இந்தியாவை மோசடி செய்யும் தொழிலதிபரை பழிவாங்கும் காவல்துறை அதிகாரி!

 

 

 







 

 

புலன் விசாரணை -2
பிரசாந்த்
ஆர் கே செல்வமணி

இந்தியாவின் கடல் பரப்பில் பெட்ரோல் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மதிப்பு இரண்டு லட்சம் கோடி. ராகேஷ் கேத்தன் என்ற அதானி போன்ற மோசடி செய்யும் தொழிலதிபர், இந்த செய்தியைக் கேள்விப்பட்டு இந்திய பெட்ரோலிய நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுத்து ஆராய்ச்சி தகவல்களை வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார். ஆராய்ச்சி செய்த இடத்தையும் வாங்கிவிடுகிறார். இதுபற்றிய தகவல் அறிந்த பொறியாளர்கள் குழுவை, டூர் அழைத்து சென்று வழியிலேயே படுகொலை செய்கிறார்கள். அதை விபத்துபோல செட்டப் செய்கிறார்கள். அதில் ஒரு இளம்பெண் மட்டும் தப்பித்து வந்து சென்னை மாநகரின் மத்தியில் மஞ்சள் சேலை கட்டி வந்து சாகும்போதும் கூட கவர்ச்சியாக வசீகரமாக செத்துப்போகிறார். அங்கு நாயகன் சபாநாயகம் இருக்கிறார்.

அவர் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்க நிறைய மர்மங்கள் வெளியே வருகின்றன. இதற்கு பதிலடியாக தனது ஒட்டுமொத்த குடும்பத்தை பலிகொடுக்கிறார். அதையெல்லாம் தாண்டி மண்ணையும், மக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இறுதிக்காட்சி.

கதை பெரிய பட்ஜெட்டில் நன்றாக எடுக்கப்பட வேண்டியது. ஆனால் அந்தளவு பட்ஜெட்டும் கிடைக்கவில்லை. திரைக்கதையும் சரியாக எழுதி திட்டமிட்டப்படி எடுக்க முடியவில்லை. சென்சார் கெடுபிடியா என்று தெரியவில்லை. டப்பிங்கில் குரல் மாறிக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்க்க ஐயோவென ஆகிறது. அடுத்து பாடல்கள். பிரசாந்தின் அருகில் உள்ள இளம்பெண், திடீரென நாயகனோடு ஒரு குத்தாட்டத்தைப் போடுகிறார். அடங்கொய்யாலா....

நாயகிக்கு வேறு தனி அறிமுகப்பாடல். இசை ஜோஷ்வா ஶ்ரீதர். சம்பள பாக்கியா என்னவோ தெரியவில்லை. மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். படத்தொகுப்பு, இசை, திரைக்கதை என அனைத்துமே கந்தர கோளமாக இருக்கிறது. பிரசாந்தின் தோற்றம் பல்வேறு காலகட்டங்களில் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போல ஒன்றில் மீசை குட்டையாக உள்ளது. ஒன்றில் நீளமாக உள்ளது. பார்க்கவே வேடிக்கையாக உள்ளது.

அதிலும் சண்டைக் காட்சிகள்தான் உரையாடல் காட்சிகளை விட மோசமாக உள்ளது. அதிலும் கிளைமேக்சில் நாயகன் செய்யும் திருப்புமுனை ஐடியாவையெல்லாம் பார்த்தால்.... வில்லன் என்ன நாமே டாடா கிஸ்கோல் கம்பியை எடுத்து நாயகன் வாயில் சொருகிவிடலாமா என்று தோன்றுகிறது. அப்படியொரு மடத்தனமான மூர்க்க புத்திசாலித்தனம். உண்மையில், வில்லன் ஆர்கே எதுவும் செய்யவேண்டியதில்லை. நாயகன் யோசிக்கும் நிதானம் சீக்கிரமே அவரை சுடுகாட்டில் கொண்டுபோய் வைத்துவிடும். சண்டைபோடும்போது டப்பிங் குரல், பைல்ஸ் வந்தவர் போல ஒரு குரல் கொடுக்கிறார். அதை நிறுத்தச் சொல்லுங்களேண்டா என்று தோன்றுகிறது. தொண்டையில் கிழங்கு சிக்கிக்கொண்ட நாயின் அலறல் போல ஒரு ஒலி.

