இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!
இசைக்கலைஞர் பார்வதி பால்
கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார்.
முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்?
1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணுவ வீரர்களும் நிறையப்பேர் நின்றிருந்தனர். பெய்ரூட் பல்கலைக்கழகத்தில் எனக்கு பயிற்சி வகுப்புகள் இருந்தன. அங்கு பங்கேற்கவிருந்தவர்கள் அனைவருமே எனது வயதுடையவர்கள்தான். அந்த வகுப்பு மூலம் பங்கேற்பாளர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு பல்லாண்டுகளாக நாங்கள் அவ்வப்போது உரையாடி வந்தோம்.
அந்த மாணவர்களின் கதைகளைக் கேட்டேன். போராட்டம், போர், நம்பிக்கையில்லாத சூழல் என வாழ்ந்து வந்தனர். பால் இசை எப்படி அவர்களது சூழ்நிலைக்கு பொருந்துகிறது என்று கூறினார்கள். என்னை அவர்களில் ஒருவராக ஏற்றதோடு அன்போடு நடத்தினர். பல்கலைக்கழக துறைத்தலைவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவிட்டார். அடுத்த ஆண்டு, அவரது வீடு குண்டுவீச்சில் சிதைந்துபோனது. அந்த விபத்தில் அவரும், எனக்கு பயிற்சி வகுப்பில் உதவிய இரு சிறுமிகளும் கூட இறந்துபோயிருந்தனர்.
பயணத்தின்போது என்னென்ன இசைக்கருவிகளை கொண்டு செல்வீர்கள்?
ஏக்தாரா, துகி, நுபுர் ஆகிய மூன்று இசைக்கருவிகள் எப்போதும் என்னுடன் இருக்கும். கம்பிகள் அறுந்தால் அதை மாற்றுவதற்கான புதிய கம்பிகள் கொண்ட பெட்டி, ஸ்ருதி மீட்டப்பட்ட மற்றொரு ஏக்தாரா, உட்காருவதற்கான மேட் ஆகியவற்றை கொண்டு செல்வேன்.
இசைநிகழ்ச்சிக்கான சுற்றுலாவை எப்போது தொடங்கினீர்கள்?
2000ஆம் ஆண்டில் முதல் இசை சுற்றுப்பயணத்தை தொடங்கினேன். ஆம்ஸ்டர்டாம், பாரிஸ், டொரினோ ஆகிய நகரங்களுக்கு சென்றுள்ளோம். என்னுடன் பால் இசைக்கலைஞர்களும் உடன் வருவார்கள்.அமெரிக்காவில் சர்வதேச இசைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை செய்திருக்கிறோம்.
ஆசிரமப்பணிகளை எப்படி செய்கிறீர்கள்?
மேற்கு வங்கத்தில் என்னுடைய ஆசிரமத்தை தொடங்கியுள்ளேன். அதுதான் என்னுடைய குழந்தை. ஆறுமாதம் ஆசிரம பணிகளை செய்வேன். ஆறுமாதம் வெளியில் இருப்பேன். தொடக்கத்தில் அழைப்பு வந்தால் இசை நிகழ்ச்சிகளை செய்தேன். இசை சுற்றுப்பயணம் என்பது சில சமயங்களில் நீண்டுவிடும். சிலமுறை குறுகிய காலத்திலேயே பயணங்கள் முடிவுக்கு வந்துவிடும். இசை நிகழ்ச்சிகளை முன்னதாகவே திட்டமிட்டு செய்கிறேன். என்னுடைய பயண திட்டங்களை என்னுடைய மாணவர்கள் திட்டமிட்டு உருவாக்கித் தருகிறார்கள். முன்பு இசைவிழாக்களில் பங்கு பெற்றதைப் போல இப்போது செய்வதில்லை. இசைவிழாக்களின் மையப்பொருள் ஏற்புடையதாக இருந்தால் பங்கேற்கிறேன். இப்போது செய்யும் இசை சுற்றுப்பயணம் அனைத்துமே பால் இசை பாரம்பரியம், தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.
பயணத்தில் கற்றுக்கொண்டவை என்னென்ன?
கற்றுக்கொண்டவை அனைத்துமே முடிவற்றவை. ஒரு மனிதராக நான் நிறைய மாறுதல்களை பெற்றிருக்கிறேன். நாட்டை நேசிப்போது, பால் இசையின் பெருமையை உணர்ந்துள்ளேன். மக்கள் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்.எந்த வேறுபாடும் இல்லை. அனைவரும் சமம்தான். கலாசார வேறுபாடுகள் இருக்கலாம். அகவாழ்க்கை என்பது ஒன்றுபோல்தான் உள்ளது.
பயமற்றவளாக, கருத்துகளை நல்லது, கெட்டது, தூய்மை, அசுத்தம் என பாகுபாடு கொள்ளாமல் இருக்க கற்றுள்ளேன். உலகம் இன்று மாறியுள்ளது. வேறுபட்ட கலாசாரம், மொழி என பன்மைத்துவம் கொண்ட வழிகளில் மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இசையைப் பொறுத்தவரையில் இனவெறியை, ஊதியம் கொடுப்பதில் சந்தித்தேன். இந்தியாவைச் சேர்ந்தவள் என்பதால் எனக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களை விட சம்பளம் குறைவாக தரப்பட்டது. ஏன் எனக்கு சம்பளத்தை குறைத்து கொடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, உங்கள் நாட்டில் செலவுகள் குறைவாகத்தானே உள்ளது என்று நிர்வாகத்திடமிருந்து பதில் கூறினார்கள். எனக்கு வயதாகிக்கொண்டு வருவதை உணர்கிறேன். பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள முயன்று வருகிறேன்.
லிவ் மின்ட் - பிபெக் பட்டாச்சாரியா
கருத்துகள்
கருத்துரையிடுக