எழுதிய வரலாற்றுக் கதையில் குரூர இளவரசனுக்கு மனைவியாக மாறும் எழுத்தாளர்!
different princes
சீன டிராமா
33 எபிசோடுகள்
வரலாற்றுக்கதை எழுதும் இளம்பெண், தொடர்கதையாக இணையத்தில் எழுதி வெளியிட்டுவருகிறார். ஒருநாள் தனது கதையின் இறுதியில், பழிவாங்கும் எண்ணம் கொண்ட இளவரசன், நல்ல இளவரசனையும், அவனது மனைவியையும் அம்பு எய்து கொன்று ஆட்சியைப் பிடிப்பதாக எழுதி கதையை நிறைவு செய்கிறாள். ஆனால், அதை கதையை வாசித்த வாசகர்கள் ஏற்கவில்லை. நல்லவன் இறக்க கூடாது. வில்லன் வெல்வது போல உள்ளது என அறம் சார்ந்த கேள்வியை எழுப்புகிறார்கள். ஆனால், எழுத்தாளரான நாயகி முடியாது. நான் எழுதியபடி வில்லன்தான் வெல்கிறான் என உறுதியாக கூறுகிறாள். கணினி அவளை தொன்மைக் காலத்திற்கு கூட்டிச் செல்கிறது. அங்கு, அவளை தீயசக்தி இளவரசன் மணந்துகொண்டு முதலிரவு அன்றே கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அதிலிருந்து எழுத்தாளர் நாயகி மீண்டு எப்படி தன்னைக் காத்துக்கொண்டு தீயசக்தி இளவரசனை திருத்துகிறாள் என்பதே கதை.
இக்கதையை சுருக்கமாக சொன்னால், கதை எழுதும் எழுத்தாளரே அவரது கதையில் ஒரு முக்கிய பாத்திரமாக மாறினால்.. என வைத்துக்கொள்ளலாம்.
எழுத்தாளருக்கு நல்லவன் கெட்டவன் என பேதம் இல்லை. இரண்டு இளவரசர்களின் கடந்த காலக்கதைகளை விரிவாக எழுதவில்லை. யோசிக்கவும் இல்லை. இப்படியான நிலையில் தீயசக்தி இளவரசன், நல்ல இளவரசனை அம்பால் முதுகில் குத்திக் கொல்வதை இணைய ரசிகர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், கதையை மாற்றி எழுத மறுக்கிறார் எழுத்தாளர். எனவே, அவரது வாழ்க்கை பலியாகும் என மிரட்டல் செய்தி கணினியில் வருகிறது. பிறகு நாயகியான எழுத்தாளரை திரை அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.
தீயசக்தி இளவரசனை எப்படி அன்பால், காதலால் மாற்றுகிறாள் என்பதே முக்கியமான கதை. சாங் யிரன் என்ற சீன நடிகை குயிங் அல்லது ஹூவா ஷின்கா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாங்கின் அற்புதமான நடிப்பும், புன்னகையும், குறும்புத்தனமான உடல்மொழியும் தொடரை ரசிக்க வைக்கும் விதமாக மாற்றியுள்ளது.
கதைப்படி நாயகியான குயிங்கிற்கு அனைத்து பாத்திரங்களின் குணங்கள், பிரச்னைகள், பலம், பலவீனம் என அனைத்தும் தெரியும். அதை வைத்து எப்படி கதையின் முடிவை மாற்றி தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே முக்கியமான மையப்பொருள். நாயகன் சூ, இரக்கமில்லாத, இதயமற்ற, வன்முறை கொண்டவராக தொடக்க காட்சியில் காட்டப்படுகிறார். ஆனால் தொடர் இறுதியாக நிறைவாகும்போது, அவர் நாயகனாகவே மாறிவிடுகிறார். தொடரில் சூ சகோதரர்களுடன் வாதிடும்போது எந்த இடத்திலும் பதற்றம் கொள்வதில்லை. அலட்சியமான தோள் குலுக்கலுடன் நிதானமாக பேசி எதிரில் உள்ளவர்களை உளவியல் ரீதியாக தாக்கமுயல்கிறார். அவர் யாரையும் நம்புவதில்லை. ஏன் பிறரை நம்புவதில்லை என்பதற்கு பின்னணி கதை உண்டு.
