பெண்களுக்கான தொழில், பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம் பற்றி கேள்வி கேட்கும் வரலாற்று சீனத்தொடர்!

 

 




 

 

நியூ லைப் பிகின்ஸ்
சீன தொடர்

ஆறாவது இளவரசர், தனது துணைவியை அதிகாரப்பூர்வ மனைவியாக மாற்றிக்கொள்ள என்னென்ன செய்கிறார், அவரது துணைவியின் திறமைகள் எப்படி இளவரசரின் நிர்வாக பணிகளுக்கு உதவியாக உள்ளன என்பதே கதை.

பொதுவான சீன தொடர்களில் ஆண்கள், பெண்களை காதலுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த தொடரில் வரும் இளவரசர் பாத்திரம் தனது மனைவியை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார். அவரது மனைவியும், கணவரின் அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அதேசமயம், பெண்களுக்கான வேலை, சுயமரியாதை, முன்னேற்றம் என்பதில் தன் அம்மாவிடம் கற்றுக்கொண்டதை ஷின் மாகாணத்தில் செயல்படுத்துகிறார். இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் ஷின் மாகாணம், பிற ஒன்பது மாகாணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு.

அன்றைய காலகட்டத்தில் பெண்களை சந்தைப்பொருளாக அரசியலில் பயன்படும் காய்களாக மக்கள் எண்ணினர். இதனால், பிற மாகாண மக்கள் தங்களது செல்வாக்கு, அதிகாரத்திற்காக இளம்பெண்களை மனைவி அந்தஸ்தில், அல்லது அதிகாரப்பூர்வ மணமின்றி துணைவியாக இருக்க அனுமதித்தனர். இது சமூகத்தில் உள்ள ஆண்களின் மேலாதிக்க வெறிக்கு சான்றாக மாறியது. ஆறாவது இளவரசர், இருக்கும் இளவரசர்களில் தன்னை பலவீனமாக காட்டிக்கொண்டு மெல்ல முன்னேறி வந்தவர். அவருக்கு அடுத்த ஆட்சியாளராக வர வாய்ப்பு மிக குறைவு. ஆனால், அவருக்கு அரசியல் பாடங்களைக் கற்பிக்கும் டாய் என்ற அரசியல் ஆசிரியர், பல்வேறு அரசியல் விவகாரங்களை புரிந்துகொள்ள எப்படி செயலாற்ற வேண்டுமென கற்றுக்கொடுக்கிறார். கூடவே, அவரது நோயைத் தீர்த்து குணமடைய வைக்கும் துணைவி கிடைக்கிறார். அப்புறமென்ன?
தொடரின் தொடக்க காட்சிகள் ஆறாவது இளவரசர், துணைவி லீ வெய் இருவருக்கும் இடையே நடக்கும உரையாடல்கள் சிரிப்பைத் தூண்டுகின்றன. லீ வெய்யைப் பொறுத்தவரை மனைவி என்ற அந்தஸ்து இல்லாமல் துணைவி என்ற வகையில் அரண்மனையில் இருப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும் அப்பா அரசு அதிகாரி என்ற வகையில் இளம்பெண்கள் ஷின் அரண்மனைக்கு துணைவி போட்டிக்கு வந்தே ஆகவேண்டும் என நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால், அங்கு வருகிறாள். முடிந்தளவுக்கு தனது வீட்டுக்கு ஜி மாகாணத்திற்கு செல்வதே விருப்பமாக உள்ளது. ஆனால், ஆறாவது இளவரசர் லீ வெய்யை தனது துணைவியாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். ஏறத்தாழ மன்னருக்கு பத்து பிள்ளைகள். இந்த எண்ணிக்கையைப் போலவே இவர்களால் வரும் அரியணை போட்டிகளும், பொறாமைகளும் அதிகம்.

மன்னரைப் பொறுத்தவரை அனைத்து மகன்களையும், சதுரங்க காய்களாகவே நினைக்கிறார். அப்படியே நகர்த்துகிறார். அதில் அவருக்கு பெரிய அப்பா, பிள்ளை பேதமில்லை. ஆனால், மகன்கள் யாராவது இன்னொரு சகோதரரை கொல்ல நினைத்தால், அந்த உண்மை தெரிய வந்தால் அதை பொறுத்துக்கொள்வதில்லை. ஆறாவது இளவரசர், இந்த விவகாரத்தில் பிறரை வென்று செயல் தலைவராக பட்டத்து இளவரசராக வெல்வதற்கு இதுவே முக்கியக் காரணம். ஷின் மாகாண வணிகத்தை தாராளமயப்படுத்துகிறார். விதிகளை நெகிழ்த்துகிறார். இரவு கடைகளை திறந்து வைக்கலாம் என புதிய நெறிமுறைகளைக் கொண்டு வருகிறார். அதோடு காகித தாளை புதிய பணமதிப்பு முறையாக அறிமுகப்படுத்துகிறார்.

பட்டத்து இளவரசர், அந்தளவு திறன் இல்லாத ஆள். மூர்க்கமாக கோபம் கொள்ளும் அளவுக்கு முன்யோசனையோ, தனது அமைச்சரவையை மேம்படுத்தும் சிந்தனை இல்லாதவர். இவர், தனக்கு எதிரியாக ஆறாவது இளவரசரைக் கருதுகிறார். அவரது புதிய திட்டங்களை அச்சுறுத்தி நிறுத்த முயல்கிறார்.இதனால் ஆறாவது இளவரசரை சாட்டையால் அடித்து, சிறையில் தள்ளக்கூட மன்னர் உத்தரவிடுகிறார். ஆனால், அவரை முற்றாக அரசுப் பணியில் இருந்து விடுக்க மன்னருக்கு எண்ணமில்லை. இருக்கும் இளவரசர்களில் அசைக்க முடியாத நேர்மையானவர் ஆறாவது இளவரசர் மட்டுமே. ஆறாவது இளவரசர், தனது சீர்திருத்தங்களின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். தனது செயல்பாடுகளையும் தவறு என்றெல்லாம் கருதவில்லை. அதற்கு மன்னிப்பும் கேட்க மறுக்கிறார். பட்டத்து இளவரசரின் சதிச்செயலால், ஐந்தாவது இளவரசர் தனது அந்தஸ்து, பதவியை இழக்கிறார். அவர் அப்பாவித்தனம் கொண்டவர், அரசியல் சதிகளை அறியாத மனிதர். இந்த காலத்தில் தனது டான் மாகாண மனைவியுடன் காதல் கொள்கிறார். அவரை பின்தொடர்கிறார்.

சீன தொடரில் இயக்குநர் பெண்களுக்கான வணிகம், பொருளாதார வளர்ச்சி, அவர்களுக்கான முக்கியத்துவம் பற்றி நிறைய காட்சிகளில் பேச முனைந்திருக்கிறார். மூன்றாவது, ஆறாவது இளவரசர்கள் அவரவர் மனைவியின் தொழில்முயற்சிகளை அங்கீகரித்து வழிவிடுகிறார்கள். இதனால் லீ வெய், அரண்மனையிலுள்ள பெண்களை இணைத்து பெண்கள் வணிக சங்கத்தை கட்டமைக்கிறார். ஒன்பது மாகாண உணவகம் என்ற பெயரில் உணவகத்தை திறந்து நடத்துகிறார்கள். அன்றைய சீனாவில் பெண்கள், குறிப்பாக திருமணமானவர்கள் அந்நியர்களிடத்தில் முகத்தை காட்டக்கூடாது என விதி இருந்தது. ஆண்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். பெண்கள் வீட்டில்தான் இருக்கவேண்டும். தையல்வேலை, சமையல் வேலை செய்யலாம். தனியாக கடை திறந்து வியாபாரம் செய்யக்கூடாது. அதை அனுமதிக்கவும் இல்லை.

இந்த சூழலில் ஆறாவது இளவரசரின் துணைவி லீ வெய், மூன்றாவது இளவரசரின் மனைவி, ஐந்தாவது இளவரசரின் மனைவி என பலரும் ஒன்றாக இணைந்து ஒன்பது மாகாண உணவகத்தைத் தொடங்கி நடத்துகிறார்கள். ஷின் மாகாணத்தைத் தவிர்த்து டான் மாகணம், ஜி மாகாணத்தில் பெண்கள் தனியாக தொழில் நடத்தலாம். அரசு, இதற்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை.

ஆறாவது இளவரசர், தனது துணைவி லீ வெய் சொல்லும் பல்வேறு சுதந்திரமான சிந்தனைகளை கவனத்தில் கொள்கிறார். பெண்களைக் கட்டுப்படுத்தும் கட்டாய அரசியல் திருமணம், தொழில் தொடங்குவதற்கு அனுமதி தர மறுப்பது ஆகிய விஷயங்களை யோசித்து தன்னை மாற்றிக்கொள்கிறார். நிர்வாக விஷயங்களில் மனைவி கூறும் பல்வேறு ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, வெற்றி பெறுகிறார். ஆனால் பிற இளவரசர்கள் அந்தளவுக்கு திறந்த மனதோடு இருப்பதில்லை. நீ ஒரு பெண், எனக்கு ஆலோசனை சொல்கிறாயா என கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறார்கள். இல்லையெனில் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு நார்சிஸ்ட்போல நடந்துகொள்கிறார்கள்.

லீவெய் பாத்திரம், நட்பை என்றுமே கைவிடுவதில்லை. தனது தோழியின் தற்கொலையைத் தடுக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறார். அவரது தோழிகளோடு இணைந்து உணவகம் தொழிலை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறார். சவாலுக்கு அவர் பயப்படுவதே இல்லை. அவர் ஆறாவது இளவரசரிடம் கோருவது திருமண உறவில் நேர்மை மட்டுமே. லீயின் குடும்பத்தில் அவரது அம்மா, தனது கணவரைத் தேர்ந்தெடுத்தார். அவர்தான் குடும்பத்தை நடத்துகிறார். அப்பா, அம்மாவின் ஆளுமையை ஏற்றுக்கொள்கிறார். ஷின் மாகாணம் வேறுவிதமானது. இங்கு முழுக்க ஆண் மேலாதிக்கமே அதிகமுள்ளது. பெண்கள் நல்ல யோசனையை சொன்னாலும் கணவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இத்தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள நாயகன், நாயகி, அவர்களுக்கு உதவுபவர்கள் என அனைவருமே அர்ப்பணிப்பாக நடித்திருக்கிறார்கள். அதை காட்சி ரீதியாக எளிதாக உணரலாம். பெண்களுக்கான திருமண அங்கீகாரம், பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம், தனிப்பட்ட பொருளாதார வலிமை என நிறைய விஷயங்களை வலிமையாக பேசியுள்ள முக்கியமான தொடர் இது. இயக்குநருக்கு வாழ்த்துகள்.

பொதுவான சீன தொடர்களில் வசன ரீதியாக பெண்களுக்கான மதிப்பு, சாதி வேறுபாடு ஆகியவற்றைக் கூறுவார்கள். ஆனால் இந்த தொடர் முதன்மை பாத்திரங்களின் காதலை விட பெண்களுக்கான முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியுள்ளது. அதை காண்பதற்கு எந்த சங்கடமுமில்லை. நன்றாகவும் எடுத்திருக்கிறார்கள்.

கோமாளிமேடை குழு



 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்