திருவிழாவில் இளம்பெண்ணின் இடுப்பைக் கிள்ளி, அவளது குடும்பத்தை ஆபத்தில் தள்ளும் நாயகன்!

 

 

 






மிளகா
நட்ராஜ், பூங்கொடி
இயக்கம் ரவி மரியா

படத்தில் இசை, பாடல்கள் எல்லாமே சுமார்தான். குறைந்த பட்ஜெட் படம். படத்தின் கதைதான் முக்கியமானது. அலங்காநல்லூர் அழகர் என்ற நாயகன் பாத்திரம்தான் படத்தில் நாயகன், வில்லனும் கூட அவன்தான். இதில் என்ன வேடிக்கை என்றால், அவர் செய்த ஒரு செயலால் நாயகியின் குடும்பமே பாதிக்கப்படுகிறது. ஆனால், அதை நாயகன் அறியாமல் இருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பிரச்னையே அவரின் கையில் வந்துவிழுகிறது. மிளகாய் மண்டிக்காரரான அவர், பிரச்னையை அவரது வழியில் காரசாரமாக சண்டை போட்டு தீர்த்து வைப்பதே படத்தின் கதை. படத்தில் வரும் முரண், அதற்கான வித்தை நாயகனே செய்திருக்கிறான் என்பது மட்டுமே சற்று ஆர்வமூட்டுகிறது. மற்றபடி சினிமா ஒரே டெம்பிளேட்டில் பயணித்து முடிகிறது.

எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநர் என்பதாலா என்னவோ தெரியவில்லை. நாயகியின் (பூங்கொடி) இடுப்புதான் கதைக்களம். பின்புறமாக இடுப்பை பல்வேறு குளோசப் காட்சிகளில் காட்டுகிறார்கள்.
அலங்காநல்லூர் அழகர், மிளகாய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆப்பம், சோடா, பருத்திப்பால், பண்டு பாத்திரங்கள் விற்கும் என நான்கு நண்பர்கள் உண்டு. இதில் பாத்திரங்கள் விற்கும் நண்பனுக்கு பதினெட்டு லட்ச ரூபாய் பாக்கி வரவேண்டி இருக்கிறது. அதை வாங்க முயற்சித்தால் அடித்து பிரட்டிவிடுகிறார்கள். நண்பன், அழகரிடம் புகார் சொல்ல, அவனும் நண்பர்களும் சேர்ந்து அத்தனை பணத்தையும் வசூலித்து தருகிறார். இந்த வேலையின்போது, அவர்களை ஒரு இளம்பெண் கவனிக்கிறாள். திடீரென ஒருநாள் சாலையில் அவனது பைக் மீது ஸ்கூட்டியை மோதி விபத்தை ஏற்படுத்துகிறாள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனக்கு ஆபத்து இருப்பதாக சொல்லி உதவி கேட்கிறாள். அவளைக் கண்காணிக்க ஒரு ஜீப் ஒன்று பின்னாலேயே வருகிறது.

காட்சி ரீதியாக நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், நாயகியை யாரோ அடைத்து வைத்து இருக்கிறார்கள். கல்லூரி  செல்பவளை பாதுகாப்பாக ஆட்களோடு அனுப்பி வைத்து வருகிறார்கள். எதற்கு அப்படி செய்கிறார்கள் என்பது பின்கதை. அழகருக்கு நாயகி பேசுவது ஏதும் புரிவதில்லை. ஆனால், ஒருநாள் திடீரென ஆட்கள் வந்து அடிக்கத் தொடங்க அவர்கள் பத்து பேர்களையும் துரத்தி துரத்தி அடித்து உதைத்து கை, கால்களை முறிக்கிறார். பிறகு கஜேந்திரா பிரதர்ஸ் என்ற வில்லன் வீட்டுக்கு போகிறார். அங்குதான் அவனை காதலன் என்ற பொய் சொன்ன ஸ்கூட்டி இளம்பெண் இருக்கிறாள். தேன்மொழி, என்ற அவள் தன்னை அழகர் விரட்டி மிரட்டி காதலிப்பதாக பொய் சொல்கிறாள். அந்த வீட்டு ஆட்கள், பெண் பிள்ளையை அடித்து உதைப்பதை பார்த்து அழகரும் அவளை காதலிப்பதாக பொய் சொல்லி சீக்கிரமே கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.

அவரால் தேன்மொழியை மீட்க முடிந்ததா இல்லையா என்பதே கதை.

திருவிழா ஒன்றில் நாயகன் செய்யும் அவமானகரமான செயல், இளம்பெண் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தில் தள்ளுகிறது. பின்விளைவை அறியாமல் செய்த பாலியல் சீண்டல், அதன் விளைவை நாயகனிடமே காட்டுகிறது. இந்த வகையில் முட்டல் மோதல் என்ற வகையில் படம் சுவாரசியமாக இருக்கிறது. நகைச்சுவைக்கு சிங்கம்புலி பெரிதும் உதவுகிறார்.

