மெய்ஞானத்தை தேடும் சீடனுக்கு குரு வைக்கும் பல்வேறு சோதனைகள்- மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்

 









மந்திரவாதியின் சீடன்

இவால்ட் ஃப்ளிசர்

தமிழில் அசதா

காலச்சுவடு பதிப்பகம்

 

வெளிநாட்டுக்காரரான இவால்ட் இந்தியாவிற்கு ஞானம் தேடிப்பெற வருகிறார். அவருக்கு குருவாக வரும் யோகானந்தர் அவரை எப்படி சோதித்தார், தனது சீடனாக ஏற்றாரா, ஞானம் பெற உதவினாரா என்பதே கதையின் மையம்.

அசதா,ஆங்கில நூலை தமிழில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அதில் எந்த பழுதுமில்லை. ஆனால், இந்த நூல் மனிதர்கள் தேடும் ஞானத்தை, மெய்ப்பொருளை பற்றியது என்பதால் திரும்ப திரும்ப வாக்கியங்களை, இவால்டின் மனவோட்டங்களை படித்தால் மட்டுமே புரியும். இவால்டின் பயணமாகவே மட்டுமே குறுக்கி பார்க்க முடியாதபடி நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நூலை படிக்க சற்று கடினமானது போல தோன்றும். ஆனால், சற்று வாசித்து ஐம்பது பக்கங்களை கடந்துவிட்டால்  பிரச்னை ஏதுமில்லை.

நூலை வாசித்தவர்கள் உறுதியாக தாந்த்ரீகத்தைப் பற்றி தேடிப்போவார்கள். உறுதியாக அதற்கான அனைத்து விஷயங்களையும் ஆசிரியர் நூலில் விதைத்திருக்கிறார். மடாலயங்களின் உள்கட்டுமானது, சடங்குகளை முடிந்தளவு விளக்க முயன்றிருக்கிறார். இறுதியாக இவால்ட் தனக்கு கிடைத்த இரண்டு நிமிட உள்ளொளி பற்றி பேசும்போது அதற்கு யோகானந்தர் கூறும் பதில் முக்கியமானது.

நீங்கள் என்னை தேடுகிறீர்கள், நான் உங்களை கண்டடைகிறேன் என்ற வாக்கியத்தை யோகானந்தர் பல்வேறு இடங்களில் கூறுகிறார். அந்தந்த சூழலுக்கு ஏற்ப வாசகர்களுக்கு சற்று ஆசுவாசத்தைத் தருகிற விதமாக இவ்வாக்கியம் உள்ளது. இதை குரு சொல்லும்போது, இவால்ட் அடைகிற மன எழுச்சியை வாசகர்களும் அடைவதும் நூலின் வெற்றி.

தொழில், வேலை, சம்பளம், காதலி என சாதாரண வாழ்க்கை வாழும் ஆள்தான் இவால்ட். ஆனால் அவருக்கு வாழ்க்கையின் போக்கில் சலிப்பு ஏற்பட, எதற்கு இந்த வாழ்க்கை என கேள்வி கேட்கத் தொடங்குகிறார். அதற்கு  பதில் யோகானந்தரிடம் உள்ளது என அறிகிறார். அதைத்தொடர்ந்து லண்டனில் இருந்து இந்தியாவின் காஷ்மீர், லடாக், திபெத் என அலைந்து திரிகிறார்.

இவால்ட், நூல் முழுக்க பேசுவது தான் கற்ற நூல்கள், அதில் பெற்ற கருத்துகள் என தத்துவார்த்தமாக இருக்கிறது. இதற்கு அவ்வப்போது வார்த்தையாக, அடி, உதையாக பதிலளிக்கும் யோகானந்தரின் இயல்பு கணிக்க முடியாததாக இருக்கிறது. குரு, தனது சீடனை எப்படி நல்வழிப்படுத்தி பாடங்களை கற்க வைக்கிறாரோ அந்தவகையில் உள்ளது. கயிற்று பாலத்தில் நடக்க முடியாமல் இவால்ட் தடுமாறும்போது, யோகானந்தர் கூறும் கருத்துகள் முக்கியமானது.

யோகானந்தர், இவால்ட் கடந்து இயற்கையும் நாவலில் ஒரு பாத்திரம் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. தாந்த்ரீக பெண்ணான டோல்மா, தாந்த்ரீக மட லாமா, நெப்போலியன் அலெக்ஸாண்டர், மட்டக்குதிரை, நவங், தாந்த்ரீக ஆஸ்திரேலியர் என பல்வேறு பாத்திரங்கள் வித்தியாசமான தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளன.

நூலின் இறுதிப்பகுதியில் யோகானந்தர் எப்படி தந்திரமான இவால்டை ஞானம் பெற விடுதலை அடைய மறைமுகமாக ஊக்குவிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த விளக்கங்களை திரும்ப திரும்ப படிக்கும்விதமாக நூலாசிரியர் சிறப்பாக எழுதியுள்ளார்.

மெய்ஞான தேடுதல் உள்ளவர்களுக்கான புத்தகம். பயண நூலை மொழிபெயர்ப்பது எளிது. ஆனால், தத்துவார்த்தமான நூலை வாசகர்களுக்கு புரியும்படி மொழிபெயர்ப்பது கடினம். மொழிபெயர்ப்பாளர் அசதா அப்பணியை சிறப்பாக செய்துள்ளார்.

கோமாளிமேடை டீம்



https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-Manthiravaathin-seedan-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/dp/B09QCB8MS2

கருத்துகள்