காதலியின் தந்தையோடு சவால்விட்டு அவரது சொத்துக்களை அபகரிக்கும் நாயகன்!

 

 






 

பம்பர்
தெலுங்கு
சாய் சங்கர், பிந்து மாதவி
கதை திரைக்கதை பூரி ஜெகன்னாத்

ஏழை,பணக்கார காதல் கதை. ட்விஸ்ட் என்னவென்றால், ஏழை பணக்காரனாக முன்னேறவில்லை. தான் இருக்கும் நிலைக்கு பணக்காரனை கொண்டு வருகிறான். அவ்வளவுதான். அதுதான் படம்.

வித்தியாசம் என்ற பெயரில் கதையை யோசித்திருக்கிறார்கள். ஆனால், நினைத்தது போல படம் காட்சிரீதியாக சரியாக வரவில்லை. படத்தில் குமாஸ்தாவாக நடித்துள்ள சந்திரமோகன் மட்டுமே சற்று நடைமுறையான சிக்கல்களை அறிந்து புரிந்துகொண்டிருக்கிறார். அவர் மட்டுமே பரவாயில்லை எனும்படி நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் நேராக பூரி ஜெகன்னாத்தின் உலகில் இருந்து திடீரென பூமிக்கு வந்து இறங்கியவர்கள். எந்த பாத்திரத்திலும் நம்பகத்தன்மை இல்லை. வினோதமாக பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

லூசு நாயகிகளை உருவாக்குவதில் தெலுங்கு படங்கள் சலிப்பதேயில்லை. அந்த வகையில் இப்பட நாயகியும் விதிவிலக்கில்லை. ஆணவமும் முன்கோபமும் கொண்ட நாயகி. இவள் மெக்கானிக் ஒருவன் மீது காதல்வயப்படுகிறாள். இந்த காதல் எப்படி இருக்கிறதென்றால், அவள் இதுவரை அனுபவித்த அத்தனை வசதிகளும் கையைவிட்டு போகிறது. அப்போது கூட அவளுக்கு பயம் வரவில்லை. இப்படியொரு பாத்திரம் இருக்க முடியுமா?

சாய் சங்கர், தனது பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், நிறைய உணர்ச்சிகள் கைகூடி வரவில்லை. பணக்காரருடன் சவால் விடும் காட்சி பரவாயில்லை ரகம்தான். பணக்காரர், அரசியல், மாஃபியா தொடர்புடைய ஆள்.அவரை சாதாரண மெக்கானிக் எப்படி வீழ்த்த முடியும்? அதை படம் நகைச்சுவையாக அணுகியிருக்கிறது. தொழிலதிபரின் கூடவே இருந்து வேலை பார்த்தவர்கள், அவர் தோற்கடிக்க நிதானமாக வேலை பார்க்கிறார்கள்.

தொழிலதிபரின் பிஏவாக வேலை செய்பவர், வழக்கு போட்டு நிறுவனத்தை மூட வைத்தால் போதும். நானே உங்களுக்கு காசு கொடுப்பேன் என நாயகன் கொடுத்த காசை திருப்பிக் கொடுத்து சொல்கிறார். தொழிலதிபருக்கு இரண்டு மனைவிகள் வழியாக இரு குடும்பங்கள் உள்ளன. ஒரு குடும்பம் வழியாக நாயகி, இன்னொரு குடும்பம் வழியாக தம்பி ஒருவன் இருக்கிறான். தொழில்ரீதியாக நிறைய ஆட்களை மிரட்டி அதட்டி இடங்களை குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டிருக்கிறார். இதையெல்லாம் வைத்து நாயகன், தான் முன்னேற முயற்சி செய்வதில்லை. தொழிலதிபரின் அனைத்து தொழில் நிறுவனங்களையும் கீழே வீழ்த்துகிறான். சவாலில் வெல்வது சரி.

இதில் அவனும், தொழிலதிபரின் மகளான நாயகியும் பெறுவது என்ன? நாயகனின் அப்பாவுக்கு குமாஸ்தா வேலை போய்விடுகிறது. நாயகியை, நாயகன் மணம் செய்துகொண்டால் கூட நிலைமை பெரிய மாற்றம் கண்டுவிடாது. தங்கையை மருத்துவப்படிப்புக்கு அனுப்பும் அளவுக்கு வருமானமும் இல்லை. இரு குடும்பங்களும் ஒன்றாக இணைந்தால் கூட வருமானத்தில் தடுமாறும் நிலைதான் இருக்கும். இதில் வெல்வது யார்? சொந்த சுயநலனுக்காக குடும்பத்தை வருத்துவதாகவே படம் நகர்கிறது.

தொழிலதிபர் தனது அந்தஸ்தை, இழந்த பணத்தை மீட்க தனது மகளை நாயகியைக் கூட அடகு வைக்க துணிகிறார். படத்தில் தான் செய்த தவறுகளை உணர்வதாக காட்டியிருந்தால் கூட பரவாயில்லை. அப்படியான ஒரு காட்சி கூட இல்லை. கடைசி காட்சியில் கூட தொழிலதிபருக்கு பிணை வழங்க ஆட்கள் இல்லை. சொத்துகள், வசதி போனதால் வேறு வழியின்றி நாயகனை நம்பியிருக்கும்படி ஆகிறது. படம் அதை நகைச்சுவை போல காட்டுகிறது. நமக்கு சிரிப்பு வரமாட்டேன்கிறது. 

பூரி அவரது உதவி இயக்குநர்களை சுதந்திரமாக விட்டாலே நன்றாக படம் வர வாய்ப்புள்ளது. அவரே உள்ளே புகுந்து கதை, திரைக்கதை எழுதி கெடுப்பது எதற்கு? உதவி இயக்குநர்களின் மேல் நம்பிக்கை இல்லையா?

காரின் பம்பராலேயே பார்வையாளர்களை அடித்திருக்கிறார்கள்

கோமாளிமேடை குழு

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3D54bQT4Y5gL0&ved=2ahUKEwio6-OtrJSJAxVbrlYBHUF_G4gQtwJ6BAhMEAI&usg=AOvVaw3jGTy95F4sPjchFQeGn795
 

Initial release: October 23, 2009
Director: Jaya Ravindra
Music composed by: Raghu Kunche
Producer: Puri Jagannadh

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்