இளைஞன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருமணம் செய்ய பெண் தேடினால்....

 

 

 


மேரேஜ் வைப்ஸ்
சபரீஷ், மகிமா

director - harish
வைரலி தமிழ் யூட்யூப் சேனல்

ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய சிறிய வெப் படம். முதல் காட்சியில் சபரி, தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலையை விட்டு நின்றுகொள்வதாக கடிதம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு மகன் மீது பிரியம். சபரிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சக்கரம் போல சுற்றும் கடிகார வாழ்க்கை போரடிக்கிறது. எனவே, அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். பெண் பார்க்கும் சடங்கு எல்லா இடத்திலும் ஒன்றுபோல்தான். பையனது வேலை, சம்பளம், சொத்து என அனைத்தையும் கேட்கிறார்கள். இதில் சபரிக்கு வேலை இல்லை என்றதும் பெண் பார்க்கும் தரகர்கள் அனைவரும் போனை உடனே துண்டிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே அவனை சந்திக்க வருகிறாள். அவள்தான் மகிமா. உண்மையில் அவள் ஏன் சபரியை சந்திக்க விரும்பினாள் என்பதுதான் இறுதிக்காட்சி.

தமடா மீடியாவின் யூட்யூப் சேனல்களில் ஒன்றுதான் வைரலி தமிழ். நடித்துள்ள நடிகர்கள் சபரி, மகிமா என இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மகிமாவை யூட்யூப் தம்ப்னைலில் பார்த்துவிட்டு யூட்யூப் படத்தை பார்க்க வருபவர்களே அதிகமாக இருப்பார்கள். அம்மணி கட்டுசெட்டான நடிக்கத் தெரிந்த அழகி.

வேலை, திருமணம் மூலம் ஆண், பெண் என இருவரின் மீது திணிக்கப்படும் நிபந்தனைகள், விதிமுறைகளை பற்றி  இந்தப்படம் பேச முயல்கிறது. சினிமாக்களில் கூட காதல்காட்சிகளை இதுபோல எடுப்பார்களா என்று தெரியவில்லை. சபரி அறிமுகம், முதல் வசனமே சிறப்பாக உள்ளது. படம் வீடு, ஐஸ்க்ரீம் கடை, மொட்டை மாடி என நிறைய இடங்களுக்கு பயணிக்கிறது. எவையும் அலுப்பூட்டுவதாக இல்லை.

பெண் பார்க்க செல்லும்போது சபரியின் அம்மா அவனுக்கு கூறும் அறிவுரை ரசிக்கவைக்கிறது. மறுபுறம், தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட கவனமாக கண்ணியமாக பேசும்படி மகளுக்கு, அவளது அம்மா கூறும் அறிவுறுத்தல் சிறப்பு.

சிவா டீ மட்டுமே குடிப்பவன். மகிமா, காபியை ரசிப்பவள். இந்த இருவரும் இன்னொருவரின் விருப்பங்களை நிராகரிப்பதில்லை. தங்களுடையதை அப்படியே தொடரவேண்டும் என பிடிவாதமும் பிடிப்பதில்லை. நண்பன் வீட்டு மொட்டை மாடியில் மகிமா, சபரீஷ் பேசும் உரையாடல்கள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. இதில், சபரீஷ் கொண்டுள்ள கடைபிடிக்கும் கொள்கை, வாழும் வாழ்க்கை பற்றி திடமான உறுதி வெளிப்படுகிறது. காபியை மகிமா ஒருவாய் பருகியதும் எனக்கு இப்போ காபி குடிக்கணும்னு தோணுது என கேட்டு வாங்கிக் குடிப்பது அழகு. இறுதியாக பேசும் வசனப்பகுதி இன்னும் வலிமையாக இருந்திருக்கவேண்டும்.

சபரி டீ போட்டு தருவீங்களா என்பதும், பதிலுக்கு மகிமா நீ வேலைக்கு போகலீனா, டீ போட்டுத் தருவேன் என கூறுகிறார். மகிமா, பொருளாதார சுதந்திரம் உடைய பெண். அவள் சபரிக்கு டீ போட்டுத் தருவேன் என சொல்வதை விட சபரி அவளுக்கு காபி போட்டுத் தருவேன் என சொல்லியிருந்தால் இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும்.

சபரியின் பாத்திரம் நேரடியான மொழியைக் கொண்டது. உண்மையை பேசவேண்டும் என விரும்புவது. தனக்கு இழப்பு நேரிடும் என்றாலும் கூட உண்மையைக் கைவிடாத இயல்புடையது. மகிமாவை முதன்முறையாக பார்த்தாலும் கூட அவளின் உடை, அழகு என பொதுவான எந்த விஷயத்தையும் அவன் பேசுவதில்லை. அழகாக இருக்கிற பெண், ஐடியில் நிறைய சம்பாதிப்பவள் ஆனால் வேலையில்லாத தன்னை எதற்கு சந்திக்க விரும்புகிறாள் என்பது அவனுக்கு புரிவதில்லை. முதல் சந்திப்பிலும் கூட தன்னால் மகிமா சங்கடங்களை சந்திக்கக்கூடாது என சபரியால் யோசிக்க முடிகிறது. என்னை வேண்டாம்னு சொல்லிடுங்க என தயக்கத்துடன் கூறிவிடுகிறான்.

மகிமாவுக்கு அவன் அப்படி கூறுவதே ஆச்சரியமாக உள்ளது. அதுவரை அவளிடம் பேசியவர்கள், அழகு, அவளின் உடை தேர்வு, வாங்கும் சம்பளம், சொத்து என பேசியவர்களே அதிகம். இவை எதையும் சபரி பொருட்படுத்துவதே இல்லை. மகிமா காபி பிடிக்குமா என்று கேட்டதற்கு கூட, அவளை காயப்படுத்திவிடுமோ என்ற கவனத்துடன் பேசுகிறான். குடித்த காபி பற்றி உண்மையை பேசவும் அவனுக்கு தைரியமுள்ளது.

பின்னணி இசையில் சிறு பாடல்கள் உள்ளன. புல்லாங்குழல் இசை வரும் பகுதி கேட்க நன்றாக உள்ளது.

கோமாளிமேடை குழு 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://m.youtube.com/watch%3Fv%3DzApD-mmznAs&ved=2ahUKEwikx_Lqu6OJAxWvWUEAHcFCMk4QtwJ6BAgKEAI&usg=AOvVaw0dT5ylhO8dIry9rp909wIB

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்