ஊபா ஒடுக்குமுறை சட்டத்திற்கு அடுத்த பலி - சாய்பாபா

 

 


ஊபா ஒடுக்குமுறை சட்டத்திற்கு அடுத்த பலி - சாய்பாபா

டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவரான சாய்பாபா, மாற்றுத்திறனாளி. சக்கர நாற்காலி மூலமே நடமாடி வந்தார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவருக்கு மனைவி, மகள் உண்டு. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தார். மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ஆதரவான கூட்டங்களில் பங்கேற்றார்.

மனித உரிமைகளை பேசி வந்தவர், ஒன்றிய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கினார். எனவே, சாய்பாபாவை முடக்க ஒன்றிய அரசு போலியான வழக்கு ஒன்றை தொடுத்தது. பல்கலைக்கழக மாணவரை கைது செய்து அவருடைய தகவலின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுக்கும் அவருக்கும் இடையே கடிதங்களை பரிமாற மாணவர் உதவினார் என்பதே குற்றச்சாட்டு. பேராசிரியரோடு கூடவே ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவானது. 2014ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை சாய்பாபா நீதிமன்றம், சிறை என அலைந்தார். ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும் அனுபவித்தார். பிறகு உச்சநீதிமன்றம் மூலம் விடுதலையானார். ஆனால் உடல் முற்றாக சிதைந்துபோயிருந்தது.

ஆறு மாதங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிவந்த நிலையில் மரணத்தை தழுவியிருக்கிறார் சாய்பாபா. ஸ்டேன்சாமிக்கு அடுத்து ஊபா சட்டத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் சாய்பாபாவும் ஒருவர். எந்த ஆதாரங்களும் இல்லாமல் ஒன்றிய அரசின் பழிதீர்க்கும் உணர்ச்சிக்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு, தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

கைகளை அசைக்கமுடியாமல், முறையாக சிறுநீர், மலம் கழிக்க வசதிகள் இல்லாமல் சிறையில் அவதிப்பட்டிருக்கிறார். அங்குள்ள சிறை மருத்துவமனையும் எளிதாக அணுக கூடிய வகையில் இல்லை, மகாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவரை, தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். தேர்தல் வெற்றிக்காக கற்பழிப்பு, கொலை குற்றத்தில் ஈடுபட்ட சாமியாருக்கு கொடுக்கும் பிணை, சாய்பாபாவுக்கு எளிதாக கிடைக்கவே இல்லை. சிறையில் இதயத்தின் செயல்பாடு பாதியாக குறைந்தது. வலது கை செயல்பாடு மழுங்கத் தொடங்கியது. இதுபற்றி சாய்பாபா, சிறை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை.

ஆதிவாசிகளின் உரிமைக்காக போராடிய கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டேன்சாமி சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதுபோல, இதுவும் ஒரு கொலைதான். இதை அரசே தனது அமைப்புகளால் ஒருங்கிணைத்து செய்திருக்கிறது.

டிஓஐ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்