சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்

 

 

 

 

 





 

சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்

வணிக ரீதியான போட்டியை, தொழில் சார்ந்து நிறுவனங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். போட்டியை சமாளிக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். கரிம எரிபொருள் வாகனமோ, மின் வாகனமோ புதுமைகளை புகுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கு குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய சீன மின் வாகனங்களை ஐரோப்பிய கமிஷன் முப்பத்து மூன்று சதவீத வரியை விதித்து தடுக்க முயல்கிறது. குறிப்பாக அவர்களது இலக்கு, பைடு என்ற சீன மின் வாகன நிறுவனம்தான். இந்த நிறுவனம், மின்வாகனங்களை டெஸ்லாவை விட தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வருகிறது.

இதைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டுக்கான கார்பன் வெளியீட்டு இலக்கைக் கூட ஐரோப்பிய கமிஷன் அடையமுடியும். பதிலாக, சீனாவின் மின்வாகன இறக்குமதிக்கு அதிக வரியை விதித்து அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. இந்த வரி விதிப்பிற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பைடு, ஜீலி ஆகியவற்றோடு வெளிநாட்டு நிறுவனங்களான டெஸ்லா கூட மின் வாகனங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனங்களும் கூட புதிய வரி விதிப்புக்கு தப்பிக்க முடியாது. சீனாவின் மின் வாகனங்கள் மூலம் சூழல் பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். அவை, பிற நிறுவனங்களை விட விலை குறைவாகவும் வசதிகள் நிறைவாகவும் உள்ளன. ஆரோக்கியமான போட்டி என்றால் என்ன செய்யவேண்டும்? சீன வாகனங்களை விட வசதிகளை அதிகமாக கொடுத்து அவற்றோடு போட்டியிடவேண்டும். ஆனால், மேற்கு நாடுகளிலுள்ள நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு, அச்சுறுத்தல் என வணிக போட்டியை வேறு தளத்திற்கு நகர்த்தி வருகிறார்கள். உண்மையில் இன்று வரை ஐரோப்பாவில் ஐந்து வாகனங்கள் விற்கிறது என்றால் அதில் ஒன்று சீன நிறுவனத்துடையது. ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மின்வாகனங்களின் பங்களிப்பு மூன்று லட்சம்தான். ஆனாலும் மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு பீதி குறையவில்லை.

சீன அரசு, தனது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அதனால் அவர்கள் தங்களுடைய தயாரிப்பை குறைவான விலைக்கு விற்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தாலும் அது விதிக்கு புறம்பானது ஒன்றும் கிடையாது. வெளிநாட்டு நிறுவனமான டெஸ்லாவுக்கு சீன அரசு, மானிய உதவிகளை வழங்கி ஆதரிக்கத்தானே செய்கிறது?

உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கிறேன் என்று ஐரோப்பிய கமிஷன் பாதுகாவலன் வேடமிடுவது, அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் கூட எந்தவித நல்ல பயன்களையும் வழங்கப்போவதில்லை. இவர்கள் விதிக்கும் வரியால், உள்நாட்டு நிறுவனங்களின் வாகனங்களை அதிக விலைக்கு வாங்கவேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகிறது. உள்நாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செலவை சீன நிறுவனங்கள் அளவுக்கு குறைக்க முடியவில்லை. மெல்ல சந்தையில் தங்களது பங்களிப்பை இழந்து வருகின்றன.

பிரன்ட்லைன் - சந்திரசேகர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்