நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

 

 

 




 

 

 

கிராமங்களில் வளரும் சுற்றுலா

சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது.

எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி நிறுவனம் அமைக்கப்பட்டு, பொறுப்புகள் அதன் கையில் வழங்கப்பட்டன. இதன்மூலம் சுற்றுலா வணிகம், அறிவியல் முறையில் அனைவருக்கும் வளர்ச்சி என்ற வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வருமானம் கிடைத்தது. புதிய உணவகங்கள் தொடங்கப்பட்டது, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தியது. கிராமத்தில் சுகாதாரம், சாலை வசதிகள், சூழல், வரலாற்று கட்டுமானங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சிறந்த சுற்றுலா கிராமம் என பட்டம் வென்ற கிராமம், ஷிதி. சிங்கப்பூர், அமெரிக்கா, தைவான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் ஷிதி கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர்.

நகரில் பணியாற்றிய கிராமத்து இளைஞர்கள் சுற்றுலா வளர்ச்சி காரணமாக ஷிதி கிராமத்திற்கு திரும்பி சுற்றுலா பயணிகளுக்கான விடுதி, கபே ஆகியவற்றை நடத்தி வருகிறார்கள். ஆண்டுக்கு நான்கு லட்சம் யுவான் வருமானம் கிடைத்துவருகிறது. கொரோனா காலம் தொட்டே நகரத்தில் வேலை செய்த இளைஞர்கள் அவரவர் கிராமங்களுக்கு திரும்பி வந்து காய்கறிக்கடை, கபே, உணவகம், விடுதி என நடத்த தொடங்கியுள்ளனர். ஷிதி கிராமத்தில் மட்டும் இருபத்தைந்து கபே, எழுபது விடுதிகள் உள்ளன. ஆசியா, ஐரோப்பா கண்டத்திலுள்ள நாட்டு பயணிகள் அதிகளவு சீனாவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

சில இளைஞர்கள் வேலை சார்ந்த அழுத்தங்களை தாங்க முடியாமல் கிராமத்திற்கு திரும்பி கடைகளை தொடங்கி நடத்துகிறார்கள். இதில் சிலருக்கு நிதானமாக வாழும் வாழ்க்கை ஈர்ப்புடையதாக உள்ளது. கொரோனாவுக்கு முன்னரே நிதானமாக வாழ்க்கை நடத்த விரும்பியவர்கள் வந்து விடுதி தொழிலை நடத்த தொடங்கிவிட்டனர். ஷிதி கிராமத்தில் உள்ள வீடுகளை விடுதியாக மாற்றி வருகிறார்கள். வரலாற்று இடம் என்பதால், அரசு அதிகாரிகள் விடுதிகளை வேகமாக புதுப்பிக்க புதிய கட்டுமானங்களை அமைக்க கூட எளிதாக அனுமதி தருவதில்லை. ஆய்வுகளை செய்து திருப்தி வந்தபின்னரே கட்டுமானங்களை கட்ட முடியும். இதற்கான காலம் ஒன்றரை ஆண்டுகள். மார்ச் - நவம்பர் வரையிலான காலமே சுற்றுலாவிற்கான சீசன் காலம். அப்போது விடுதியில் எண்பத்தைந்து சதவீத இடங்கள் நிரம்பிவிடுகின்றன.

நிறைய நாடுகளில் சுற்றுலாவிற்காக உள்ளூர் மக்களின் சொத்துகள், இயற்கை வளங்களை பலி கொடுத்துவிடுவார்கள். சீனாவில் உள்ள சுற்றுலா கிராமங்கள் விஷயத்தில் இப்போதுவரை அப்படியேதும் நடைபெறவில்லை என்பது நல்லதிர்ஷ்டம். நகரத்தில் உள்ள இளைஞர்கள், தங்களது வாழ்க்கையை, தொழிலை கிராமத்தில் அமைத்துக்கொள்வது திறமை சார்ந்த தட்டுப்பாட்டை தவிர்க்கிறது. தேவைகளை நிறைவு செய்கிறது.

மா ஜிங்னா- செங்க்ஸி
சீனா டெய்லி










 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்