பிஆர்சிஏ 2 மரபணு ஏற்படுத்தும் புற்றுநோய்! - தலைமுறைகளைத் தாண்டி தொடரும் வேதனை

 






புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு, மரபணு வழியாக எளிதாக புற்றுநோய் ஒருவரை தாக்கி அழிக்கிறது. கூடவே, அவரது குடும்பத்தையும் பாதிக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைக்க பலரும் மருத்துவ சிகிச்சையை நாடி வருகிறார்கள். இதில் பொருளாதார சிக்கல்களும் உள்ளன.

அமெரிக்க மருத்துவர் சூசனா உங்கர்லெய்டர், அவரது அப்பாவிற்கு சோதனை மூலம் கண்டறிந்த கணைய புற்றுநோயால் ஆடிப்போயிருந்தார். அப்பாவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய் மூலம் தனக்கு எதிர்க்காலத்தில் வரும் ஆபத்தை அவர் முதலில் உணரவில்லை.

2022ஆம் ஆண்டு சூசனாவின் அப்பா ஸ்டீவனை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த பிஆர் சிஏ 2 எனும் மரபணு, மார்பு, கருப்பை, கணையத்தில் புற்றுநோய்  உண்டாக்குவதோடு அவரது பிள்ளைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் கண்டனர். அவர்களின் பரிந்துரை பெயரில் சூசனாவும் அவரது சகோதரியும் மரபணு சோதனையை செய்து புற்றுநோய் அபாயத்தை அடையாளம் கண்டுகொண்டனர்.

நாற்பத்து மூன்று வயதாகும் சூசனா, மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக செயல்பட்டுவருகிறார். தீராத நோய்களுக்கு உதவும் எண்ட் வெல் எனும் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி நோயாளிகளுக்கு உதவி வருகிறார். மரபணு சோதனையை அப்பா, பிள்ளைகள் என செய்துகொள்வது புற்றுநோய் அபாயத்தை தொடக்கத்தில் கண்டறிய உதவுகிறது. இதற்கான சிகிச்சை கட்டணமும் அங்கு குறைவாக உள்ளது. நோயை முன்னமே கண்டறிந்தால், அதைக் கட்டுப்படுத்த எளிதாக மருந்தை தேடலாம்.

1990களில் பிஆர்சிஏ 2 மரபணு மாற்றம், புற்றுநோயை உருவாக்குகிறது என மருத்துவர்கள் கண்டறிந்துவிட்டனர். ஆனால் அப்போது மரபணு சோதனைக்கான கட்டணம் 4 ஆயிரம் டாலர்களாக இருந்தது. தற்பது 250 டாலர்களாக குறைந்துள்ளது. பெற்றோர் வழியாக பிள்ளைகளுக்கு புற்றுநோய் வருவதை மக்கள் பலரும் நம்பவில்லை. அதை ஏற்கவும் இல்லை. எனவே, அவர்கள் சோதனைக்கு முன்வரத் தயங்கினர். இப்படி சோதனைகளை செய்யும் வல்லுநர்களும் குறைவாகவே உள்ளனர். ஏற்கெனவே இருந்த மருத்துவர்களும் கூட அப்டேட்டாக இல்லை.

 சூசனாவின் அப்பா வழி பாட்டியும் கூட கணையப் புற்றுநோயால்தான் இறந்திருந்தார். இந்த உண்மை தெரிந்தபிறகுதான் அப்பாவுக்கு வந்த கணையப் புற்றுநோய் பற்றிய ஆபத்து மகள்கள் இருவருக்கும் உறைத்தது. புற்றுநோய் வந்த குடும்பங்களில் உள்ளவர்களை மட்டுமே மருத்துவர்கள் , மரபணு சோதனைக்கு ஊக்கப்படுத்துகிறார்கள். நோயாளியைச் சோதித்து புற்றுநோயை அறிந்தால், உறுதியாக அவரின் குடும்ப அமைப்பை மருத்துவர்கள் இப்போது சோதித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், சூசனா, தனது கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டார். கூடவே, மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தையும் நீக்கிவிட்டார். இப்போது தனது சொந்த அனுபவம் காரணமாக தனது தோழிக்கும் மரபணு சோதனையை செய்ய வலியுறுத்தி வருகிறார். இவரது அப்பா ஸ்டீவன் கடந்த மார்ச்சில் காலமானார். சூசனா, அவரது சகோதரி என இருவருமே ஐம்பது வயதில் கணையப்புற்றுநோய் பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

 

பிரியன்னா அப்போட்

தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்

கருத்துகள்