சாகும், பெட்ரோல் நிறுவன ஊழியப் பெண் கூட அரைகுறை ஆடையோடு, உடலைக் காட்டியபடியே சென்று ஆனந்தராஜ் கையால் குத்துப்பட்டு, துப்பாக்கி குண்டு வாங்கி சாகிறார்கள். பாத்திரம் சாகப்போகிறது. கவர்ச்சியாவது காட்டிவைக்கலாம் என இயக்குநர் நினைத்திருக்கிறார். வில்லன்கள், நாயகன், துணை பாத்திரம் என அத்தனை பாத்திரங்களும் பேசும் வசனங்களும் என்னமோடா மாதவா என யோசிக்கும் அளவுக்கு மட்டியாக உள்ளன. எதிலும் துல்லியம் கூர்மை இல்லை.

பிரசாந்தின் உடல் மேல் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. அப்போதும் மருத்துவமனைக்கு சென்று அவரை பிழைத்தெழ வைக்கிறார்கள். அதே இடத்தில் பார்வையாளர்கள் உயிரைவிட்டுவிடுகிறார்கள். அப்புறம் நடப்பதெல்லாம் மேஜிக் மாத்திரமே....
டோன்ட் கொசின் தி எமோஷன் என சில ஜாம்பவான்கள் கூறுவார்கள். ஆனாலும் கூட இந்தப் படத்தை தாங்கிக்கொள்வது கடினம்.

இன்றைக்கு இந்தப் படத்தை பார்த்தாலுமே அம்பானி, அதானி, டாடா ஆகியோரை ராகேஷ் கேத்தன் என்ற வில்லன் பாத்திரத்திற்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். அதெல்லாம் பிரச்னையில்லை. ஆர்கேவை வேகமாக நடக்க வைத்து, விமானங்களைக் காட்டி இயக்குநர் ஏதோ சொல்ல வருகிறார். அதுதான் கடைசி வரைக்கும் புரிவதில்லை. ஆர்கே வசனம் பேசுவதும் தேனிக்காரர் போல தெரிகிறதே தவிர தொழிலதிபர் போல தெரியவில்லை. இயக்குநரின் மனைவி ஒரு காட்சியில் பத்திரிகையாளராக வந்துபோகிறார். எதற்கு புரியவில்லை. மனைவிக்கு மரியாதை....அம்புட்டுத்தான்.

ஒரு வரியாக கதை கேட்க நன்றாக உள்ளது. ஆனால் திரைப்படம் காட்சியாக பார்ப்பதற்கு என்பதை இயக்குநர் மறந்துவிட்டார். திரைக்கதை படுத்தே விட்டது. எழவில்லை. நாம்தான் படத்தை பார்க்கவேண்டாம் என எழவேண்டியுள்ளது. இப்படியெல்லாம் உதவாக்கரை படத்தில் பிரசாந்த் நடித்துள்ளாரா என ஆச்சரியமாக உள்ளது.

இறுதியாக கோர்ட்டில் குற்றவாளியை துப்பாகியை எடுத்து சுட்டுத்தள்ளிவிட்டு நீதிபதிகள் தண்டனை தருவதற்கு தயங்குகிறார்கள். நான் தந்துவிட்டேன் என போலீசில் சரணடைகிறார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காசு கொடுத்துவிட்டு வணிகம் செய்யும் ராகேஷ் கேத்தனை எப்படி அரசு தண்டிக்க முடியும்? விசாரணைக் கமிஷனின் தலைவரும் கூட அரசியல் நெருக்கடியால் பதவி விலகுகிறார். அவரது மகள் சோனியா வர்மா டென்னிஸ் வீராங்கனை. அவருக்கு வில்லன் ஆர்கே பாராட்டுவிழா நடத்துகிறார். அதையும் விசாரணைக் கமிஷன் தலைவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஆர்கேவின் குளிர்பான விளம்பரத் தூதராக நடிக்க மகளை அனுமதிக்க மறுக்கிறார்.  என்ன புத்திசாலித்தனம்!

நாயகன், சோனியா வர்மாவை மிரட்டி கடத்தி வந்து தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி வில்லனை பிடிக்க மகா மட்டமான ஸ்கெட்ச் ஒன்றை போடுகிறார். அதையெல்லாம் காட்சியாக பார்ப்பதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.கண்றாவியான காட்சி...

படத்தில் வரும் எந்த பாத்திரங்களும் உணர்வுப்பூர்வமாக இல்லை. எதையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க முடியவில்லை. அனைத்து காட்சிகளும் கடனே என கடந்து செல்கின்றன.

விசாரணையே வேண்டாமுங்க!
கோமாளிமேடை குழு

thanks

youtube -polimer channel
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்