உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்)

 

 

 

 









 

 

உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்)

2013ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் ஷியாவோஹாங்சு என்ற ஆப்பை மிராண்டா க்யுவும் அவரது நண்பரும் சேர்ந்து தொடங்கினர். இந்த ஆப், இன்று முன்னூறு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டுள்ள சமூக வலைத்தள ஆப்பாக மாறியுள்ளது. மிராண்டா க்யூ, பார்ச்சூன் ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கூட இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஷியாவோஹாங்சூ என்ற வார்த்தைக்கு சிறிய சிவப்பு புத்தகம் என்று அர்த்தம். சீனாவை, மக்கள் சீன குடியரசாக போராடி உருவாக்கிய மாவோசேதுங்கின் மேற்கோளைத்தான் நிறுவனத்திற்கு பெயராக வைத்திருக்கிறார்கள். பெயர் மட்டும்தான் இப்படி. மற்ற விஷயங்கள் எல்லாமே நவீனமாக உள்ளது. குறிப்பாக, பொருட்களை வாங்குவது, சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன ஆப் இயங்குகிறது. சீனாவில் உள்ளவர்கள், ஷியாவோஹாங்சு ஆப் மூலமாக உள்நாடு, தெற்காசியா முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பயணித்து சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் கூட அங்குள்ள உணவகங்கள் இந்த சீன ஆப்பின் லோகோவை கடைகளில் வைத்திருந்தனர். அந்தளவுக்கு சுற்றுலா பயணிகளுக்கும், ஹோட்டல் நிறுவனங்களுக்கும், சுற்றுலா ஏஜென்சி நடத்துபவர்களுக்கும் உற்ற துணையாக விளங்கி வருகிறது.

சீனாவில் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா செல்வதற்கான வேட்கை அதிகரித்து வருகிறது. ஷியாவோஹாங்சு ஆப், சுற்றுலா தளங்களுக்கு சென்று அதை படம்பிடித்து தளத்தில் பதிவிடுவதை ஊக்குவிக்கிறது. சீனப்பயணிகள், ஹாங்காங், இந்தோனேஷியா, டென்மார்க் என பல்வேறு நாடுகளுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்கள். இது, அத்தளத்திலுள்ள பிறருக்கும் ஊக்கமாக அமைகிறது. அவர்களும் பணத்தை சேமித்துக்கொண்டு ஆப்பில் காட்டியுள்ள இடத்திற்கு பிரியமானவர்களோடு பயணித்து வருகிறார்கள்.

உள்நாடு, வெளிநாடு என இரண்டு வகைமையிலும் ஷியாவோஹாங்சு சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா ஏஜென்சியை நடத்தி வந்த கோயன் என்பவர், தனது நிறுவனத்தை மூடிவிடலாம் என நினைத்திருக்கிறார். அப்போது அவரது நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கு வந்த சீனப்பயணி, ஷியாவோஹாங்சு ஆப்பில் அவரது நிறுவனத்தை இணைத்துவிட்டிருக்கிறார். அதன் வாயிலாக, அவருக்கு மாதம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீன பயணிகள் வாடிக்கையாளர்களாக கிடைத்திருக்கிறார்கள்.

சுற்றுலா செல்லும் பயணிகள் பல்வேறு நபர்கள் கூறும் வார்த்தைகளை முழுமையாக அப்படியே நம்பவேண்டுமென்பதில்லை. எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள் பற்றி முழுமையாக விசாரித்து, இணையத்தில் தேடிப் பார்த்துவிட்டு செல்வது நல்லது. அழகாக புகைப்படங்களில் தெரியும் இடங்களில் சேவை திருப்திகரமாக இருக்காது.

மெட்டாவின் ஆப்கள் பலவும் சாதி,மதம், இனம் என கலவரங்கள் உருவாக காரணமாக உள்ளது. பேரினவாத கட்சிகளுக்கு அடிவருடியாக மாறிவிட்டது. தொடக்கத்திலிருந்து ஆக்கப்பூர்வ விஷயங்கள் மறைந்துவிட்டன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமை ஒத்தது என கூறும் ஷியாவோஹாங்சு சுற்றுலாவை ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. மந்த நிலையில் உள்ளது என விமர்சிக்கப்படும் சீனப்பொருளாதாரம் சுற்றுலாவின் மூலம் மீண்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.  ஷியாவோஹாங்சுவை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் வயது 35கும் கீழ்தான் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.


சீனர்கள் இந்த ஆப்பை பயன்படுத்தினால் சரி. ஆனால், நாங்கள் எப்படி பயன்படுத்துவது என மற்ற நாட்டினர் கேட்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் சென்று rednote என்று தட்டச்சு செய்தால் ஷியாவோஹாங்சுவின் சர்வதேச வர்ஷன் கிடைக்கும். நினைவக அளவு 140 எம்பி என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதை நிறுவிக்கொண்டால் சுற்றுலா சார்ந்து வணிகம் செய்து வருபவர்களுக்கு, வணிகம் பெருக உதவியாக இருக்கும். 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=http://www.xiaohongshu.com/&ved=2ahUKEwj8wfTEp5mJAxWVQfEDHbivCrEQ-TAoAHoECDUQAQ&usg=AOvVaw3OjbTl1FN-wSl06fbPZoQu

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://play.google.com/store/apps/details%3Fid%3Dcom.xingin.xhs%26hl%3Den&ved=2ahUKEwiox4HtppmJAxVKR_EDHc4WBVQQFnoECBcQAQ&usg=AOvVaw3iilCHLw-hIeGHViGNsHuH
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்