சீனஞானி கன்பூசியஸ் நமக்கு கூறும் நல்லற நெறிகள்!
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கன்பூசியஸ்
கலைமணி என்வி
சாந்தி நிலையம்
சீன ஞானி கன்பூசியஸின் அறநெறி, ஆட்சி நிர்வாகம் சார்ந்த கருத்துகளை பெரும்பான்மையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நூல் இது. நூல் முழுக்கவே தனிநபராக, அல்லது அமைப்பாக, அரசாக எப்படி இயங்க வேண்டும், என்னென்ன நெறிகளை பின்பற்றவேண்டும் என்பதை கன்பூசியஸ் உறுதியான வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இதை தமிழில் எழுதியுள்ள எழுத்தாளர் கலைமணி என் வி பாராட்டத்தகுந்தவர். சிறப்பாக கருத்துகளை தமிழில் எழுதியுள்ளார்.
சீனாவில் இன்றும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் என்பது இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, உலகமெங்கும் நிறுவப்பட்டு சீனமொழி, கலாசாரத்தை பிரசாரம் செய்து வருகிறது. அந்த வகையில் சீனா, தனது நாட்டைச் சேர்ந்த ஞானியை வாழும் காலத்தில் கண்டுகொள்ளாமல் அலைகழித்தாலும், பின்னாளில் அடையாளம் கண்டு கௌரவித்துள்ளது. அந்த வகையில் மகிழ்ச்சி.
கன்பூசியஸ் அரசு அதிகாரியின் பிள்ளையாக பிறந்தவர். அவர் பிறந்த சமூகம், ஆணாதிக்க தன்மை கொண்டது. அதாவது, வீட்டுக்கு தலைவர் ஆண். பெண்கள் எத்தனை பேர் இருந்தாலும் திறமை பெற்றிருந்தாலும் அவர்களை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். இப்போதும் நிலைமை மாறவில்லை. அப்படியான சூழலில்தான் கன்பூசியஸ் பிறந்தார். அவர் பிறக்கும்போது, அவரது தந்தைக்கு வயது எழுபது. தாய்க்கு பதினேழு. ஆண் குழந்தைக்கெனவே சிறுமியை கல்யாணம் செய்திருக்கிறார் கன்பூசியசின் அப்பா.
பதினேழு வயதுக்குள்ளாகவே சீன இலக்கிய தத்துவங்களை கற்று, கல்வி கற்க தனி அமைப்பைத் தொடங்கிவிட்டார். ஏறத்தாழ முப்பத்தைந்து வயது வரை பெரிய பிரச்னைகள் எழவில்லை. மணமாகி ஒரு மகன் இரு பெண் பிள்ளைகள் இருந்தனர். பிறகுதான் அரசியல் குழப்பங்கள், போர் ஏற்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தனது மாணவர் கூட்டத்தோடு நாடோடியாக அலைந்தார்.
தனிமனித நெறிகள், கல்வி சிந்தனைகள், அரசநீதி, அறநெறி பற்றி எழுதி மக்களிடையே உரையாற்றி வந்தார். கல்வியில் தன்னை முழுக்க கரைத்துக்கொண்டார். இறக்கும்வரை தன்னை முழுமையான கற்றறிந்தோனாக கருதவே இல்லை. பல்வேறு நாடுகளுக்கு அலைந்து தனது சிந்தனைகளை நீதிகளை கடைபிடிக்கும் அரசனைத் தேடினார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முற்படவில்லை. உதவியவர்களும் கன்பூசியசின் அறிவு தீட்சண்யத்தால் அச்சமுற்று சதி, தந்திரங்களை செய்து அவரை நாட்டை விட்டு விரட்டினர்.
ஓரிடத்தில் மாணவர்களை நிழலில் அமர்த்தி பாடம் சொல்லும்போது, அதை தடுக்க நினைத்தவர்கள் மரங்களை வரிசையாக வெட்டி வீழ்த்திய அனுபவங்களையெல்லாம் என்னவென்று சொல்ல? அந்தளவுக்கு அன்று வெறுப்பும், கோபமும், பகையுணர்வும் கூடி வந்தது. பிளாட்டோவுக்கு அலெக்சாண்டர் கிடைத்தது போல கன்பூசியசுக்கு எந்த மன்னரும் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார். மக்களை நல்வழிப்படுத்தினார்.
போதனைகளைக் கடந்து தொன்மையான சீன அறநெறி நூல்களை பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். அவராற்றிய தொண்டுக்கு சென்றிருக்கவேண்டிய உயரம் அதிகம். ஆனாலும் போர் சூழலில் மாட்டிக்கொண்டு நாடோடியாக அங்கும் இங்கும் அலையும்படி நேர்ந்தது. கல்வி சம்பந்தமாக திறந்த தாராள மனதோடு இருந்திருக்கிறார். சாதி, மதம் என எதையும் பார்க்காமல் திறமையை மட்டுமே முக்கியம் என கருதியவர். பின்னாளில் அவரிடம் கல்வி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தில் அமர்ந்தனர். அந்த நேரத்தில் அரசு அதிகாரியாக உள்ள மாணவரிடம் அவர் அரசு பயன்படுத்தும் சொற்கள், வார்த்தைகளை மாற்றியமைக்கவேண்டும் என்று ஒரு கருத்தை தெரிவிக்கிறார். அக்கருத்து எக்காலத்துக்கும் பொருந்துகிற ஒன்று.
கடவுளை, சாதியை, சமூக கட்டுப்பாட்டை கலாசாரம் என்றெல்லாம் தொன்மை நூல்களில் எழுதி வைத்து இருப்பார்கள். ஆனால் கன்பூசியஸ் கடவுளை வழிபாட்டை நம்பவில்லை. அவர் அதற்கு பதிலாக வானகம் என்ற கருத்தை உருவாக்கினார். இந்த நூலை படிப்பவர்கள் தங்களது வாழ்வை ஒருமுறை சீர்தூக்கி பார்த்துக் கொள்வது நிச்சயம். அந்தளவுக்கு பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார் கன்பூசியஸ்.
சீனாவைப் புரிந்துகொள்ள, அந்த நாட்டின் முக்கிய சான்றோர்களில் ஒருவரான கன்பூசியஸை நீங்கள் கற்றே ஆகவேண்டும்.
எண்பது பக்கம் கொண்ட நூல் தமிழிணைய நூலகத்தில் கிடைக்கிறது. தரவிறக்கி வாசியுங்கள்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக