கணிதம் கற்க அபாகஸ் உதவுமா?

 


 

அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் அறிவியல் சங்கம் எது?

1743ஆம் ஆண்டு, பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்க பிலாசபிகல் சொசைட்டி என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இந்த அமைப்பு இயற்கை தத்துவங்களை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்தது.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் சங்கங்களில் குறிப்பிடத்தக்கது எது?

ஏஏஏஎஸ் எனும் அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆப் சயின்ஸ் என்ற சங்கம். இந்த சங்கம், 1848ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர், வில்லியம் சார்லஸ் ரெட்பீல்ட். அறிவியல் துறையில் புதிய மேம்பாட்டை உருவாக்குவதே சங்கத்தின் நோக்கம்.

தொன்மையான அறிவியல் பத்திரிக்கை எது?
தி பிலாசபிகல் டிரான்ஸ்சேக்‌ஷன் என்ற லண்டனின் ராயல் சொசைட்டி அமைப்பு வெளியிடும் பத்திரிகை தொன்மையானது. 1665ஆம் ஆண்டு, இப்பத்திரிகை ஜர்னல் டெஸ் ஸ்கேவன்ஸ் என பெயர் மாறி வெளிவரத் தொடங்கியது. இன்றுவரை இப்பத்திரிகை தொடரச்சியாக வெளியாகிறது.

அறிவியல் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற நூல்?

1687ஆம் ஆண்டு ஐசக் நியூட்டன் பிலாசபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேட்டிகா என்ற நூலை வெளியிட்டார். தொடக்கத்தில் இந்த நூல் ஐநூறு பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இதற்கான அச்சு செலவை நியூட்டனின் நண்பர் எட்மண்ட் ஹாலே ஏற்றுக்கொண்டார். பதினெட்டு மாதங்கள் செலவிட்டு எழுதிய இந்த நூலில், நியூட்டன் கோள்களின் இயக்கம், ஈர்ப்புவிசை, நிலவு கடல் அலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் என பல்வேறு விஷயங்களை விளக்கியிருந்தார்.

ஏழு என்ற எண் அமானுஷ்ய தன்மை கொண்டதா?

மக்கள் அப்படி நம்புகிறார்கள். நிலவின் வளர்ச்சி, தேய்வு என்பது ஏழு நாட்களை அடிப்படையாக கொண்டது. மனிதர்களின் வளர்ச்சியும் ஏழு ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை அடைகிறது. இசைக்குறிப்பு ஏழு, வானவில்லின் வண்ணம் ஏழு, ஒரு குடும்பத்தில் ஏழாவதாக பிறக்கும் பிள்ளை, உளவியலில் திறன் பெற்றவராக மாயசக்தி பெற்றவராக இருப்பார் என மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. எனவே, ஏழு என்ற எண்ணை அதிர்ஷ்டம் என்கிறார்கள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய புனித நூல்களில் கூட ஏழு என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு நிறைய சம்பவங்கள் புனையப்பட்டுள்ளன.

கணிதம் கற்க அபாகஸ் சிறந்த முறை என்று கூறலாமா?

கி மு 3500 காலத்தில் அபாகஸ் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கணக்குகளை செய்ய பயன்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் சீனாவில் அபாகஸிற்கு பெரிய மதிப்பு இருந்தது. ஒரு மரச்சட்டகத்தில் நிறைய மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும். அதை கணக்கிற்கு ஏற்ப மாற்றி மாற்றி சேர்த்து நீக்கி கணக்குகளைப் போடவேண்டும். இதற்கு விரல்களோடு, மனமும், புத்தியும் ஒத்திசைய வேண்டும். பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு கணிதம் கற்றுக் கொடுக்க சிறந்த கருவியாக அபாகஸை கருதுகிறார்கள்.

1946ஆம் ஆண்டு ஜப்பானில் அபாகஸ் நிபுணருக்கும், நவீன கணித கருவிகளைப் பயன்படுத்தும் கணக்காளர் ஒருவருக்கும் கணித போட்டி நடத்தப்பட்டது. இதில், அபாகஸ் வல்லுநரே போட்டியில் முன்னிலை பெற்று வென்றார். குறிப்பாக அதிக எண்களைக் கொண்ட பெருக்கல்களை அனாயசமாக போட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். இன்று டிஜிட்டல் கணிதம் என்பது மிகவும் முன்னேறியுள்ளது.அதற்கு அபாகஸ் ஈடுகொடுக்குமா என்று தெரியவில்லை.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்