மனைவி கருவுற்றதற்காக ஆணுறை நிறுவனத்தின் மீது ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரும் கணவன்!
ஜானக அய்தே கானக
சுகாஸ், சங்கீர்த்தனா விபின், முரளிசர்மா, வெண்ணிலா கிஷோர்
சிறிய பட்ஜெட் படம். கதை, அழுத்தமான திரைக்கதையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே சிறப்பாக பங்களித்துள்ளனர். அமைப்பு ரீதியாகவே மேல், கீழ், பணக்காரன், ஏழை வர்க்க வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதுதான் சிக்கலாக மாறி வறுமையிலுள்ள, மத்தியதர வர்க்க ஆட்களை வேட்டையாடுகிறது என படம் பேசியிருக்கிறது.
படத்திற்கு பெரிய பலம், சுகாஸின் ஆத்மார்த்தமான நடிப்பும், அவரின் மனைவியாக நடித்துள்ள சங்கீர்த்தனாவின் சூழலுக்கு பொருத்தமான அழுத்தமான உள்ளடங்கிய பாத்திரமும்தான்.
சுகாஸ், மேஜிக் வாஷ் என்ற வாஷிங்மெஷின் கம்பெனியில் விற்பனை, பழுது பார்ப்பது ஆகிய வேலைகளை செய்யச் சேருகிறார். வார இறுதியில் பாருக்கு சென்று குடிக்கும்போது, அங்கு வெண்ணிலா கிஷோர் அறிமுகமாகிறார். கிஷோர் வக்கீல். சுகாஸ், வாஷிங்மெஷின் விற்பவர். இருவரும் தங்களது வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், வாழ்க்கைச் செலவுகள்,பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுப்பது, மனைவியுடனான உறவு என பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
சுகாஸிற்கும் அவரது அப்பாவிற்கும் எப்போதும் முரண்பாடும் சண்டையும் உண்டு. மகன் சொல்லும் இடத்தில் அப்பா இடத்தை வாங்கிப்போடவில்லை. அதோடு, மகன் சொன்ன இடத்தில் குடியிருப்புகள் வந்துவிட்டன. ஆனால், அப்பா வாங்கிப்போட்ட இடம் சதுப்புநிலம் போலாகி தண்ணீர் தேங்கி நிற்கிற இடமாகிவிட்டது. அப்பா, ஏதேனும் சொல்லும்போது சுகாஸ் அவரை அழைத்து தான் சொன்ன இடத்தில் குடியிருப்பு வந்திருப்பதைக் காட்டுகிறார். அவரது அப்பாவிற்கு அதுவே பெரிய அவமானமாகிப் போகிறது. சுகாஸ், அவனது அப்பா, அம்மா, மனைவி இவர்களுக்கு இடையிலான உரையாடல் கேலியும் கிண்டலுமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக பாட்டியுடனான உரையாடல் காட்சி வேடிக்கையானது. படத்தின் இறுதியில் சுகாஸிற்கு இரட்டை பிள்ளைகள் எப்படி பிறந்தது, அடுத்த பிள்ளை எப்படி பிறக்கும் என்பதை அவர் காட்டுமிடம் அட்டகாசம்.
சுகாஸ் தனது பிள்ளைக்கு சிறந்த பள்ளி, சிறந்த மருத்துவமனை, சிறந்ந கல்லூரி என அனைத்தும் சிறப்பாக திட்டமிடுகிறார். ஆனால், அதறகு அவர் செய்யும் விற்பனை பிரதிநிதி, மெக்கானிக் வேலை ஒத்துவருவதில்லை. சம்பளத்தை விட குறைகள், மேலாளரின் திட்டுகள் அதிகம் இருக்கின்றன. அதற்காக உடலுறவு இன்பத்தை அவர் அனுபவிக்காமல் இருப்பதில்லை. ஆணுறை அணிந்துகொள்கிறார். ஒருநாள் இனி விற்பனை பிரதிநிதி வேலை வேண்டாம் என அதை கைவிட்டு வீடு திரும்புகிறார். அப்போது மனைவி கர்ப்பிணியாகி விட்டாள் என செய்தி தெரிகிறது. தெரிந்தவுடன் அவர் யோசிப்பது, நான் ஆணுறை அணிந்திருந்தேனே,எப்படி நடந்தது என பிரமை பிடித்தது போலாகிறார்.
