சமையலால் காதலில் ஒன்று கூடும் பால்ய கால நண்பர்கள்!

 

 







ஃபார்ம் டு போர்க் டு லவ்
ஆங்கிலம்
யூட்யூப்

ஆக்சன் காட்சிகள் இல்லாமல் உரையாடல்களை, முரண்களை மட்டும் கொண்ட ஆங்கில திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரித்து வருகிறார்கள். இவற்றில் சில படங்கள், இலவசமாக இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. அப்படி கிடைத்த படத்தில் ஒன்றுதான் இது.

அலைஸ் மையர்ஸ், கிறிஸ்டியன் என இருவரும் சமையல் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கிறிஸ்டியனின் சொந்த வாழ்க்கையில் பெரும் இழப்பை அவர் சந்திக்க, அலைஸை காதலித்தபோதும் ஏதும் சொல்லாமல் பிரிக்கிறார். அலைஸ் படித்து முடித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு மேற்பார்வையாளராக உள்ள சமையல்காரருடன் காதல் உருவாகிறது. சூப்புகளை தயாரித்து தரும் வேலையை செய்து வருகிறார். அப்படியான சூழலில் அவருக்கு உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக இருக்க வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருகிறது. பிலிப்ஸ் குழுமம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.
அலைஸ் அங்கு செல்கிறாள். மிகப்பெரிய ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குதான் பள்ளிகால தோழன், முன்னாள் காதலனான கிறிஸ்டியனை மீண்டும் சந்திக்கிறார். கிறிஸ்டியன் சமையல் வேலைகளை நிறுத்திவிட்டு அவனது அத்தையின் நிறுவன வேலைகளை செய்துகொண்டு இருக்கிறான். பிலிப்ஸ் குழுமத்தின் வாரிசாக போகிறவன் அவனே. அத்தைக்காக வேலைகளை செய்தாலும் கூட அவனுக்கு சிறிய உணவகம் ஒன்றை நடத்துவதே லட்சியம். இருவரும் பல்லாண்டுகளுக்கு பிறகு சந்தித்தாலும் காதல் மனதில் அப்படியே இருக்கிறது.

இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை.

நாம அர்ப்பணிப்பா செஞ்சுக்கிட்டிருக்கிற வேலை எப்போதுமே சலிப்படைய வைக்காது.

நீங்க சந்திச்ச ஆண்கள் தவறானவங்களா இருக்கலாம். நீங்க செஞ்சுக்கிட்டிருக்கிற வேலை சரியானதுதான்

என பிலிப்ஸ், ரபேல் பேசுகிற வசனங்கள் உயிர்ப்பானவை. அதுவே அவர்களை ஒன்றாக இணைக்கிறது. ரபேல் பாத்திரம் போட்டிக்கு வருகிற சமையல்காரர்களில் ஒருவர்தான். போட்டியில் அவர் காட்டுகிற அர்ப்பணிப்பும், அக்கறையும் சாதாரணமானது அல்ல. இத்தனைக்கும் அவர் பாரிசில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிற சமையல் கலைஞர். இனிப்பு ஒன்றை செய்ய சீஸ் கடைகளை தேடி அலைவதும், அதைத் தேர்ந்தெடுக்க மெனக்கெடுவதும் அவரது பாத்திரத்தை வேறு உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

ஒரு இடத்தில் அவர் உணர்ச்சிகரமாக, பிலிப்சிடம் பேசுவார். நான் பெரும்பாலான நேரத்தை சமையல் அறையில்தான் கழித்திருக்கிறேன். என்னோடு கத்தி கூடவே இருக்கும் என்பார். அதேசமயம், தனது உணவுகளை இன்னொருவர் செய்யும் உணவு வகைகள் சுவையாக இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டவராகவே இருக்கிறார். அதைத்தான் அலைஸ் செய்யும் உணவு வகையை ருசித்துப் பார்க்கும்போது நாம் பார்க்கிறோம்.

அலைசின் கருப்பின காதலருக்கு தான் என்ற அகங்காரம் இருக்கும். காதலில் இருவரும் கரைந்துபோவதுதானே அழகு. ஒருவர் கரைந்துபோக இன்னொருவர் அப்படியே உயரத்தில் வீற்றிருக்க... அது காதலாகாது இல்லையா? இறுதியாக அலைஸ் கிறிஸ்டியனின் உணவகத்தில் இணைகிறார். இருவரும் முத்தமிட்டுக்கொண்டே உணவுகளை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்கள். அவர்களோடு அத்தை பிலிப்சும், அவரின் காதலர் சமையல் கலைஞர் ரபேலும் இணைகிறார். படம் இனிதே நிறைவடைகிறது.

சமவெளியில் கிறிஸ்டியனோடு, அலைஸ் உரையாடும் காட்சி. திறக்கப்படாத உணவகத்தில் இருவரும் சேர்ந்து உணவு தயாரித்து வைத்து உண்பது, பாரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்து பிரியத்தோடு உரையாடுவது என நிறைய காட்சிகள் சிறப்பாக உள்ளன. கிறிஸ்டியன் பிறரது மனம்நோக கூடாது என நினைக்கிற அகவயமான ஆள். அலைஸ் வெளிப்படையாக பேசுகிற ஆள். இருவரும் மெல்ல ஒரு புள்ளியில் இணைந்து எங்கே விட்டார்களோ அங்கேயிருந்து காதலை தொடருகிறார்கள்.

காதலோடு உணவைத் தயாரிக்கிறார்கள். அப்போதுதானே சாப்பிடுபவர்களுக்கு அது இனிமையாக இருக்கும்.

கோமாளிமேடை குழு 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்