சேரியோ, அக்கிரஹாரமோ மனதில் ஈரம் இருப்பது முக்கியம்! ஆண்டான் அடிமை - இயக்கம் மணிவண்ணன்

 

 





ஆண்டான் அடிமை
சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உண்ணி
இயக்கம் மணிவண்ணன்

அக்ரஹாரத்தில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரில் வளர்க்கப்படும் ஒருவர் தனது பெற்றோரைத் தேட முயல்கிறார். இதன் விளைவாக அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை.

இயக்குநர் மணிவண்ணன் இடதுசாரி கருத்தியல் கொண்டவர். ஆண்டான் அடிமை வணிகப்படம் என்றாலும் படத்தில் பேசி இருக்கிற அரசியல் நிறையப்பேருக்கு பிடித்தமானது அல்ல. அவரின் ஆஸ்தான நடிகர் சத்யராஜ், படத்தின் கருத்தை சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் குத்துப்பாட்டு, ஆபாசம் எல்லாம் கிடையாது. எடுத்துக்கொண்ட மையப்பொருளை தீவிரமாக பேசியிருக்கிறார்கள். புத்தியிருப்பவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் நிறைய யோசிக்க வைக்கும்.

சத்யராஜ் படத்தில் இரு வேடங்கள் செய்கிறார். ஒன்று சேரியில் அடிமாடுகளை லாரியில் கொண்டு வந்து சேர்க்கும் லாரி டிரைவர் சிவராமன். இன்னொன்று, சுப்பிரமணிய ஐயரின் மகன், சங்கரன். இரு பாத்திரங்களுமே பல்வேறு உளவியல் சிக்கல்களை, சங்கடங்களை அந்தந்த சாதி அளவில் சந்திக்கிறது.

சேரியில் வாழும்போது சத்யராஜ், அடிமாட்டு லாரியை ஓட்டும் டிரைவர் வேலை பார்க்கிறார். அவரது அப்பா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். தலைவாசல் விஜய் சொல்வது போல மாதாரி. சக்கிலியர் பிரிவு. சத்யராஜை வீராச்சாமி என்பவர் எடுத்து வளர்க்கிறார். வளர்ப்பு பிள்ளை என்றாலும் அவரை சாதி தெரியாதவன், அனாதை என்றே ஊர் கூறிக்கொண்டிருக்கிறது. வளர்ப்பு தந்தை என்றாலும் சத்யராஜ், அவரது குடும்பத்தில் உள்ள தங்கையை தன்னுடைய சொந்த தங்கை போலவே பாவிக்கிறார். சக்கிலியர்களை வாக்குக்காக ஏமாற்றி ஏய்க்கும் சந்திரசேகர் குடும்பம், சத்யராஜின் புத்திசாலித்தனத்தை பார்த்து பயந்து, அவனை அனாதை, சாதி தெரியாதவன் என்றே கூறிக்கொண்டிருக்கிறார். சந்திரசேகர் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர். அவருக்கு இரு பையன்கள், அதில் மூத்தவராக ரஞ்சித் நடித்திருக்கிறார். இவருக்கு சத்யராஜின் சாதி மீது இளக்காரம் கிடையாது. ஏளனம் செய்வதில்லை. தனது ஆத்ம நண்பனாக நினைக்கிறார். அதேசமயம் தந்தையை எதிர்த்துப் பேசும் அளவுக்கு தைரியம் இல்லாதவர். இவரின் தம்பி, சாதி வெறியர். இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் சத்யராஜ், ரஞ்சித் பக்கம் நிற்கிறார்.