கையில் காசு சேர்ந்தால் பிள்ளை பற்றி யோசிக்கலாம் என்பதுதான் சுகாஸின் எண்ணம். அவனது லட்சியம் உடைந்து நொறுங்கிப்போகிறது. எனவே, வழக்குரைஞராக உள்ள நண்பன் கிஷோரை வைத்து, எஞ்சாய் என்ற ஆணுறை நிறுவனம் மீது வழக்குப்போடுகிறார். இழப்பீடு ஒரு கோடி. நிறுவனம் சும்மா இருக்குமா? வழக்கறிஞரை வைத்து வாதாடுகிறது. யார் வழக்கில் வென்றார்? சுகாஸின் மனைவி நிலைமை என்ன?, சுகாஸை சுற்றியுள்ள காலனிவாசிகள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என படம் விடையளிக்கிறது.
படத்தைப் பார்க்கும்போது சுகாஸின் பார்வை சரிதானே என்று தோன்றும். ஒரு பெற்றோராக, தந்தையாக மகனது வாழ்க்கைக்கு அவன் பொறுப்பேற்க நினைக்கிறான். அது தவறில்லை. ஆனால், அவனது மனைவிக்கு பிள்ளைப்பேறு சார்ந்து ஏற்படும் மன நெருக்கடி, சமூக ரீதியான அழுத்தம் பற்றி கவலைப்படுவதில்லை. சுகாஸ், சங்கீர்த்தனா இருவருமே காதல் கொண்ட தம்பதிகள், மனைவிக்கு அவள் கேட்கும் ஜிலேபியை நண்பன் கிஷோரின் பைக்கில் அலைந்து திரிந்து வாங்கிக்கொடுக்கும் பிரியம் உண்டு. ஆனால் கூட குழந்தை பெற்றுக்கொள்வதில் மனைவியின் கருத்து என்ன என்று அவன் ஏன் அறிய முயலவில்லை?
சங்கீர்த்தனாவின் வீடு, சுகாஸின் வீடு என இரண்டுமே மத்திய தர வர்க்க குடும்பங்கள்தான். பெரிய பணம்கொழிக்கிற வீடுகள் கிடையாது. பணம் சம்பாதிப்பது என்ற பிரச்னையில் சுகாஸ் வேறு வேலை தேடுவது, சுயதொழிலுக்கு முயல்வது என முயற்சிகள் செய்யலாமே? நிதி முதலீடு சார்ந்து யோசித்தால் இயக்குநர் இதற்கான பதிலாக சுகாஸின் அப்பா பணத்தை உபயோகமற்ற இடத்தில் முதலீடு செய்ததை எடுத்துக்கொள்ளலாம்.
ஆண் என்ற வகையில் மட்டுமே பொருளாதார ரீதியான பார்வையை படம் கொண்டுள்ளதோ என்று தோன்றுகிறது. மக்கள் கருத்து, ஊடகம் என்று திரைப்படங்கள் பேசுவது சமூக மாற்றத்திற்கானவை அல்ல. அது ஒரு செய்தி. அவ்வளவுதான். படம், அனைத்து விஷயங்களையும் மக்கள் கேள்வி கேட்கவேண்டும், தீண்டாமையை வசதியானவர்கள் பயன்படுத்தி வறுமையில் உள்ளோரை ஒடுக்குகிறார்கள், அரசு கல்லூரி, மருத்துவமனையை பயன்படுத்துவது ஏழை மக்கள் என அடையாளப்படுத்துகிறார்கள் என வர்க்க மேலாதிக்கம் பற்றியும் சுட்டிக்காட்டுகிறது.
