ஒழுக்கம் நாணயம் உண்மை ஆகியவற்றை ஆராய்ச்சிப் படிப்பிலும் காதல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தும் இளைஞனின் போராட்டம்!
மிஸ்டர் கிங்
சரண்குமார் (சிவா), யாஷ்விகாநிஷ்கலா (உமா தேவி), ஊர்வி சிங்(வெண்ணிலா),முரளி சர்மா
இசை மணி சர்மா
இயக்கம் சசிதர் சாவாலி
வாழ்க்கையில் நேர்மை முக்கியம். பொய்யான விஷயங்களே பேச மாட்டேன். செய்யவும் மாட்டேன் என அடம்பிடித்து வாழும் பிஹெச்டி மாணவர் சந்திக்கும் காதல், தொழில் பிரச்னைகளைப் பற்றிய படம்.
படத்தின் நாயகன் சரண், தனது கதையை சுனிலிடம் சொல்வதுபோல கதை தொடங்குகிறது. சிங்கிள் சிவா என்பதுதான் நாயகனின் பெயர். அவர் பகுதி நேரமாக ரேடியோ சிட்டியில் தொகுப்பாளராக வேலை செய்கிறார். மீதி நேரத்தில் முனைவர் படிப்புக்கான புராஜெக்டில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவர் பெற்றோர் வீட்டை மாற்றுகிறார்கள். அப்போது சிவா, அருகிலுள்ள வீட்டுக்குச் செல்லும்போதுதான் அங்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வந்திருப்பது தெரிகிறது. அங்குதான் நாயகியை(யாஷ்விகா) சந்திக்கிறான். அந்த சந்திப்பு இருவருக்குமே தீப்பொறி போல அமைகிறது.
யாஷ்விகா, அப்பாவின் பேச்சுக்கு அடங்கிய பெண். அப்பா முரளி சர்மாவோ, தான் எடுத்த முடிவுதான் இறுதி என மேலாதிக்கம் கொண்டவராக வலம்வருகிறார். அவருக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து ரீதியான பகை உள்ளது. அண்ணனின் மகள் வெண்ணிலா, சித்தப்பாவின் வீட்டுக்கு வரும்போது சிவாவைப் பார்த்து காதல் வசப்படுகிறாள். அதற்குப் பிறகான காட்சிகளில் சிவா யார் என நிதானமாக விளக்குகிறார்கள்.
சிவா பாத்திரம் லட்சியக் கனவு கொண்டதாக, சமூக நடைமுறைகளை மீறியதாக உள்ளது. மீறியதாக என்று சொல்வது, பெருமளவு மக்கள் நேர்மையாக இருப்பதில்லை. பேசுவதும் இல்லை, நடந்துகொள்வதும் இல்லை. எனவே, சிவாவின் நேர்மை அவர்களுக்கு ஏளனத்திற்குரியதாக உள்ளது. குறிப்பாக அவனது பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு... அதற்கு ஆசிரியர் தணிகெலா பரணி கொடுக்கும் விளக்கம் அசத்தல். நாயகனுக்கான எலிவேஷன் காட்சிதான். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே கேட்பதற்கு மென்மையாக உள்ளது. மணிசர்மா நிதானமாக இசைக்கருவிகளை இசைத்திருக்கிறார். படத்தில் குத்துப்பாடல்களோ, நாயகி அரைகுறை ஆடைகளோடு வந்து ஆடிப்பாடுவதோ இல்லை. பெரிய நிம்மதியே அதுதான்.
படம் இயக்குநரின் எழுத்தை நம்பியுள்ளது. எனவே அவர் நாயகிகளின் சதை மீது நம்பிக்கை வைக்கவில்லை. படம் இரண்டு புள்ளிகளை முக்கியத்துவப்படுத்துகிறது. ஒன்று, சிவாவின் தொழில்வாழ்க்கை, அதாவது பிஹெச்டி ஆராய்ச்சி. மாசுபாட்டை குறைக்கும் தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து வருகிறார். அடுத்து, காதல் வாழ்க்கை. இந்த இரண்டிலும் அவர் எப்படி வெல்கிறார் என்பதே படம்.
நேர்மையாக உள்ளவன், பிறரை ஏமாற்றாமல் தனது காதலில் வெல்ல முடியுமா,ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியுமா என பேச வந்த படம், இடையில் தேங்கி நின்றுவிடுகிறது. சிவா செய்யும் விமான மாசுபாட்டை குறைக்கும் ஆராய்ச்சி, கல்லூரி முழுக்க பிரபலம். இந்த லட்சணத்தில் அவரது புராஜெக்டை இன்னொருவர் எப்படி திருடி அவரது மகனது பெயரை உருவாக்கியவர் என்று கூற முடியும்? அந்தக் காட்சி வேறுவிதமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எதிர்பார்த்த அதிர்ச்சியை தரவில்லை.
யாஷ்விகாவுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை. அப்பாவுக்கு அடங்கிய பிள்ளை சரி. ஆனால், தனது கருத்தை கூறத் தயங்குகிறார். ஆனால் உணர்வுகளைக் கூட வெளிப்படுத்தாமலா இருப்பார்? சிவா, ஒருவரின் கேரக்டர் பற்றி, ஒருவருக்கொருவர் கொள்ளும் நம்பிக்கை பற்றி சொல்லும் வசனம் கவனம் ஈர்க்கிறது. வசனங்களாக நிறைய காட்சிகள் ஊக்கம் தருகிறது. ஆனால் காட்சியாக ஆர்வமூட்டவில்லை. நடிகர் சரண்குமாருக்கு முதல்படம். காதல், சண்டைக்காட்சி, ஏமாற்றம், துயரம் ஆகிய காட்சிகளில் வெகுவாக முன்னேற வேண்டும். நிறைய இடங்களில் அவர் சோம்பலாக நிற்கிறார்.
வெண்ணிலாவாக ஊர்வி சிங், படத்தில் உற்சாகமாக தெரியும் ஒரே ஆள். தன்னுடைய கனவு, திட்டம் பற்றி கஃபேயில் விவரிக்கும் காட்சியை நன்றாக எடுத்திருக்கிறார்கள். இவரின் காட்சிகள் அனைத்துமே உற்சாகம் கொண்டதாக மாறுகிறது.
தெலுங்கில் நாயகன் தொடையில் தட்டி சவால் விடாமல், நாயகியின் இடுப்பு, தொப்புளில் முத்தம் கொடுக்காமல் படம் வருவது அபூர்வம். மிஸ்டர் கிங் கான்செப்ட்டான படம். அதில் தடம் புரளாமல் பயணித்திருக்க வேண்டும். புதிய திரைப்பட டிரெண்ட்படி, இரண்டாம் பாக சாபம் என கூறுவார்கள். அதேதான். இடைவேளைக்குப் பிறகு படம் எங்கு சென்று முட்டி நிற்குமோ என பார்வையாளர்கள் நினைக்கும் அளவுக்கு தடுமாறுகிறது.
யூட்யூபில் மிஸ்டர் கிங் படம் பற்றி தேடினால், ஒரு சேனலில் அதன் ட்ரெய்லரைக்கூட ரீஎடிட் செய்து போட்டிருந்தார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது, அதேதான். படத்தையும் ரீ எடிட் செய்திருக்கவேண்டும். விமான மாசுபாடு பற்றிய ஆய்வுக்கு இன்னும் நிறைய காட்சிகளை ஒதுக்கி கவனப்படுத்தியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு காதல், கல்யாணம் என படம் ஒருகட்டத்தில் தடம் புரண்டுவிட்டது. நெருக்கடியை எதிர்கொள்ளாமல் தனது பாதையில் தனியாக நடக்கும் நாயகன், ஆராய்ச்சிப்படிப்பிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரிகளால் திடீரென புதிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறான். அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை கவனப்படுத்தியிருக்க வேண்டும். முரளிசர்மாவின் செஸ் விளையாட்டு பற்றியும் சில காட்சிகளை சுவாரசியமாக சேர்த்திருக்கலாம்.
நாயகன் மனநிலை எதைக் கண்டும் கலங்காமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமலேயே இருக்கிறது. திடீரென காதல் கைகூடாது போய் ஆய்வகத்தில் புரோடோடைப்பை கீழே போட்டு உடைப்பது நம்ப முடியவில்லை. அந்த காட்சியே செயற்கையாக உள்ளது.
நன்றாக எடுத்திருக்க வேண்டிய படம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக