பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்கும் சீன அரசு! விசுவாசமே முக்கியம், நேர்மை அல்ல!

 







அடிமை பத்திரிகையாளர்களை உருவாக்கும் சீனா



திருத்தப்படும் ஊடகங்கள் – சீனாவில் ஊடகங்களுக்கான புதிய விதிகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிபர் ஜின்பிங், அரசின் நாளிதழ், டிவி சேனல்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். செய்திகள் உண்மையான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின்படி இருக்கவேண்டும் என்று கூறினார். கூடவே, பத்திரிகையாளர்கள் கம்யூனிச கட்சியை நேசித்து அதை காக்கவேண்டும் என மறக்காமல் கூறினார்.

அவர் கூறிய விதிகளுக்கும், உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் முரண்பாடுகள் வந்தால் என்ன செய்வது என்று ஜின்பிங் கூறவில்லை. ஆனால், செயல்பாட்டில் அதை காட்டினார்.

கடந்த ஜூன் 30 அன்று, பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி ஆப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், மக்களின் கருத்துகளை எப்படி திருத்தி வழிகாட்டுவது என்பதற்கான செயல்முறை இருந்தது. ஏறத்தாழ அந்த ஆப், எப்படி கம்யூனிச கட்சிக்கு ஆதரவான முறையில் பத்திரிகையாளர்கள் செயல்படுவது என்பதைப் பற்றியதுதான்.

ஆப், வழிகாட்டு நெறிமுறைகளை சற்று மென்மையாக கூறினாலும், பத்திரிகையாளர் நேர்மையாக உண்மையாக நடந்தால் விளைவுகள் கடுமையாகவே இருந்தன. ஏனெனில் ஏராளமான பத்திரிகையாளர்களை சீன அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது. தனக்கு எதிராக விரல் சுட்டும் யாரையும் அரசு விட்டுவைக்க தயாராக இல்லை.  

சீனாவில் பத்திரிகையாளர்களாக பணிபுரிய அரசின் அனுமதி அட்டையைப் பெறவேண்டும். இதற்கு 2014ஆம் ஆண்டு முதலாக, அரசின் தேர்வு நடைபெற்றுவருகிறது. தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களிடம் கம்யூனிச கட்சியின் கொள்கைகளை கேள்வியாக கேட்பார்கள். அதற்கு சரியான பதில்களை அளிக்கவேண்டும். இல்லையெனில் பத்திரிகையாளராக தேர்ச்சி பெறமுடியாது.

ஒருமுறை இளம்பெண் ஒருவர் தேர்வை எழுதினார். ஆனால், முதல்முறை நடந்த தேர்வில் தோற்றுவிட்டார். அவர் தோற்க காரணம், நாட்டின் நான்கு பெரிய விஷயங்கள் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விதான். ஜின்பிங் செய்த சாதனைகளைதான் கேள்வியாக கேட்டனர். அந்த பெண்ணுக்கு நிறைய விஷயங்கள் நினைவுக்கு வர எதை எழுதுவது என தடுமாறிவிட்டார். அப்படி எழுதியதில் இரண்டு விடைகள் சரி, இரண்டு தவறாக போய்விட்டன.

சீன அரசு, கம்யூனிச கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் சொல்லும் செய்தி அறிக்கை, திட்டங்களைப் பற்றி எழுதும் நாளிதழ்கள், ஊடக செய்திகள் ஆகியவற்றை வரவேற்கிறார்கள். தங்களது செயல்திட்டங்களைப் பற்றி மக்களுக்கு விளக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கவிருது வழங்கப்படுகிறது., மேலோட்டமாக பார்த்தால் செய்தி கட்டுரை என்பது மக்களின் சமூகபிரச்னை போன்று தோற்றமளிக்கும். உளளே கட்சியின் திட்டம் இருக்கும். கம்யூனிச கட்சி இல்லையென்றால் சீன மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்று கூட செய்திகளை பிரசுரிக்கிறார்கள்.

இந்த காரணத்தால், அரசு ஊடகங்களில், நாளிதழ்களில் வேலை செய்த நேர்மையான பத்திரிகையாளர்கள் பலரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிலகி விட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் சீன சமூக வலைதளங்களில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில்  இதழியல் படிப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா என்று கேட்கப்பட்டது. ஆனால் பலரும் எந்த பயனும் இல்லை என பதில் கூறியிருந்தனர். நாடு முழுக்க அரசுக்கு ஆதரவாகவே அனைத்து செய்திகளும் இருக்கின்றன. இதில் பத்திரிகையாளர் செய்ய என்ன இருக்கிறது? பல்கலைக்கழகங்களில் இதழியல் மாணவர்களுக்கு எப்படி அடங்கி ஒடுங்கி நடப்பது என கற்றுக்கொடுக்கிறார்கள் என சிலர் கருத்து கூறியிருந்தனர். வாசிக்க கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான் போல. சர்வாதிகார நாடுகள் அனைத்திலும் இதேபோல ஊடகங்களை விலைக்கு வாங்குவது அல்லது அதன் மீது வரி சோதனை நடத்தி அவப்பெயர் ஏற்படுத்துவது என அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

தி எகனாமிஸ்ட்

படம் 

பின்டிரெஸ்ட்


கருத்துகள்