குயிங், முதலில் தீயசக்தி இளவரசனான சூவுக்கு கல்யாணம்செய்து வைக்கப்பட்ட பெண்தான். ஆனால், அவர் அந்தப் பெண்ணை முதல் நாள் இரவிலேயே கொன்றுவிடுகிறார். அதை வைத்து அரசியல் லாபம் அடைகிறார் என்பது எழுதிய கதை. இப்போது குயிங் பாத்திரத்தில் கதையை எழுதிய எழுத்தாளரே உள்ளே வர தனது செயல்பாடு வழியாக தீயசக்தி நாயகனை மடை மாற்றவேண்டும். அப்படி மாற்றவில்லையெனில் அவர் தொன்மைக் கால கதையிலேயே இறந்துவிடுவார். அதை தவிர்க்க குயிங் என்னென்ன செய்கிறார் என்பதே சுவாரசியமான காட்சிகளாக விரிகிறது.
குயிங், பட்டத்து இளவரசனை கொலை வழக்கில் தீயசக்தி இளவரசன் சிக்க வைக்கப்போகிறான் என தெரிந்து காப்பாற்ற முயல்கிறாள். இந்த நேரத்தில், பட்டத்து இளவரசன், தீயசக்தி இளவரசன் என இருவருமே குயிங் மீது காதல்வயப்படுகிறார்கள். ஆனால், இளவரசன் சூ, குயிங்கை மிரட்டி தனது வீட்டில் வேலை செய்யுமாறு அவளை மாற்றுகிறான். அப்படி வீட்டுவேலை செய்யாவிட்டால் பட்டத்து இளவரசனைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். இதனால் குயிங் அவனது வீட்டில் வேலைக்கு சேர்கிறாள். உண்மையில், சூவுக்கு குயிங்கை கொல்வது நோக்கமல்ல. அவன் நினைப்பதை, திட்டமிடுவதை முன்னமே தெரிந்துகொள்கிறாளே எப்படி என யோசிக்கிறான். அதை தெரிந்துகொள்ள முனைகிறான். ஆனால், தொடர் முடியும்போதுதான் பதில் கிடைக்கிறது.
வீட்டில் அவள் இருக்கும்போது, அப்பாவித்தனமான பேச்சு, குறும்பான நடவடிக்கை என குயிங் சுற்றித் திரிகிறாள். சூவை கொல்ல வாய்ப்புகள் இருந்தாலும் அவனது மனதை மாற்றினால் போதும். அவன் வில்லனாக வேண்டியதில்லை என முடிவு செய்கிறாள். ஒரு கட்டத்தில் குயிங் தனது எதிரியல்ல. வாய்ப்பு கிடைத்தாலும் கூட விஷம் வைத்து தன்னை கொல்ல முற்படவில்லை என தெரிந்துகொண்டு அவளை காதலிக்கத் தொடங்குகிறான். சூவுக்கு அவனது அம்மாவுக்கு அடுத்து காதலிக்கும் பெண்ணாக குயிங் இருக்கிறாள். வெளியே காதலைக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால், உள்ளுக்குள் குயிங் மீது வெறித்தனமான அன்பைக் கொண்டிருக்கிறான். நிறைய காட்சிகளில், குயிங் மட்டுமே பழிவாங்கும் வெறியில் அவன் தன்னை இழந்துவிடக்கூடாது. பழிவாங்வது எல்லாவற்றையும் விட முக்கியமா என கேள்வி கேட்கிறாள்.
