அகிம்சை வழியில் பிறருடன் கலந்துரையாட உதவும் நூல் - நான் வயலன்ட் கம்யூனிகேஷன்

 

 

 





 

 

நான் வயலன்ட் கம்யூனிகேஷன்

 ரோசன்பர்க்


இந்த நூல், படிக்கும் வாசகர்களுக்கு வன்முறையில்லாத வகையில் எப்படி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. ஒருவரின் பேச்சு என்பது முன்முடிவுகள், தீர்ப்புகள், புகார் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை கூறவேண்டும் என கூறி அதற்கான எடுத்துக்காட்டுகளை விளக்குகிறது. இதில் முக்கியமான விஷயம் தனது தேவைகளை பிறரை புகார் கூறும் வடிவில் கூறுகிறோம் என பேசுபவருக்கும் தெரியாது. கேட்பவருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நிறைய கருத்து முரண்பாடுகள், வன்முறை உருவாகிறது. அதை எப்படி தவிர்க்கலாம் என நூல் பல்வேறு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்குகிறது.

பரிசு, தண்டனை என்ற வகையில் ஒருவரை வேலையை செய்ய வைப்பது எப்படி தவறாக முடியும் என்பதை நூல் விளக்கியுள்ளது முக்கியமான அம்சம். உளவியல் ரீதியாக பரிசு, தண்டனை விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கு உதவக்கூடும். ஆனால்  மனிதர்களுக்கு பெரிய பலன் அளிக்காது.

சாதாரண பேச்சு, ஓரிடத்தில் சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டுகிறது. இன்னொரு இடத்தில் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கருத்தை வித்திடுகிறது. இதற்கு என்ன காரணம்? பேசுபவரின் மனதிலுள்ள உள்நோக்கமும், எதிர்கால லாபத்தை கருதிய தொலைநோக்கு பார்வையும்தான். மக்களை பிரித்து கலவரம் செய்து சாதி ரீதியாக தேர்தலில் வெல்ல நினைப்பவருக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையிருக்காது. நீதிமன்றம் சென்றாவது கலவர பேரணி நடத்துவதற்கு அனுமதி வாங்கி சிறுபான்மையினர் உள்ள இடத்திற்கு சென்று வழிபாட்டுத்தலங்களை இடிப்பார்கள். அதை வைத்தே கலவரம் செய்வார்கள். இதற்கு வித்திடுவது பாகுபாடான கருத்துகளும், முன்முடிவான எண்ணங்களும், நம்முடைய தோல்விக்கு பிறரே காரணம் என்று எண்ணும் பயமும் என நூல் வலுவாக எடுத்துச் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது.

ஒருவர் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த கூறினால் கூட பிறரின் கருத்துகள், பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்ற விமர்சனத்தை மனதில் கொண்டுதான் பலரும் கருத்துகளை பதிவிடுகிறார்கள். இதுவே, நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை விளக்கிவிடுகிறது. அப்படியின்றி, உண்மையில் ஒரு விவகாரத்தை, பிரச்னையை நாம் எப்படி கருத்தூன்றி கவனிக்கிறோம், நமக்கு என்ன தோன்றுகிறது என்பதே முக்கியம் என நூலாசிரியர் ரோசன்பர்க் விவரித்து கூறுகிறார்.

இந்த நூலை வாசிக்கும் ஒருவர் தன்னுடைய கருத்துகளை நயம்பட வினயமாக எப்படி கூறுவது, உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது என கற்றுக்கொள்வார். அல்லது குறைந்தபட்சம் பேசும்போது என்ன பேசுகிறோம் என்பதையாவது கவனிப்பார். அந்தளவு பேச்சில் கவனமாக இருக்கவேண்டும், பிறரை காயப்படுத்தக்கூடாது என நூல் குறிப்பிடுகிறது. நூலில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரோடு ரோசன்பர்க் உரையாடும் பகுதி நெகிழ்ச்சியானது. தொடக்கத்தில் நூலாசிரியரை கொலைகாரர், உடனே இங்கிருந்து வெளியேறு என்று கூறுபவர் மெல்ல ரோசன்பர்க் பேச்சில் கவரப்பட்டு அவரை அழைத்து தனது வீட்டு ரமலான் விருந்தை பரிமாறி அனுப்பி வைக்கிறார். இதற்கு ரோசன்பர்க் செய்வது பெரிதாக ஏதும் இல்லை. தன் மீது கோபம் கொண்டவரின் புகாரைக் கேட்டார். அவரது பிரச்னைகளை அமைதியாக கேட்டார். அதில் இடையூறு செய்யவில்லை. குறுக்கு கேள்விகள் எதையும் கேட்கவில்லை. தனது குறைகளை ஒருவர் காது கொடுத்து கேட்கிறார். அதுவும் தான் வெறுக்கிற நாட்டைச் சேர்ந்த குடிமகன் என்ற வகையில் பாலஸ்தீனியர், சற்று அமைதியடைகிறார். இதனால் பிரச்னைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அமைதியாக அமர்ந்து யோசிக்கும்போதுதான் பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வை அடையமுடியும்.

வன்முறை அற்ற அகிம்சை வழியிலான பேச்சு எளிதான பாதையல்ல. அதேசமயம் கடைபிடிக்க முடியாது எனவும் ஒதுக்க அவசியமில்லை. முயற்சிக்கலாம். நியோ நாஜி, பாசிச அமைப்புகள் பேரினவாத லட்சியத்தோடு வெறுப்பு பேச்சை புதிய இயல்பாக மாற்றி வரும் சூழலில், அகிம்சை வழியிலான பேச்சு, உரையாடல் என்பது சமூகத்திறகு அவசியத்தேவை

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்