கற்பழித்தவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணை ஊர்ப்பஞ்சாயத்து கல்யாணம் செய்து வைக்கும் அல்லவா, அதேபோல பாலியல் சீண்டலை செய்த நாயகனையே தேன்மொழி கல்யாணம் செய்துகொள்கிறாள். இதெல்லாம் எப்படியான கருத்தைச் சொல்கிற படமோ? இதை வேறு ஐம்பத்தைந்து முறை ஒரு ரசிகர் பார்த்துவிட்டு தன்னிடம் பாராட்டிக் கூறியதாக இயக்குநர் ரவி மரியா பேட்டி ஒன்றில் கூறினார். பரிதாபங்களுக்கே பரிதாபங்கள். படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும் பெரியநடிகர் கிடைக்கவில்லை என்பதால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியபோது,மனதில் ஒரு நிம்மதி தோன்றியது. இன்னும் என்னென்ன மோசமான காட்சிகளை படத்தில் சேர்த்திருப்பாரோ சாமி.... ஆளவிடுங்கடா அய்யா...

சுஜா வருணி காட்சிகள் எல்லாமே அவரது பாத்திரத்தை அளவற்ற காம இச்சை கொண்டவராக காட்ட முயல்கின்றன. நாயகனின் நண்பனுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த ஓனர் வீட்டுப்பெண். நாயகனை ஒருதலையாக காதலிக்கிறார். அப்போது, ஜல்லிக்கட்டு காளையை எப்படி அடக்கினான் என கேள்வி கேட்பார். தனக்கு ஒருவனை பிடித்திருக்கிறது என்று சொல்வது தவறு கிடையாது. ஆனால் குறிப்பிட்ட வகையில் அந்த பாத்திரத்தை மாற்றி இழிவுபடுத்துவது தவறு. ஒரு காட்சியில் தனது இடுப்பு எப்படி உள்ளது என நாயகனிடம் வசனம் பேசுகிறார். இறுதியாக நாயகனை நாயகிக்கு விட்டுக்கொடுக்கும் பாத்திரம். உண்மையில் இந்த பாத்திரத்தை நாயகன் மணந்திருந்தால் கூட நல்ல முடிவுதான்.

தேன்மொழி பாத்திரம், கல்லூரியில் படிக்கும் இளம்பெண். ஆனால், தன்னை பொது இடத்தில் அநாகரிகமான சூழலுக்கு உள்ளாக்கிவிட்டு அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் நாயகனை எப்படி காதலிக்கிறாள், அதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று புரியவில்லை. ஏறத்தாழ தன்னுடைய உயிருக்கு, பெற்றோருக்கு பாதுகாப்பு தேடும் பாத்திரம். அவ்வளவே. மற்றபடி எந்த புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் இல்லாமல் பாத்திரம் எழுதப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் அவர் நாயகனை எதற்காக மணக்கவேண்டும்?

பாலியல் சீண்டல்களை செய்பவர்களை எப்படி நியாயப்படுத்துவது? தேன்மொழிக்கு பெற்றோரைக் காப்பாற்றுவது, அடுத்து தன்னை இக்கட்டிலிருந்து மீட்பது மட்டுமே ஒரே காரியமாக இருக்கிறது. அந்த வகையில் நிறுத்திக்கொண்டால் நன்றாக இருந்திருக்கும்.

நாயகனைப் பொறுத்தவரை பந்தயம் என்று வைத்துவிட்டால், அதில் வென்றே தீருவது என உறுதியாக இருக்கிறார். அவனது பர்னிச்சர் கடை நண்பன், ஆயிரம் ரூபாய் அல்ல இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி நாயகியின் இடுப்பைக் கிள்ள தூண்டுகிறார. இங்கு குற்றவாளி நாயகன் மட்டுமல்ல. அவனைத்தடுக்காத மற்ற மூவரும்தான்.

சிங்கம்புலி மட்டும்தான் நாயகனை பொது இடத்தில் இதுபோல செய்யவேண்டாம் எனசொல்லுகிறார். மற்றவர்கள் அவனை தவறாக நடந்துகொள்ள தூண்டுகிறார்கள். இதன் விளைவுதான், பின்னாளில் அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளும் கூட.

வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் உண்டு. நாயகியை குத்து்ப்பாடலுக்கு பயன்படுத்தவில்லை. மற்றபடி படம் நெடுக பெண்களை போகப்பொருளாக, பிரயோஜனமில்லாதவர்களாகவே காட்டுகிறார்கள். ஒளிப்பதிவு கூட சீரியலில் செய்யும் ஜூம்கள் சாயலில் எல்லாம் அடிக்கடி வருவது பயமுறுத்துகிறது. என்ன படமோ? படத்தில் ஆறுதல் என்றால், நாயகனின் நான்கு நண்பர்களும், பேசும் வட்டார மொழி மட்டும்தான்.

படத்தின இயக்குநரே வில்லன்களின் ஒருவராக நடித்திருக்கிறார். அவர்தான் நாயகியை கல்யாணம் செய்துகொள்ள முயலும் ரவுடி. இவருக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்களைக் காப்பாற்ற தம்பி சிறைக்கு சென்றார், அவர்களின் உயிரைக் காப்பாற்றினார் என ஓரிடத்தில் சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும் என புரியவில்லை. தம்பி மீது மூன்று அண்ணன்களும் பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டால் போதுமானது. அனைத்து பாத்திரங்களும் சிலசமயங்களில் இழுத்து இழுத்து வசனம்பேசுவதைப் பார்க்க என்னவோ போலிருக்கிறது.

இந்த மிளகாய் சமூகத்திற்கு கேடு

கோமாளிமேடை குழு










 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்