சூவை அவனது செயல்பாட்டை கேள்வி கேட்டுவிட்டு யாரும் உயிர் தப்பிவிட முடியாது. அதேசமயம் தேவையில்லாமல் அவன் யாரையும் சீண்டுவதில்லை. ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்த முகபாவனை, அடுத்தவரை ஆழம் பார்க்கும் பார்வை, நிதானமான உறுதியான பேச்சு என சூ பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாத்திரத்தின் கடந்த காலம் வலியும் வேதனையும் கொண்டது. ராணியின் சதியால் அம்மா விஷத்தால் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார். மகனையும் வேறுநாட்டுக்கு நாடு கடத்தி அடித்து சித்திரவதை செய்கிறார்கள். வலதுகை ஆட்காட்டி விரலை வாளால வெட்டி துண்டாக்குகிறார்கள். அழுகிப்போன உணவை உண்ணக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் கடந்து சூ உயிர்பிழைத்து நட்பை சம்பாதித்து வளர்கிறான்.
தொடரின் தொடக்கத்தில் யார் நல்லவன் என்று காட்சிபடுத்துகிறார்களோ அந்த பாத்திரம் தீயவனாக மாறுகிறது. அதாவது பட்டத்து இளவரசன். யார் தீயசக்தி கொண்டவன் என அடையாளப்படுத்தப்படுகிறாரோ அவர்தான் உண்மையில் நல்லவர் என சூழல் மாறுகிறது. ஏன் இப்படியான மாறுதல்கள் என்பதையும் காரண, காரியத்தோடு புரிந்துகொள்கிறோம். குயிங்கின் பங்கு, சூவை தீய இயல்பு கொண்டவனாக முற்றிலும் மாறுபடுவதை தடுப்பதே. அதை அவள் அன்பினால் சாதிக்கிறாள். தொடரில்கூட அரசியல் ரீதியாக அவள் பெரிதாக யோசனை, பங்களிப்பு செய்வதில்லை. சில கொலை, கடத்தல் வழக்குகளில் உதவுகிறாள். மற்றபடி, அநீதி நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள். தவறு நடக்கிறது என முறையிடுகிறாள். இதை அவள் எப்போதும் செய்கிறாள். அவளது இயல்பு, சூவுக்கு தான் இழந்த மீட்டெடுக்க வேண்டிய விஷயமாக தோன்றுகிறது. எனவே அவன் குயிங்கை எங்குமே விட்டுக்கொடுப்பதில்லை.
சூவுக்கு அவனது அம்மா, பேய் பிடித்து இறந்துபோனாள், அவளது உடல் அரசகுலத்தினரின் இடுகாட்டில் புதைக்கப்படவில்லை என்ற ஏக்கம் உள்ளது. வலி உள்ளது. அதற்காகவே அவன் விவரங்களைத் தேடி கண்டுபிடிக்கிறான். இதற்கு குயிங்கும் உதவுகிறாள்.
இவளோடு பிணத்தை அறுத்து சோதனையிடும் பெண்ணாக இருந்து, பட்டத்து இளவரசனை மணம் செய்துகொள்ளும் லின்னை ஓப்பிடவே முடியாது. அந்த பாத்திரம் தொடக்கத்தில் புரட்சிகரமாக இருந்து, பிறகு தனது கணவன் செய்யும் அத்தனை அநீதிகளையும் கொலைகளையும் ஆதரிப்பதாக மாறுகிறது. பரிதாபமான காட்சிகள். இதனால் லின்னின் தனித்தன்மை நீர்த்துப்போகிறது. அதை சிறப்பான பாத்திரமாகவும் கொள்ள முடியவில்லை. திசை தெரியாமல் ஒருமணி நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு நான்கு மணி நேரம் செலவழித்து செல்லும் மரபணு நோய் லின்னுக்கு உண்டு. அம்மா வழியாக வந்த நோயை வைத்து ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால், படைத்தளபதியின் தொலைந்துபோன மகள் என சொல்லி முடித்துவிடுகிறார்கள். நச்சலேது பையா!
