விடுமுறையில் கேம்ப் அடித்து உற்சாகம் கொள்ளும் சீனர்கள்!
விடுமுறையைக் கொண்டாட கேம்ப் அடிப்போம்!
காட்டுக்குள், மலைப்பகுதிக்குள், பாலைவனத்திற்குள் வேலையாக செல்பவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு டெண்ட் கொட்டாய்களை அமைப்பார்கள். இதை அனைவரும் பார்த்திருப்போம். சில இடங்களில் கேம்ப்புகளில் தங்கியும் இருப்பீர்கள். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டால், மக்கள் உடனே மலைப்பகுதி, காடுகளின் அருகில் சென்று கேம்புகளை அமைத்து தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
இதற்காகவே சீனாவில் கேம்புகளை அமைத்துக்கொடுக்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், டெண்ட்கொட்டாய் துணிகளை மட்டும் வழங்குவதில்லை. பிறந்தநாள் விருந்து, காதலைச் சொல்லப் போகும் தம்பதிகளுக்கான முன் ஏற்பாடுகள் என காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். கேம்பில் தங்குபவர்களுக்கான உணவுகளையும், அந்த இடத்திலேயே புதுமையாக அமைத்துக் கொடுத்து காசு வாங்கி கல்லா கட்டி வருகிறார்கள். கேம்புகளை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் போட்டியும் கூடி வருகிறது.
குடும்பங்களாக சென்றால் குழந்தைகளை சமாளிக்கவேண்டுமே அவர்களுக்கென மண்பானை செய்வது, தோல் பொருட்களை செய்வது என பல்வேறு கலைத்திறன்களை வேடிக்கையாக சொல்லிக்கொடுக்கவும் நிறுவனங்கள் ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள். எனவே, கேம்ப் போடுவது என்பது மகிழ்ச்சியான ஒன்றாக மாறுகிறது. இப்படியான கேம்புகளில் உணவுகளை சாப்பிடும் இடத்தைக் கூட குகைகளில், பசுமையான காடுகளில் அமைத்துக் கொடுக்கிறார்கள். சில இடங்களில் கபேக்களை இப்படியான தீம்களில் அமைக்கிறார்கள். காடு, மலை, பாலைவனம், புல்வெளி நிலம் என எங்கு கேம்புகளைப் போட்டாலும் அதற்கேற்ப மக்களை மகிழ்விக்க நிறுவனங்கள் திட்டம் போட்டு செயலில் இறங்கி வருகின்றன. ஆம், அனைத்திற்கும் காசுதான் அல்டிமேட். அதை யாரும் மறுப்பதற்கில்லை.
2022ஆம் ஆண்டில், சீனாவின் பதினான்கு அரசு துறைகள், சுற்றுலாவை மேம்படுத்த கேம்புகளை அமைப்பதற்கான விதிகளை வகுத்து வெளியிட்டிருக்கின்றன. இதன் வழியாக 3 ட்ரில்லியன் யுவான்களை வருமானமாக பெற இலக்கு நிர்ணயித்துள்ளது அரசு. 2025ஆம் ஆண்டிற்குள் இந்த வருமானத்தை அடைய அரசும், தனியார் நிறுவனங்களும் உழைத்து வருகின்றன.
கடந்த ஆண்டு சீனாவில் 6,500 கேம்ப் செல்லும் இடங்கள் உருவாகி உள்ளதாக ஐமீடியா என்ற ஆராய்ச்சி நிறுவனம் தகவல் சொல்லுகிறது. பெய்ஜிங், சிச்சுவான், சான்டாங்க் ஆகிய மாகாணங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கேம்புகளை அமைத்து விடுமுறை தினங்களை கொண்டாடி சென்றிருக்கிறார்கள்.
இப்போது இதன் சந்தை மதிப்பைப் பார்த்துவிடுவோம். 2025ஆம் ஆண்டிற்குள் 34.82 பில்லியன் டாலர்களை வருமானமாக பெறுவதை நோக்கி சுற்றுலா சந்தை நகர்ந்து வருகிறது. உதாரணத்திற்கு ஹைகிங் கேம்ப் என்ற ஷாங்காய் நகரில் இயங்கும் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். நகரங்களில் இருந்து எண்பது கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்களில் கேம்புகளை அமைத்து தந்து வருகிறது. இப்படி ஐம்பது இடங்களில் கேம்புகளை அமைத்து சேவை வழங்கி வருகிறது. ஹைனானின் சான்யா, யுன்னானின் குன்மிங், மங்கோலியா உட்புறபகுதியில் அர்ஷான் ஆகிய இடங்களில் கேம்புகளை அமைத்து தருகிற நிறுவனம் இது.
camping trend goes wild with room to grow
yang feiyue
china daily
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://global.chinadaily.com.cn/a/202410/06/WS6701f453a310f1265a1c639f.html&ved=2ahUKEwjmrZLMsI-JAxUPrlYBHUyJPRgQFnoECBUQAQ&usg=AOvVaw0XVSuveWZQ-MH5i08ZdEOs
கருத்துகள்
கருத்துரையிடுக