சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!

 

 

 




12 டினி திங்க்ஸ்
ஹெய்டி பார்
சுயமுன்னேற்ற நூல்

எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும்.

பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம்.

இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இயற்கையோடு இணைந்து வாழ்வது, புலன்களால் அனைத்தையும் உணர முயல்வது, இடையூறு இன்றி கவனத்தை ஒருமுகப்படுத்துவது, பிறரோடு இணையத்தை தவிர்த்து தகவல் தொடர்பு கொள்ள முயல்வது என கருத்துகளை எழுத்தாளர் ஹெர் அடையாளம் காட்டுகிறார்.

உணவை நாமே தயாரித்து சாப்பிடுகிறோம். அதை, பிறருக்கும் கொடுத்து அவர்களோடு அமர்ந்து சாப்பிடுவது என்பது சற்று வேறுபட்டது. அங்கு உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களோடு தகவல்தொடர்பு கிடைக்கிறது. அதைப்போலவே, அருகிலுள்ள வீட்டுக்காரர்களுக்கு ஏதேனும் உதவிகளை வழங்கி, பிறகு உதவிகளை கேட்டு பெற்றுக்கொள்வது என்ற யோசனையும் முக்கியமானது. பிறரோடு இணைந்துகொள்வது, அனுசரணை, அக்கறை காட்டுவது இதெல்லாமே ஒருவரின் மனதளவில் அவரை பக்குவப்படுத்துகிறது. முதிர்ச்சி கொண்ட மனிதராக மாற்றுகிறது. இந்த யோசனைகளை செயல்படுத்தும்போது முழுக்க நேர்மறையான அனுபவங்களே கிடைக்கும் என கூறமுடியாது. இந்தியா போன்ற இந்து பேரினவாதம் வளர்ந்து வரும் நாட்டில் முஸ்லீம் ஒருவர் உதவி புரிகிறேன் என்று வந்து நின்றால் அவர் கும்பல் படுகொலை செய்யப்படவோ, அவரது வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்படவோ அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே, உங்கள் அளவில் உற்சாகம் கொள்ளத்தக்க, ஆக்கப்பூர்வ தன்மை வளரும் விஷயங்களை செய்யலாம். உணவை கண்களை மூடி அனுபவித்து உண்ணுங்கள். சாப்பிட்டபிறகு தட்டுகளை மெஷின் அல்லாது கைகளால் கழுவுங்கள். பூங்காவிற்கு செல்லுங்கள், மரங்களின் இருப்பை கைகளால் தொட்டுணருங்கள், பறவைகள் குரலைக் கேளுங்கள். அவற்றை இனம் பிரித்து பார்க்க முயலுங்கள் என நிறைய எளிமையான யோசனைகளை நூல் வழங்கிக்கொண்டே செல்கிறது.

உடல், மனம் இரண்டுக்குமான ஆரோக்கியத்தை தரும் நிறைய யோசனைகளை நூலாசிரியர் கூறியிருக்கிறார். அவற்றை எந்தளவு கடைபிடிக்கலாம் என உங்களுக்குத் தோன்றுகிறதோ, அதை சாத்தியப்படுத்தலாம்.

நூலுக்கு குறிப்பிட்ட டெம்பிளேட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் வாசிக்கும்போது அந்த வடிவம் சிறப்பானதாக இல்லை.

கோமாளிமேடை குழு 

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2F12tinythings.com%2F&psig=AOvVaw0GoUr3iKVQgUwMrY4L0xRl&ust=1729908816789000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CAMQjB1qFwoTCOjdxta6qIkDFQAAAAAdAAAAABAE

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்