அமெரிக்காவில் சீரியல் கொலைகாரர்களைப் பிடிக்க தனிப்பிரிவைத் தொடங்கியவரின் போராட்டம்!

 






மைண்ட் ஹன்டர் நூல்


மைண்ட் ஹன்டர்

ஜான் டக்ளஸ்

 

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான் டக்ளஸ், பிஹேவியர் சயின்ஸ் என்ற பிரிவை எப்படி தொடங்கி சீரியல் கொலைகாரர்களைப்பிடித்தார், அதற்கு அவர் உடல், மன ரீதியாக கொடுத்த விலையைப் பற்றி நூல் நெஞ்சிற்கு நெருக்கமாக நின்று பேசுகிறது.

ஜான் டக்ளஸ் என்ற அதிகாரி, குவான்டிகோ காவல்துறையில், புரொஃபைல் செய்யும் ஆய்வுப்பிரிவில் தனி நபராக வேலை செய்து பின்னாளில் அதில் நாற்பது ஆட்கள் வேலை செய்யுமளவு சூழலை மாற்றுகிறார். இந்த முன்னேற்றத்திற்கான பயணம் எப்படி இருந்தது என்பதை அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகடியாக விளக்கி கூறுகிறார்.

 தொழிலில் ஆர்வம் கூடிய காரணத்தில் பள்ளி ஆசிரியையான மனைவியை விவாகரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதையும் அவர் வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் மனம் முழுக்க குற்றவாளிகளைப் பற்றிய நினைவுடன்தான் வாழ்ந்திருக்கிறார். இது, தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை என அனைவரையும் வளர்த்தெடுத்தது அவரது மனைவி பாம்தான். ஜான் டக்ளஸ் முழுக்க குற்றவாளிகளை பிடிக்கவெனவே தனது ஆற்றலை அறிவை செலவிட்டவர். இதை அவரது அனுபவங்களின் வழியாக படிக்கும்போது சற்று வினோதமாகவே இருக்கிறது.

புகழுக்கும் பெயருக்கும் கொடுக்கும் விலையாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை அழிந்துபோனதைக் கூறலாம், உடல் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி வாதம் ஏற்படுகிறது. நேர்மையாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் எந்தளவு உடல், மன பிரச்னைகளில் சிக்குகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று.

நூலின் தொடக்கத்தில் ஜான் டக்ளஸின் படிப்பு,  பிறகு அவரின் ஆர்வம் மாறுவது, காவல்துறை அதிகாரியாக பணியில் எதிர்கொண்ட சிக்கல்கள், உளவியல் துறையில் ஆர்வம் ஏற்படுவது, மனைவியை கிளப்பில் சந்திப்பது, பிறகு அவரை மணக்க திட்டம் போடுவது என சற்று நெருக்கடி இல்லாத இலகுவான எழுத்தாக செல்கிறது. ஆனால் பிறகு வழக்குகளை எதிர்கொள்வதெல்லாம் பீதியூட்டுகிறது.

 உளவியல் முறையில் எப்படி சைக்கோபாத்களை எதிர்கொள்வது, எப்படி பேசுவுது. தகவல்களைப் பெறுவது, அவர்களை எப்படி நீதிமன்றத்தில் விசாரிப்பது. என அனைத்தையும் டக்ளஸ் தனது நூலில் விளக்கியுள்ளார். இதுதான் இந்த நூலை குற்றவியல் இலக்கியத்தில் முக்கிய நூலாக்குகிறது. குற்றநோக்கம் இல்லாத கொலைகளுக்கு டக்ளஸின் புரொஃபைல் முக்கியமானது.

சைக்கோபாத்களை சிறையில் அடைக்க செய்யும் முயற்சி, அவர்களை பரோல் கொடுத்து வெளியே அனுப்பும் சிறை மருத்துவர்கள், உளவியலாளர்களால் எப்படி தோல்வியுறுகிறது என்பதையும் டக்ளஸ் கூறியுள்ளார். மாடல் கைதியாக நடிப்பது, கிறித்தவ மத சங்கத்தில் சேர்ந்து நல்லவன் போல நாடகமாடுவது வழியாக பரோல் பெற்று வெளியே சென்று கொலைகளை செய்தவர்களை வரிசையாக விவரிக்கிறார் டக்ளஸ். அவற்றை படிக்கும்போது குற்றவாளிகளை வயது பார்க்காமல் செய்த குற்றங்களின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென தோன்றுகிறது.

துறை சார்ந்த சீர்திருத்தம். அதை புரிந்துகொள்ளாத அதிகாரிகளின் தலைமையில்  எப்படி  தாமதமாகிறது என்பதை நூலில் தனது அனுபவத்தின் வழியாக கூறுகிறார். சம்பள உயர்வு இன்மை, பெண்களை துறையில் அனுமதிக்காமல் இருக்கும் தலைவரின் விருப்புவெறுப்பு எப்படி அவர்களை பாதிக்கிறது. எதிர்கால முன்னேற்றங்களை குலைக்கிறது என விரிவாக பேசியிருக்கிறார்.

இதெல்லாம் சேர்ந்துதான் நூலை தனித்துவம் கொண்டதாக மாற்றுகிறது. கொரியாவில் எடுத்த டிவி தொடரான த்ரோ தி டார்க்னெஸ், நூலை சிறப்பாக பிரதியெடுத்து அமைந்ததாக உள்ளது. நெட்பிளிக்ஸில் மைன்ட் ஹண்டர் என வெப் தொடர் ஒன்று கூட வெளியான நினைவு. இரண்டு சீசனோடு நிறுத்திவிட்டனர். இயக்குநர் டேவிட் ஃபின்ச்சர்.

 குற்றவியல் சார்ந்து இயங்குபவர்களுக்கு மைண்ட் ஹன்டர் முக்கியமான வழிகாட்டி நூல்.

கோமாளிமேடை டீம்

நன்றி

திரு.ஆதித்யா, தாராபுரம்

திரு.இரா.முருகானந்தம் , தாராபுரம்


கருத்துகள்