தொடரின் பாதியிலேயே குயிங், வானர் பாத்திரங்கள் இறக்கப்போகின்றன என தெரிந்துவிடுகிறது.இந்த இரண்டு பாத்திரங்கள் மட்டுமே தொடரில் அரசியல் பற்றி கவலைப்படாமல் தங்கள் மனதிற்கு தோன்றுவதை பேசுகின்றன செய்கின்றன. மற்ற அனைவருக்கும் பிறரை அணுக சுயநலமான உள்நோக்கம் உள்ளது, தேவை உள்ளது. இந்த இரு பாத்திரங்கள், அனைத்து பாத்திரங்களையும் இணைக்கும் ஒருங்கிணைப்பு வேலைகளை செய்கின்றன. இறுதியில் வெறுப்பும் சதியும், தந்திரங்களும் இரு உயிர்களையும் பறித்துவிடுகின்றன.
பட்டத்து இளவரசனுக்கு குயிங் குடும்பரீதியாக அம்மா வழியில் சகோதர உறவு. சீனாவில் சகோதரன் என்பது மணம் செய்துகொள்ளும் இயல்பைக் கொண்டது. குயிங்கை சூவுக்கு மணம் செய்துகொடுக்கிறார்கள். அவளின் உயிரை பட்டத்து இளவரசன் தனது ஆள் மூலம் காக்கிறான். சிகிச்சை அளிக்கிறான். குயிங்கிற்கு, பட்டத்து இளவரசன் மீது கொலை வழக்கு பழி போடப்போகிறார்கள் என முன்னமே தெரியும். அதை தவிர்க்க முயல்கிறாள். ஏறத்தாழ அவள்தான் வாதாடி அவனை குற்றவாளி இல்லை என உறுதிசெய்கிறாள். லின் கூட நீதிமன்றத்தில் ஒன்றும் புரியாமல் நிற்கிறாள். இத்தனைக்கும் லின், பட்டத்து இளவரசனைக் காதலித்துக்கொண்டு இருக்கிறாள். ஆனால், அதை எப்படி கூறுவது என தெரியாமல் தவிக்கிறாள். அந்த நேரத்தில் குயிங் உள்ளே வர, கடுமையான பதற்றத்திற்கு உள்ளாகிறாள். பிணங்களை அறுத்து சோதனை செய்யும் பெண் அதிகாரியாக இருக்கும் லின், சமூக ரீதியில் பெரிய அதிகாரம் இல்லாதவள். இறுதியாக அவளுடைய அப்பா, படைத்தளபதி என தெரிய வரும்போது மகிழ்கிறாள். அந்த அந்தஸ்தைப் பயன்படுத்தி பட்டத்து இளவரசனை மணக்கிறாள். அதோடு, அவள் பார்த்து வந்த பிணம் அறுக்கும் வேலையைக் கைவிடுகிறாள். அதோடு அந்த பாத்திரத்தின் தன்மையும் அப்படியே மழுங்கிப்போகிறது.
நவீன காலத்திலிருந்து தொன்மைக் காலத்திற்கு செல்லும் நூற்றுக்கணக்கான சீன தொடர்கள் உள்ளன. இந்த தொடர், குயிங்கின் பாத்திரம், அதில் நடித்த சாங் யிரன், சூவின் பாத்திரம் ஆகியவற்றால் தனித்துவமாக மாறுகிறது. தொடரின் இறுதியில் சூ, குயிங்கை தேடி அவளது உலகிற்கு வருகிறான். சிறந்த முடிவு.
கோமாளிமேடை குழு
- Native Title: 花青歌
- Also Known As: Flower Green Song , Hua Qing Ge
- Screenwriter & Director: Shen Jin Fei
- Screenwriter: Lin Qing, Yang Ye Min, Zhang Qin, Feng Min, Sun Yan Li
கருத்துகள்
கருத்துரையிடுக