காதல் தோல்வியின் வலிக்கு பிற பெண்களைக் காதலிப்பதே மருந்து என காதல் வெறியில் அலையும் நாயகன்!

 

 





 

 

மனு சரித்திரா
தெலுங்கு
சிவா, பிரியா, மேகா,
இசை கோபி சுந்தர்

காதலுக்கு மருந்து காதலே என பெண்களை காதலித்து கைவிடும் வினோதமானவனின் கதை.

ஒருவரியில் நாயகனின் கதை கேட்க பரவாயில்லை என்றாலும் அதை படமாக்கிய விதம் நம்மை கடுமையாக சோதிக்கிறது. நாயகன் மனு, ஜெனிஃபர் என்ற பெண்ணை கல்லூரியில் பார்க்கிறான். காதலிக்கிறான். ஆனால், அந்த காதல், காதலியின் சகோதரர்களால் கைகூடாமல் போகிறது. அந்த காதல் தோல்வியில் விழுந்த நாயகன், திருமணமான காதலியை நினைத்து மது, போதைப்பொருள், சிகரெட் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிறான். அப்போது நெருங்கிய நண்பன் சொன்ன யோசனையின் பேரில் ஜெனிஃபரை கற்பனை செய்துகொண்டு பிற பெண்களை காதலிக்க தொடங்குகிறான். காதல் மட்டுமே பெண்கள் யாரேனும் கல்யாணம் என்று பேச்சு எடுத்தால் உடனே பிரேக்அப் சொல்லி கிளம்பிவிடுகிறான்.
காதல் என்றால், காதலியை படுக்கையில் வீழ்த்தி பயன்படுத்திக்கொள்வது நாயகன் மனுவுக்கு ஒத்துவராத ஒன்று. தொடுவது, முத்தம் கூட இல்லாத டி ராஜேந்தர் வகை பரிசுத்தமான நாசூக்கான காதல். அதேநேரம், காதலிகளுக்கு பரிசாக நகையோ, உணவோ வாங்கித்தருவதில் கஞ்சத்தனமும் காட்டுவதில்லை. காதலிக்க காசு வேண்டுமே இதற்காகவே மெக்கானிக்காக பல்வேறு கடைகளில் வேலை செய்து சம்பாதிக்கிறான். சம்பள நாள் வந்ததும் காசை வாங்கியவுடன் வேலையை விட்டு நின்றுவிடுகிறான்.

ரவுடி ஒருவரின் தங்கையைக் காதலிக்கிறான். எப்போதும் போல கழற்றிவிடுகிறான். அடுத்து இன்னொரு பெண்ணை காதலிக்கிறான். ஆனால், அந்த பெண்ணுக்கு மூளையில கட்டி என தெரியவருகிறது. அதற்கு அறுவைசிகிச்சை செய்ய இருபத்தைந்து லட்சம் தேவைப்பட, அதற்காக ரவுடி ஒருவரிடம் வேலைக்குச் சேர்கிறான். மருத்துவமனையில் காதலி தனக்கு மூளையில் புற்றுநோய் என்று சொல்லி ஏமாற்றியது தெரியவருகிறது. அவள், வேறு யாருமல்ல ரவுடியின் தங்கை ஏற்பாடு செய்த போலிக்காதலி. இந்த இடத்தில் நாம் எதிர்பார்த்த ஃபிளாஷ்பேக் தொடங்குகிறது. படத்தில் இரண்டு கதைகள் உண்டு.

ஒன்று, நாயகன் மனுவின் தீராத காதல் கதை. அடுத்து, வாரங்கல் மேயராக உள்ள ஜனார்த்தன், அவருக்கு உதவி செய்யும் ரவுடியின் கதை.

படமாக தொடங்கும்போது ரவுடியின் கதை, அவர் எப்படி இயங்குகிறார் என காட்டுகிறார்கள். படத்தை சற்றே பார்க்க வைப்பதாக மாற்றுவது இந்த காட்சிகள்தான். காதல் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. இத்தனைக்கும் படத்தில் மூன்று நாயகிகள் உண்டு. மூன்றாவதாக வரும் ஜானு என்ற நாயகிக்கு சற்று அதிக இடம் உள்ளது. இந்தி தெலுங்கு என இருமொழிகளையும் கலந்து பேசும் நாயகி.

வாரங்கல்லில் மேயருக்கு உதவும் ரவுடி, அரசியல், தொழில் லாபத்திற்காக நிறையப்பேர்களை கொலை செய்கிறார். அவர்களை இரும்பு ராடைக் கட்டி ஆற்றில் தூக்கி வீசிவிடுகிறார். இதனால் உடல் காவல்துறைக்கு கிடைப்பதில்லை. காணவில்லை என எழுதி வைத்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில் நாயகன் மனு, ரவுடிக்கு அடியாளாக சென்று வேலையில் சேர்கிறார். தனது புத்திசாலித்தனத்தால் சந்தித்த முதல்முறையே ரவுடியின் உயிரைக் காப்பாற்றுகிறார். பிறகு இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அதற்கு பதிலாக வேலை செய்ய உறுதி கொடுக்கிறார். ரவுடியிசமே வேண்டாம் என வெறுப்பவர், தான் கொடுத்த வாக்குக்காக காசை திரும்பக் கொடுத்தும் அடிதடி வேலைகளை செய்து வருகிறார். இந்தக்கதையே சுவாரசியமாக இருந்தது. பதிலாக அவரது காதல் கதை இழுவை. அவரின் வலியை பார்வையாளர்களால் உணரமுடியவில்லை. காதலை வலுவாக உணர்த்தவில்லை என்பதால் எல்லாம் மேலோட்டமாகவே கடக்கிறது.

படத்தில் காதலை வெட்டி வைத்துவிட்டு ரவுடி கேங்கின் கதையை திரில்லர் படமாக எடுத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். சோற்றுக்குள் நூடுல்ஸைப் போட்டு குழப்பியதைப் போல எந்த வகையிலும் சேராத படமாக வந்திருக்கிறது. நடிகர் சிவா, ஜானுவாக நடித்துள்ள பெண், சுகாஸ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். ரவுடியாக வரும் தாலி தனஞ்செயனும் மோசமில்லை. நாயகன் பங்குபெறும் சண்டைக்காட்சிகளில் வேகம் குறைவு. அதையாவது கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம்.

காதலுக்கான டோஸ் குறைவு. வலிக்கான டோஸ் அதீதம்.

கோமாளிமேடை குழு 


https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://en.wikipedia.org/wiki/Manu_Charitra&ved=2ahUKEwjpvJGS9ZuJAxUxhv0HHXbaAFkQFnoECBcQAQ&usg=AOvVaw0YaKY2mOKRrJG7Q7r3lQMg

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3DeI4SkRFj-wg&ved=2ahUKEwjpvJGS9ZuJAxUxhv0HHXbaAFkQtwJ6BAgVEAI&usg=AOvVaw2mCW_1du_eUECvpvpQPuFl

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்