மரபணு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ - மருத்துவ நோபல்பரிசு 2024

 







நோபல் பரிசு 2024


நடப்பு ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு அறிவியலாளர்கள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணுக்கள் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மரபணுக்களின் செயல்பாட்டை ஒழுங்குமுறை செய்வது மைக்ரோஆர்என்ஏ. பல கோடி ஆண்டுகளாக உயிரியல் மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது மைக்ரோஆர்என்ஏ. டிஎன்ஏவில் மரபணு தொடர்பான தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. செல்களில் உள்ள உட்கருவில் டிஎன்ஏ உள்ளது. இத்தகவல்களை எம்ஆர்என்ஏ மூலக்கூறு பிரதி எடுத்து வைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்ய குறிப்பிட்ட மரபணுக்கள் உதவுகின்றன.

உடலிலுள்ள திசுக்கள் பல்வேறுவித புரதங்களை உருவாக்குகின்றன. இவை, குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்ய உதவுகின்றன. வேலை செய்ய, தகவல்தொடர்பு கொள்ள என குறிப்பிடலாம். மரபணுக்களின் ஒழுங்கான செயல்பாடு, மூலமே உடல் பிரச்னையின்றி இயங்குகிறது. இதில் பிரச்னை நேர்ந்தால், உடலில் நீரிழிவு, நோய்எதிர்ப்பு சக்தி சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்.

இன்று மருத்துவ நோபல் பரிசு வென்றுள்ள இரு ஆராய்ச்சியாளர்களும், 1980ஆம் ஆண்டிலிருந்தே ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டியாக நோபல் பரிசு வென்ற ராபர்ட் ஹார்விட்ஸ் இயங்கினார். சி எலிகன்ஸ் என்ற விலங்குகளின் செல் அமைப்பை ஒத்த வட்டவடிவான புழு ஒன்றை ஆராய்ந்து வந்தனர். இதை வைத்து திசுக்கள் எப்படி வளருகின்றன என கவனித்தனர். இந்த புழுவில் லின் 4, லின் 14 என்ற இரு மரபணுக்கள் சற்று வேறுபட்டதாக இருப்பதைக் கண்டனர். இரு மரபணுக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையை ஆழ்மனதில் உணர்ந்தாலும் அதை இரு ஆராய்ச்சியாளர்களாலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வகத்தை ஆம்ப்ரோஸ் அமைத்து இயங்கத்தொடங்கினார். அப்போது லின்-4 மரபணுவைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தார். அதில், லின் 4 மரபணுவில் மைக்ரோஆர்என்ஏ உள்ளதும், அது லின் 14 மரபணுவை தடை செய்வதையும் கண்டார். இதேகாலத்தில் ருவ்குன், லின்14 மரபணுவை ஆராய்ந்து வந்தார். லின்4 மரபணு, லின்14க்கான மைக்ரோ ஆர்என்ஏவை உருவாக்கி, அது சுயமாக புரதம் உருவாக்குவதை தடுப்பதைக் கண்டார். இருவரும் தங்கள் ஆய்வை ஒப்பிட்டுப் பார்த்தனர். 1993ஆம் ஆண்டில் இதுபற்றிய ஆய்வறிக்கை வெளியானது.

2000ஆம் ஆண்டில், ருவ்குன் குழு, லெட்7 என்ற இன்னொரு மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்தது. இது மனிதர்களின் உடலிலும் உள்ளது. இந்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு வழியாகவே மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வில் முக்கியமான அம்சம் வெளியாகியுள்ளது.
ஐஇ - கௌனைன் ஷெரிப் எம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்