இனிக்கிற சர்க்கரை பொய்கள் - பெருநிறுவனங்கள் எப்படி குழந்தைகளை திட்டமிட்டு கொல்கின்றன?

 









சர்க்கரையை மறைக்கும் சாமர்த்திய பொய்கள்!


பீடியாஸ்யூர் உணவு

கிரிட்ஸோ சூப்பர்மில்க் - தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு


பெப்சி கோ நிறுவனத்தின் முன்னணி குளிர்பான பிராண்டின் பெயர் ஸ்டிங் எனர்ஜி. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பானத்தை குடித்தவர் வீசும் விசிறிக் காற்று, உடல் பருமனான முதலாளி ஒருவரை அப்படியே அந்தரத்தில் தூக்கி பின்னால் தள்ளி வீழ்த்தும். அந்தளவு ஆற்றல் ஸ்டிங்கில் பொதிந்து உள்ளது என கூறுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், பானத்தில் உள்ள அதிகளவு சர்க்கரைதான்.

ஆனால் அதை விளம்பரத்தில் கூறினால், ஸ்டிங்கை யார் வாங்குவார்கள்? எனவே, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குகிறது என சொல்லி விற்கிறார்கள். இருநூறு மில்லி பானத்தின் விலை ரூ.20. குழந்தைகள் குடிக்க கூடாது என சிறிய எழுத்தில் பாட்டிலில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் அதை குடிக்க தடையாக இருப்பதில்லை. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என வாங்கிக் குடித்து வருகிறார்கள்.

மனதிற்கு ஊக்கம், உடலுக்கு சக்தி என்பதை மக்கள் அப்படியே நம்புகிறார்கள். இதை விளம்பரங்கள் மூலம் திரும்ப திரும்பச் சொல்லி பெருநிறுவனங்கள் மக்களை  நம்ப வைக்கிறார்கள். இதன் விளைவாக பள்ளி செல்லும் பத்து வயது சிறுவர்கள் கூட ஆற்றல் பானங்களை வாங்கிப் பருகுகிறார்கள். 250 மில்லி பாட்டிலில் 17 கிராம் சர்க்கரை உள்ளது. இதில் ஒருபகுதியை மட்டுமே தினசரி ஒருவர் உணவு வழியாக எடுத்துக்கொள்ளலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்களை பெருநிறுவனங்கள் உடல்நலம், உயரம், வலிமை, ஆற்றல் ஏன் மகிழ்ச்சி கூட தருவதாக விளம்பரப்படுத்துகிறார்கள். சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை இந்த வகை பொருட்களில் அதிகம் இருக்கும். இதன் விளைவாக, ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நாளடைவில் உடல்பருமனும் ஏற்படுகிறது.

பெற்றோர்கள தங்கள் பிள்ளைகள் உயரமாக வலிமையாக நோயே இல்லாமல் வளர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு பெருநிறுவனங்கள் அவர்களை ஏமாற்றுகின்றன என்கிறார் ஊட்டச்சத்து தொடர்பாக  இயங்கி வரும் செயல்பாட்டாளர் அருண் குப்தா.

குழந்தைகளுக்கு மரபான சாதாரண உணவுகள் போதாது. புரதம் நிறைந்த உணவுகள் தேவை என விளம்பரங்களில் மூளைச்சலவை செய்து பொருட்களை வாங்க வைக்கின்றனர். இந்த முறையில் நான்கு வயது குழந்தைகளை குறிவைக்கிறார்கள். கிரிட்ஸோ என்ற பிராண்ட் குழந்தைகளின் உடல் மன வளர்ச்சிக்கான உணவுப்பொருள் என விளம்பரம் செய்து தனது தயாரிப்பை விற்கிறது. இதை அருண் குப்தா சோதித்தபோது நூறுகிராமில் 50.8 சதவீதம் சரக்கரை இருந்தது. இதில் இருந்த புரத அளவும் ஆபத்தான அளவு கொண்டதுதான்.

ஆரோக்கியமாக, வெற்றி பெற்றவர்களாக இருக்க என்று சொல்லி ஊட்டச்சத்து பானங்களாக பீடியாஸ்யூர், ஹார்லிக்ஸ் ஆகியவை தங்களை விளம்பரம் செய்துவருகின்றன. உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, மூளை மேம்பாடு என்பதெல்லாம் விளம்பரத்தில் பயன்படுத்தும் உதாரண வார்த்தைகள். இதில் ஹார்லிக்ஸ் நிறுவனம், தேர்வுகளில் வெல்லலாம் என விளம்பரப்படுத்தியதில் அதுவரை கடையில் இருந்த ஹார்லிக்ஸ் ஊட்டசத்துபான பொருட்கள் அனைத்துமே வேகமாக விற்றுப்போயின.  

அமெரிக்காவைச் சேர்ந்த அப்போட் நிறுவனம் தனது ‘பீடியாஸ்யூர்’ பிராண்டில் ஊட்டச்சத்து பானத்தை விற்கிறது. அங்கு,  இந்த நிறுவனம் தவறான வகையில் உடல் வளர்ச்சியைக் காரணம் காட்டி, விளம்பரப்படுத்தி வருவதற்கு எதிராக  வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறது. பீடியாஸ்யூர், அதன் பாக்கெட்டில் ‘மருத்துவரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது’ என அச்சிட்டு விற்பது மக்களை நம்பிக்கை வைத்து வாங்க தூண்டுகிறது. இது தவறான வழிகாட்டுதல் என்பதை மக்கள் உணரவில்லை

 மரபான ஆரோக்கியமான வீட்டு உணவுகளுக்கு மாற்றாக , பதப்படுத்தப்பட்ட பொருட்களை உண்ண கூறும் விளம்பரங்கள் தொண்ணூறுகளில், தாய்ப்பாலுக்கு மாற்றான பதப்படுத்தப்பட்ட பொருட்களைப் பற்றி பிரசாரம் செய்தன. பதப்படுத்தப்பட்ட ஆரோக்கிய கேடு நிறைந்த உணவுகளை எளிதாக விற்க முடியாதே? அதற்காகவே காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்யும் திரைப்பட நடிகர்களைப் பயன்படுத்துகிறார்கள்.  

தாய்ப்பாலுக்கு மாற்றான உணவுகள் என்று சொல்லி பதப்படுத்தப்பட்ட உணவுகளை பெருநிறுவனங்கள் விற்கத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாக, குழந்தைகளின் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 400 பில்லியன் கிராம் (2010) லிருந்து, 800 பில்லியன் கிராமாக (2021) அதிகரித்திருக்கிறது.  

எவ்வித ஊட்டச்சத்தும் இல்லாத அடிமைப்படுத்தும் சர்க்கரை, உப்பு சுவை கொண்ட உணவுகள் குழந்தைகளை தொற்றாநோய்களுக்கு இலக்காக்குகின்றன.  இதன் விளைவாக உலகமெங்கும் 8 மில்லியன் குழந்தைகள் மரணித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம், தனது 2019ஆம் ஆண்டு அறிக்கையில் கூறியிருக்கிறது.   பதப்படுத்தப்பட்ட  உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் மெல்ல ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுவார்கள். அடுத்து அவர்களின் இதயம், கல்லீரலில் சேரும் கொழுப்பு காரணமாக இரண்டாம் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதே அறிவியல் உண்மை. குறிப்பாக வளரும் நாடுகளில் இந்த வகை பாதிப்பும், குழந்தைகளின் இறப்பும் அதிகம். இந்தியா, நேபாளம், ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் சர்க்கரை நிரம்பிய உணவுக்கு அடிமையாகி மெல்ல உடல் பருமன் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு நோயுற்று இறக்கிறார்கள். பெருநிறுவனங்கள், இதைப்பற்றி உண்மைகளை அறிந்தாலும் லாபவெறியால் எதைப்பற்றியும் கவலைகொள்வதில்லை. நெஞ்சுக்கு நீதியாக நடந்தால் வியாபாரம் எப்படி நடக்கும்?

 கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு பதப்படுத்தப்பட்ட ஆரோக்கிய கேடான பொருட்களை மக்களில் தலையில் கட்டி அவர்களை ஏமாற்றுவது இப்போதைய நடைமுறையாக உள்ளது. பொதுவாக, சர்க்கரை அதிகமுள்ள நொறுக்குத்தீனிகள், ஊட்டசத்து பானங்கள் பள்ளி, விளையாட்டு விழாக்களில் விளம்பரப்படுத்தி விற்பார்கள். இந்த இடங்களில் கடையை போட்டு பொருட்களை விற்பதும் வாடிக்கையாளர்களை பிடிப்பதும் எளிது. கொரோனா காலத்தில் பெருநிறுவனங்கள் விற்காமல் தேங்கிய தங்களது பதப்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனிகள், ஊட்டச்சத்து பானங்களை, கார்பன் பானங்களை  உணவின்றி பசியால் தடுமாறிய மக்களுக்கு கொடுத்து அவர்களையும் தங்களது வாடிக்கையாளர்களாக்கினர். இப்பொருட்களை கையில் கொடுத்து உங்கள் உடலுக்கு நல்லது என்று சொன்னதுதான் இதில் முக்கியமான அம்சம்.  

வளரும் நாடுகளை குறிவைக்கும் பெருநிறுவனங்கள், அங்கு உள்நாட்டு சந்தையில் உள்ள உணவுப்பொருள் நிறுவனங்களை வாங்கி தங்களது ஆபத்தான உணவுப்பொருட்களை மெல்ல அங்கு கடைபரப்பி விற்க ஆரம்பிக்கின்றனர். இந்த வகை உணவுகளில் உள்ள ஆபத்தைப் பற்றி யாராவது சொன்னாலும் கூட பொருளாதார வளர்ச்சி, மக்களுக்கு வேலைவாய்ப்பு என்று பேசி வாயை அடைத்து விடுகிறார்கள். எனவே, அரசுகளும் இதில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் என்று வைத்திருப்பதன் நோக்கம்,. லாபம் சம்பாதிப்பதுதான். அதுவும் அதன் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்காக மட்டுமே. இதில் மக்கள் நலன் என்று ஏதுமில்லை.  மக்களுக்கு தொற்றுநோய்கள் பற்றி தெரியும். அதுதொடர்பாக கவனமாக இருக்கிறார்கள். ஆனால், தொற்றா நோய்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுவதில்லை. எனவே, பெருநிறுவனங்கள் தங்களது பதப்படுத்தப்பட்ட ஆபத்தான பொருட்களை எளிதாக தவறான  தகவல்களைச் சொல்லி விளம்பரப்படுத்தி விற்கிறார்கள்.  உண்மையில் இதனால் பாதிக்கப்பட்டு இறக்கும் மக்களின் இறப்பிற்கு பெருநிறுவனங்களில் லாபவெறியே காரணம். இதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஊட்டச்சத்தற்ற, ஆரோக்கியத்தை குலைக்கும் உணவுகள் பற்றி மக்கள் கவனமாக இருப்பது முக்கியம்.  

கார்டியல் வீக்லியில் காமில் அஹ்மது எழுதிய கட்டுரையை தழுவியது. 

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்