மிலிட்டிரி மாமனாரை வசீகரித்து டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்ய குண்டு மாப்பிள்ளை செய்யும் களேபர காரியங்கள்!
வில்லேஜிலோ விநாயகுடு
கிருஷ்ணா, சரண்யா மோகன், ராவ் ரமேஷ்
தெலுங்கு
தான் பார்க்கும் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு சரியாக இருப்பாள் என அடம்பிடிக்கும் மிலிட்டரி அப்பா. அவரை சமாளித்து குண்டான காதலனை கணவராக ஏற்கச் செய்யும் மருத்துவராக உள்ள மகள். இந்த பாசம் எனும் கோட்டிங்கில் உள்ள மேலாதிக்க போட்டியில் யார் வென்றது, தோற்றது எந்த தரப்பு என்பதே கதை.
தெலுங்கில் இதுபோல கதைகள் வருவது புதிதல்ல. மாமனாரின் ஒப்புதலைப் பெற மருமகன் பல டாஸ்க்குகளை செய்து நிரூபித்து காதலியைக் கைபிடிப்பது என்பது நிறைய படங்களில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் அமைந்திருக்கிறது. வேறுபாடு ஒன்று உண்டு. அது நாயகனின் எடை. மன்னிக்கவும். நாயகனின் குண்டான உருவம். உருவக்கேலி சார்ந்த வசனங்களே படம் நெடுக நிறைந்திருக்கிறது.
பங்குச்சந்தை விவரங்களில் புத்திசாலி, நன்றாக சமைப்பார், சமயோசித புத்தி, காதலி மீது மட்டுமல்ல பிறர் மீது காட்டும் அக்கறை என கார்த்திக் பாத்திரம், காதலியின் அப்பா, அவரது குடும்பத்தினரை விடவே பலமடங்கு மேலாக உள்ளது. ஆனாலும் படத்திலுள்ள பாத்திரங்கள் அனைவருமே கார்த்திக்கின் உடல் எடையை, பார்க்க பர்கர் மாதிரி இருப்பதைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். சாடை பேசுகிறார்கள். கிண்டலாக பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத், இந்த தெலுங்குப்படத்தில் நடித்திருக்கிறார். புதிர்களைப் போட்டு எதிராளியைக் குழப்பிவிட்டு தன்னுடைய புத்திசாலித்தனத்தை நிரூபிப்பவர், கார்த்திக்கிடம் மட்டும் ஒரே புதிரில் தோற்றுப்போகிறார். பதில் தெரியாமல் அலைந்து திரிகிறார். மிலிட்டிரிக்காரரின் நம்பகமான நண்பர் எண்டமூரிதான். பல ஐடியாக்களைக் கொடுத்து அத்தனையும் கார்த்திக்கின் புத்திசாலித்தனத்தால் தோற்றுப்போக, தடுமாறுகிற இடம் நன்றாக உள்ளது. சட்டென உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத, உள்ளடங்கிய நடிப்பு.
நாயகன் கார்த்திக், காவ்யா ஆகிய இருவரையும் பார்த்தாலே பயமாக இருக்கிறது. கார்த்திக் இருக்கும் உருவத்திற்கு காவ்யா மீது அன்போடு ஆசையோடு சாய்ந்தாலே, நாயகியை ஐசியூவில் வைக்கவேண்டும். மணம், குணம், திடம் கொண்ட மனிதர் கார்த்திக். அவர் எப்படி தனது மாமனாரை வசீகரிக்கிறார் என்பதே கதை. கதையின் போக்கே நிதானமானது என்பதால் பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. குடும்ப உறவுகள், அப்பாவின் அக்கறை, அளவு கடந்த பாதுகாப்பு, மகள் மீதான பாசம் என காட்சிகள் பலவும் தந்தைக்காகவே உள்ளன. கார்த்திக்கின் பக்கம் இருக்கும் நியாயத்தை, மிலிட்டிரிக்காரரின் மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் காட்சிகள் குறைவு. படத்தின் இறுதியில், காதலை விட்டுக்கொடுக்க தானாகவே கார்த்திக் முயல்வதும் சங்கடமான காட்சி. நேர்மையாக நேரடியாக பேசும் கார்த்திக் அந்த இடத்தில் தடுமாறி காதலிக்காக தன் கொள்கைகளை விட்டுக்கொடுப்பது வருத்தமாக உள்ளது.
இத்தனைக்கும் மிலிட்டிரிக்காரரின் குடும்பத்தில் ஐஐஎம் படிக்கும் பெண் பிள்ளையை திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுப்படுத்துவது, சமையல் கலைஞராக வரவேண்டிய இளைஞனை, அதெல்லாம் கூடாது என கட்டாயப்படுத்தி அதிகாரியாக மாற்ற முயல்வது என இரண்டு விஷயங்களுமே கார்த்திக்கால் மாறுகிறது. இந்த மாற்றங்களை மிலிட்டிரிக்காரர் ஏற்பதில்லை. முழுக்குடும்பத்தையும் தனது மேலாதிக்கத்தால் கட்டுப்படுத்த முயன்று பெருமையை தனக்காக தேடிக்கொள்ள நினைக்கிறார். இறுதியாகவே தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கார்த்திக்கை தனது பெண் பிள்ளைக்கே மணம் செய்து கொடுக்கிறார். படம் நிறைவடைகிறது.
திருமண முடிவு யார் கையில் இருக்கவேண்டும் என்பதை நிதானமாக விவாதிக்கிற படம்.
கோமாளிமேடை குழு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://en.wikipedia.org/wiki/Villagelo_Vinayakudu&ved=2ahUKEwi-jeav95uJAxV-gv0HHZmeCgYQFnoECDsQAQ&usg=AOvVaw3Z0eSCneIT_77GRPm3nyto
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3D5JS6zEd-EvY&ved=2ahUKEwi-jeav95uJAxV-gv0HHZmeCgYQwqsBegQISRAF&usg=AOvVaw2bRREbFwfCrBIkTrp2pW51
கருத்துகள்
கருத்துரையிடுக