நான்கு ஆண்டுகளில் அப்பாவை ஏமாற்றிய தாய்மாமனை பழிவாங்கும் நாயகனின் வெற்றிக்கதை!

 

 

 

 

 

 



 

 ஜெயித்துக் காட்டுவேன்
இயக்கம் கே ராகவேந்திர ராவ்
இசை ஜே சக்கிரவர்த்தி
நடிப்பு வெங்கடேஷ், ஸ்வேதா, ஜெயசுதா

படிப்பில்லாமல் கிடைக்கிற கூலி வேலை செய்யும் ராஜா என்பவன், சுந்தரராமன் என்ற பணக்கார தொழிலதிபரின் மகளோடு பந்தயம் போட்டு தொழில் செய்து முன்னேறுகிற கதை.

ஏழை நாயகன், பணக்கார நாயகி என்ற அதே கதை. தெலுங்கு ஆட்களைப் பொறுத்தவரை எதிரியாக இருந்தாலும் அவன் நாயகனுக்கு தாய்மாமனாக, அப்பாவாக, பெரியப்பாவாக இருக்கவேண்டும். நாயகி யாரோ ஒருவரைக் காதலித்தால் எப்படி? அவள் நிச்சயம் தனது தாய்மாமனையே காதலிக்கவேண்டும். கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இதெல்லாம் இயக்குநர் உள்நோக்கத்துடன் செய்யும் விஷயங்கள். அப்போதுதான் தெலுங்கு கலாசாரம் வானளவு புகழோடு வளர்ந்தோங்கும். உதவாக்கரையான இயக்குநர் எழுதிக்கொடுப்பதை ஒப்பிக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூட மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்தளவு மழுமட்டையாக மக்களை மாற்ற திரைப்படங்கள்தான் ஒரே வழி.

கே ராகவேந்திர ராவ், பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கீழிருந்து கேமராவில் பதிவு செய்து அவர்களை காட்சி ரீதியாக கண்ணியப்படுத்துவார். காதலிக்கும்வரை மாடர்ன் டிரஸ் அணியும் பெண்கள், காதல் வந்தபிறகு புடவை கட்டுவார்கள். உரையாடல் காட்சி என்றால் பெண்களை பலவந்தப்படுத்தி முத்தம் கொடுப்பது, மதுபானங்களை உடலில் ஊற்றி அது உடைகளை, உள்ளாடைகளை நனைப்பதை மேலிருந்து கீழ்வரை காட்சிபடுத்துவது என கிரியேட்டிவிட்டியைக் காட்டுவார். பாடல் காட்சி என்றால் ஃபேன்டசிகள் காட்டுத்தனத்தை எட்டிவிடும். நூறு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இயக்குநருக்கு, பெண்களை சதையாக மட்டுமே காட்டினால் வணிக வெற்றி ஏன் கிடைக்காது?

படத்தில் நாயகிக்கு பணத்திமிர் மட்டும் கிடையாது. அவளுக்கு நாகரிகம், பிறரின் மேல் கிஞ்சித்தும் அக்கறை, பரிவு ஏதும் கிடையாது. குரூரம், கேலி, கிண்டல் என செய்யும் மனச்சிதைவான மனநிலை கொண்டவள். இப்படியானவள், நாயகனின் தோழியின் உதவியைப் பெற்றுக்கொண்டு சொன்ன காசைக் கொடுக்காமல் கல்லூரியில் வைத்து பலவந்தமாக அவளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்துகிறாள். அதைப் பார்த்து ரசிக்கிறாள். அதை வேடிக்கை பார்க்க பெரும் திரளான கல்லூரி மாணவர்கள் நிற்கிறார்கள். நடக்கும் அநீதியை யாரும் ஏன் என்று கேள்வி கேட்பதில்லை. போதாததற்கு கைதட்டி பலவந்தமாக முத்தம் கொடுப்பவனை ஊக்கப்படுத்துகிறார்கள். ஒரு சமூகமே களங்கப்பட்டதாக மாறிவிட்டபோது, ஒருத்தியை மட்டும் தண்டித்து என்ன செய்வது? ஏறத்தாழ இந்து பேரினவாத கட்சி, பாலியல் குற்றவாளிகளை பாராட்டி விழா எடுக்கிறார்களே, பத்திரிகையாளர்களைக் கொன்றவர்களை இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறார்களே அதை நினைவுபடுத்துகிற காட்சி.

இப்படி செய்யும் நாயகியை, நாயகன் எப்படி பழிவாங்குகிறான்?. அவள் அவனது தோழிக்கு செய்ததையே திரும்ப செய்கிறான். அவனும் அவளுக்கு பலவந்தமாக முத்தம் கொடுத்துவிட்டு தோழியை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். நாயகி, அந்த கண்றாவியை நினைத்து கனவுப்பாட்டு ஒன்றைப் பாடுகிறாள். அடப்பாவமே?

படத்தில் கொஞ்சமேனும் ரசிக்க கூடிய பாத்திரம் என்றால்,அது நாயகனின் தோழி பாத்திரம்தான். அவள்தான், நாயகன் ராஜாவின் புத்திசாலித்தனத்தை புரிந்துகொள்கிறாள். அவனுடன் சேர்ந்து தொழிற்சாலை தொடங்க துணை நிற்கிறாள். ஆனால் இறுதியாக நாயகன் மனச்சிதைவு கொண்ட தாய்மாமன் மகள் தனது வாழ்க்கைக்கு உத்வேகம் கொடுத்தவள் என உளறுகிறான். உண்மையில் அவள், அவனது தாய்மாமன் மகள் என்பதைத் தாண்டிய விசேஷம் படத்தில் ஏதுமில்லை. படத்தில் மூளை வளர்ச்சி இல்லாத பாத்திரங்கள் நிறைய உள்ளன. ஆனால், அதை அவ்வப்போது வசனம் மூலம் கண்டுகொள்ளலாம். இதுதான் பார்வையாளர்களுக்கான புதிர். இருப்பதிலேயே யார் பெரிய லூசு என கண்டுபிடிக்கவேண்டும்.

நேர்மையாக யோசித்தால் நாயகன் ராஜா, அவனுக்கு ஊக்கம் கொடுத்து முன்னேற உதவிய தோழியை மணப்பது சரியானது. ஆனால் அப்படி செய்தால், தெலுங்கில் உள்ள உறவுக்குள் மணம் என்பதை எப்படி காட்சிபடுத்த முடியும்? உறவை, சாதியை, மதத்தை எப்படி காப்பாற்றுவது?

நாயகனின் தோழி பாத்திரமான இந்துவாக நடிகை ரூபிணி சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகள், ஒரு பாடல், கிளைமேக்ஸ் காட்சி என குறைவான இடம்தான். அதிலும் தன்னை நிரூபித்துள்ளார். படத்தில் ஓரளவுக்கு இயல்பாக உள்ள பெண் என்றால் அது இந்து பாத்திரம் மட்டும்தான். குரூரமான புத்தி கொண்ட பணக்கார நாயகி பாத்திரத்தில் பர்னாஸ் என்ற வடமொழி நடிகை நடித்துள்ளார். இவர் நடிகை தபுவின் அக்கா. படத்தில் ஸ்வேதா என டைட்டில் போடுகிறார்கள். மற்றபடி சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.

ராகவேந்திர ராவ் படத்தில் பெண்களை மூர்க்கபுத்தி கொண்ட முட்டாள்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், முதிர்ச்சி இல்லாதவர்கள். ஆண்கள், பெண்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கிறார்.

ஜெயசுதா யார், அவர் ராஜாவின் தாய்மாமனான சுந்தரராமனை எதற்கு பழிவாங்கவேண்டும் என்பது படத்தின் திருப்புமுனைக் காட்சி என இயக்குநர் கருதியிருக்கிறார். அது பார்க்கும்போது அப்படி ஒன்றும் சுவாரசியமாக தெரியவில்லை.

பெண்ணை மற்றொரு பெண்ணே இழிவுபடுத்துவது, கூட்டாக சேர்ந்து பெண்ணை வல்லுறவு செய்யும் முயற்சி ஆகிய காட்சிகள் புதிய அகண்ட இந்தியாவை நினைவுபடுத்துகிறது. இன்னும் கூட வாய்ப்புள்ளது. தெலுங்கு தேசத்தில் இந்த படத்தை இயக்குநர் ரீ ரிலீஸ் செய்யலாம். இந்து பேரினவாத கட்சி படத்தை சமூக வலைதளங்களில் பாராட்டும் தகுதி கொண்ட திரைப்படம்.

மென்டல் ஒச்சேசிந்தி!

கோமாளிமேடை குழு

படம் யூட்யூபிலேயே இலவசமாக காண கிடைக்கிறது.

நன்றி

டெனர்.காம்

 

https://en.wikipedia.org/wiki/Ontari_Poratam

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D4k6jUneNJMI&psig=AOvVaw0ocWSt3bOhItZj00hUIJ1Q&ust=1729133481064000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBcQjhxqFwoTCLDzuanykYkDFQAAAAAdAAAAABAE

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்