படத்தில் தலைவாசல் விஜய்க்கு மிலிட்டிரிக்காரன் என்ற பெயரிலுள்ள பாத்திரம். சக்கிலியர் என்பதால் ஏற்பட்ட இழிவை தாங்க முடியாமல் குடித்துக்கொண்டே தனது வாழ்வை அழித்துக்கொள்கிறார். படத்தில் முக்கியமான காட்சி, வீராச்சாமி, தனது மகன் சிவராமனுக்காக தொடக்கப்பள்ளி ஆசிரியையான சுவலட்சுமியை பெண் கேட்டு வருவது. இந்த இடத்தில், சிவராமனின் சாதி என்ன, மதம் என்ன தெரிந்தால்தான் தனது பெண்ணை கல்யாணம் செய்துகொடுப்பேன் என அவமானப்படுத்தி பேசுகிறார். அந்த காட்சியை பார்க்கும்போது, அவர் சிவராமனை அவமானப்படுத்த முயல்வதை விட தன்னுடைய மனக்குமுறலை மக்களிடம் வெளிப்படுத்துவதே தெரிகிறது. இடைசாதிக்காரரான சந்திரசேகர், சிவராமனை ஊருக்குள் வரக்கூடாது என அவமானப்படுத்தும்போது சேரியே அவர் புறம் நிற்கிறது. ஆனால் மிலிட்டிரிக்காரர், சிவராமனை தேடி வந்து தனது பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார். அதுவும் எங்கே, சுடுகாட்டில்..... சிவராமனையும், மிலிட்டிரிக்காரரையும் ஒன்றாக இணைப்பது இருவருக்கும் ஒன்று போலவே நடக்கும் சாதி இழிவுதான். மிலிட்டிரிக்காரருக்கு அவரின் ராணுவ வேலை அடைமொழியாக நிற்கிறது. சிவராமனுக்கு அப்படியான பாதுகாப்பு ஏதுமில்லை.

வளர்ப்பு தந்தைக்காக, கோவில் திருவிழாவில் திணிக்கப்படும் சாதி இழிவையும் பாசத்திற்காக ஏற்கிறார். சாட்டையால் அடிச்சுக்கிட்டேன் பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. கருத்தளவிலும் பொருத்தமானது. பகுத்தறிவு கொண்ட பாடல் வரிகள்.  

சேரி மக்களிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கும் இரு பாத்திரங்கள் என்றால் சூசை, மிலிட்டிரிக்காரர் என இரு பாத்திரங்கள்தான் தேறுகின்றன.

சூசை என்பவரின் யானையை கோவில் யானையாக நியமிக்க கேட்டு சிவராமன், அக்ரஹாரத்திற்கு போகிறார். அங்குதான் அவருக்கு தனது பெற்றோர் யார் என்ற பழைய நினைவுகள் வருகிறது. தொலைந்துபோன சங்கரன் என்ற பிள்ளை தான்தான். தனது உதவி பெற்றோருக்கு தேவை என முடிவு செய்கிறார். அந்த சமயத்தில் பெற்றோரின் வீடு ஜப்தியாகும் சிக்கலில் இருக்கிறது. அதை மீட்கிறார். இரு தங்கைகளில் ஒருவருக்கு மணம் செய்து வைக்கிறார். பொருளாதார பிரச்னைகளை தீர்க்கிறார்.

இங்கு கதையில் வரும் முரண், மிலிட்டிரிக்காரரின் பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டும். அதற்கு சிவராமன் முயலும்போது, அவரின் அக்கிரஹார அப்பாவுக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. இதனால், சுவலட்சுமியை மணம் செய்துகொள்ள முடியாமல் போகிறது. இந்த வேதனையில் மிலிட்டிரிக்காரர் குடித்து கீழே விழுந்து இறந்துபோகிறார். சுவலட்சுமி, அவரது தங்கை என இரு பெண்களும் ஆதரவற்றவர்களாகிறார்கள்.

இந்த நிலைமை தெரிந்தும் சிவராமன் சேரிக்கு போகமுடியவில்லை. அந்த நேரத்தில் அவர் தனது மூத்த தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து அவரை கோவில் குருக்களாக்க, உயிரியல் தந்தை முயல்கிறார். அந்த நேரத்தில் அவர் பற்றிய உண்மை சேரியில் உள்ள வளர்ப்பு தந்தை வீராச்சாமிக்கு தெரியவருகிறது. அவருக்கு தான் வளர்த்தது அக்கிரஹார பையன் என்றதும் கை உதறலெடுக்கிறது. செருப்பு தைக்க வைத்தேனே என பதைபதைக்கிறார். அங்குள்ள சமூக சூழல்களுக்கு பழக்கப்பட்ட அவரின் மனம் அந்த திசையில் யோசிக்கிறது. அதேசமயம் அக்கிரஹாரத்தில் உள்ளவர்கள், சங்கரன் சேரியில் உள்ள செருப்பு தைப்பவரின் பிள்ளை. அவன் எப்படி கோவில் குருக்கள் ஆவது என பொறாமைப்படுகிறார்கள். கோவிலுக்குள் சிவராமன், சங்கரன் என இரண்டு பாத்திரங்களின் உண்மையும் வெளியாகிறது. இறுதியாக சிவராமன் யாரை தனது பெற்றோராக தேர்ந்தெடுத்தார் என்பதே இறுதிக்காட்சி.