சங்கீர்த்தனா, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறாள். சுகாஸ், கருவை கலைக்க கூறுவதில்லை. அதேசமயம், குழந்தைகளை வளர்ப்பது பற்றிய பொருளாதார கவலை அவனை வாட்டுகிறது. அவனை கேள்வி கேட்கும் அப்பாவைக் கூட்டிச்சென்று மருத்துவமனை கல்லூரி என பல்வேறு இடங்களில் அலைந்து ஆகும் செலவைக் காட்டுகிறான். அவனது தந்தை விரல் விட்டு எண்ணியும் கூட செலவு கட்டுப்படியாகவில்லை. அதேநேரம், சுகாஸை நல்லபடியாக வளர்த்த பெருமிதம் அப்பாவாக அவருக்கு இருக்கிறது.
இந்தப்படம் பற்றி பேசும் காலத்தில் ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு, தெலுங்கு மக்கள் கூடுதலாக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என அறைகூவல் விடுத்திருக்கிறார். அதற்கடுத்து, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கூட பதினாறு செல்வங்கள் போல தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர் நிறைய பிள்ளைகளைப் பெறவேண்டும் என வலியுறுத்தி பேசியிருக்கிறார். இது எந்தளவு சாத்தியம் என்பதை, மாநில ஆட்சித்தலைவர்கள் யோசிக்கவில்லை. வெறும் அரசியல்ரீதியாகவே உத்தேசித்து பேசுகிறார்கள். ஒரு பிள்ளையை படிக்கவைக்கவே மத்திய தர ஆட்களுக்கு நாக்கில் நுரை தள்ளிவிடுகிறது. இதில் எப்படி, நிறைய பிள்ளைகளைப் பெற்று படிக்க வைப்பது?
ஆந்திர முதல்வர், அவரது மாநிலத்தில் தாய்மொழியில் வெளிவந்துள்ள இந்த படத்தைப் பார்த்துவிட்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்வது பற்றி கருத்து கூறட்டும். சரியாக இருக்கும். அதிலாவது, திருப்பதி லட்டு விவகாரம் போல அவமானப்படாமல் இருக்கலாம்.
சங்கீர்த்தனாவின் பாத்திரம், பெண்களின் பார்வையை சொல்வதாக இருந்தால் இன்னும் படம் வலிமையாக இருந்திருக்கும். குறைந்தபட்சம் மருமகனான சுகாஸை, சங்கீர்த்தனாவின் அம்மா புரிந்துகொள்கிறார். சிறப்பு. ஆனால், அவரும் கூட குழந்தை பிறப்பு பற்றி அவர் கொண்டுள்ள கருத்து பற்றி சொல்லுவதில்லை. மகளை நீதிமன்றத்திற்கு கூட்டிவந்து, பேச வைக்கிறார். மருமகன் மகள் மீது பிரியம் வைத்துள்ளான் என்பதை அவர் புரிந்துகொண்டு மகளுக்கும் விளக்குகிறார். பொருளாதார பிரச்னைகள் கடந்த பிள்ளைப்பேறு பெண்ணுக்கு தேவையா இல்லையா என்பதைப் பற்றி நீதிமன்றத்தில் சொல்ல முடிந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். வழக்குரைஞர் முரளி சர்மா, சுகாஸின் மனைவியின் சுயமரியாதை, தன்மானத்தை இழிவுபடுத்தும்படி அந்தரங்கமான கேள்வியைக்கேட்கிறார். அதற்கு சங்கீர்த்தனா தைரியமாக பதிலும் கூறுகிறார். அந்த இடத்தில் குழந்தையைப் பெற்றுக்கொள்வது பற்றி அவரின் பார்வையைக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒரு மையப்பொருளை எடுத்துக்கொண்டு நீதிமன்ற டிராமாக சமூகத்தை கேள்வி கேட்கிற கதை. அதில் பாலின பாகுபாடு இல்லாமல் பெண்ணையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தந்தையாக ஒருவரின் பார்வையை இயக்குநர் கூற முயன்றிருக்கிறார். கதை, அதற்கேற்ற நடிகர்கள், கதையைத் தாண்டிச் செல்லாமல் கட்டுக்கோப்பாக கூறியது என்ற வகையில் திரைப்படம் சிறப்பாக உள்ளது.
கேள்விக்கென்ன பதில்?
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக