக்கவில்லை. எனவே, தங்களை வலிமையாக்கிக்கொண்டு ஹாங்காங், தைவான், திபெத் ஆகிய நாடுகளை தன்னோடு இணைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது. மக்கள் ராணுவப்படை மூலம் கட்டாயமாக அதை செய்யவும் மக்கள் சீன குடியரசு தயங்காது.  

உதவிய நூல்
making sense of china -reflections on china ans india -jairam ramesh




 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்