இன்றைக்கு அரசின் அனைத்து துறைகளையும் இந்து பார்ப்பன பாசிச இயக்கம் ஊடுருவிவிட்டது. இதுபோல படம் ஒன்றை எடுத்து வெளியிடுவது கடினம். மணிவண்ணன் படத்தை தைரியமாக எடுத்து இருக்கிறார். வசனங்களை தைரியமாக வைத்திருப்பதோடு, நடிகர்களை சரியாக பேசவும் வைத்திருக்கிறார். மணிவண்ணன், சூசை பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சுவலட்சுமியை மணம் செய்துகொள்வதை காட்சியாக காட்டவில்லை. சேரிக்கு திரும்புவதன் வழியாக அந்தப் பெண்ணை மணப்பதை எளிதாக ஊகித்துக்கொள்ள முடிகிறது. அக்கிரஹாரத்துப் பெண் திவ்யா உண்ணி, தனது காதலை அவராகவே விட்டுக்கொடுத்துவிடுகிறார். இறுதிக்காட்சி திருப்புமுனையாக அமையாவிட்டால் தனது காதலை விட்டுக்கொடுத்திருப்பாரா என்று தெரியவில்லை.

சுடுகாட்டில் படுத்திருக்கும் சிவராமனுக்கு கேரியரில் சோறு எடுத்துக்கொண்டு செல்லும் ஒரே பெண், திவ்யாதான். அங்கு, அவரை திருமணம் செய்துகொள்ளப்போகும் சுவலட்சுமி கூட வருவதில்லை. பார்ப்பன பெண் படித்தவர், நகரத்தில் இருப்பவர் என தைரியத்திற்கு காரணம் சொன்னாலும் சுவலட்சுமியும் ஆசிரியையாக இருப்பவர்தான். அவரது பாத்திரத்தின் தன்மையை பார்வையாளர்களால் எளிதில் உணர்ந்துகொள்ள முடியவில்லை.
வீட்டு வறுமைக்காக பள்ளியில் சத்துணவுப் பொருட்களை திருடி வருகிறார். பிறகு, சிவராமன் அதைப் பற்றி தவறு என்று கூறியதும் மனம் மாறுகிறார். அதேசமயம், சேரி பிள்ளைகளுக்கு அம்பேத்கர் பெயரில் ட்யூசன் நடத்தி வருகிறார். தான் காதலிப்பவனுக்கு சாதியால் பிரச்னை வரும்போது, ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஊர் மக்கள் முன்னாடி பேசவிட்டால் பரவாயில்லை. அவரது தந்தை சிவராமனை சாதி கேட்டு இழிவுபடுத்தும்போது கூட கண்கலங்கி அப்படியே நிற்பதுதான், அவரது பாத்திரத்தை பலவீனப்படுத்துகிறது. மனவலிமை இல்லாத பலவீனமான பாத்திரம்.

இதற்கு நேர்மாறாக திவ்யா உண்ணி பாத்திரம் உள்ளது. சங்கரனை கல்யாணம்செய்து வைக்கப்போகிறார்கள் என்றதும் புரோகிதம் செய்வதற்கு மந்திரங்களை படிக்க வைக்கிறேன் என உறுதியாக நிலைப்பாடு எடுக்கிறார். அதைச் செய்தும் காட்டுகிறார்.  

சேரியில் தலித் அக்கிரஹாரத்தில் பார்ப்பனன், இடத்திற்கு ஏற்ப உடை, வேலை மாறினாலும் மனிதநேயம் அப்படியே இருக்கவேண்டும்.

மனிதம் முக்கியம்

கோமாளிமேடை குழு 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://en.wikipedia.org/wiki/Aandan_Adimai&ved=2ahUKEwjR7pGLypWJAxVUgVYBHSHbNNUQFnoECDoQAQ&usg=AOvVaw0XGrSO0kcJBRQJL7BB-7KK

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3DRU7a8jksS5A&ved=2ahUKEwikmJH6ypWJAxWtsVYBHUtTJ6gQh-wKegQIGxAD&usg=AOvVaw1NiVCMh-fmFM2DMiLFl66e

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்