மேற்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் சீன அரசு!

 





டியூக் பல்கலைக்கழகம், சீனா

நியூயார்க் பல்கலைக்கழகம், சீனா

லிவர்பூல் பல்கலைக்கழகம், சீனா





வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் சீனா!

சீனா, தனது நாட்டிற்குள் வெளிநாட்டினரின் சிந்தனைகள் நூல் வழியாக அல்லது வேறு எந்த வழியாக வருவதையும் விரும்புவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங்கு செயல்பட்டுவரும் நியூயார்க் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வரும் மாற்றங்களைக் கூறலாம்.

இங்கு அமெரிக்காவின் சுதந்திரமான சிந்தனை கொண்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக போர்டில் உள்ள கம்யூனிச கட்சியினர் மெல்ல அகற்றி வருகின்றனர். பாடநூல்களையும் மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சீனாவில் வந்து கல்வித் தொழில் சேவையை செய்யும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீன அரசின் பங்களிப்பு உண்டு. அதாவது, தொழில் கூட்டாளி. எனவே, இந்த அடிப்படையில் கம்யூனிச கட்சி உறுப்பினர்  போர்டில் அமர்ந்து சீன அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை, விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதை பல்கலைக்கழகம் மறுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.

மேற்குநாடுகளின் அறிவியல், பொறியியல் ஆகிய துறை சார்ந்த படிப்புகளை மட்டுமே சீனா ஆதரிக்கிறது. மனிதநேய உறவுகள், சமூகவியல் ஆகிய படிப்புகளை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படியான கல்வி நிலையங்களை அங்கு தொடங்க அனுமதியே கிடைக்காது. தொடங்கவும் முடியாது. இவை, அங்குள்ள மாணவர்களை திசைதிருப்பும் என சீன அரசு நம்புகிறது.

சீனாவில் 6 லட்சம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள். மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பார்த்தால் 2 சதவீதம்தான். உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி மாணவர்கள், மேல்நாட்டு கருத்துகள், தத்துவங்களின் பின்னால் போக கூடாது என சீன அரசு கறாராக விதிகளை போட்டு தடுத்து வருகிறது. ‘’நாங்கள் சுதந்திரமாகவே செயல்படுகிறோம். அப்படி செயல்படாதபோது பல்கலைக்கழகத்தை மூடிவிடுவோம்’’ என நியூயார்க் பல்கலைக்கழக தலைவர் கூறினாலும், அவ்வளவு எளிதாக அவர்கள் தம் கல்வி சேவையை விட்டுக்கொடுத்துவிட்டு செல்ல மாட்டார்கள். அந்நிய நாட்டில், தொழில் முதலீடு உள்ளது. அதை எப்படி விட்டுவிட்டு செல்ல முடியும்? சீன அரசுக்கு ஏற்றபடி நடந்துதான் ஆகவேண்டும்.

2012ஆம் ஆண்டு ஜின்பிங் ஆட்சிக்கு வந்தது முதல் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வந்த தாராளவாத சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள் பலரும் வேலையை விட்டு விலக்கப்பட்டனர். மேற்கத்திய சிந்தனையை, கருத்துகளை கூறும் நூல்களை பயிற்றுவிக்கக் கூடாது என விதி நடைமுறைக்கு வந்தது. மாணவர் குழுக்கள் ஜின்பிங்கிற்கு எதிராக போராட முயன்றாலும் முழுமையாக வெற்றி பெறவில்லை. கொரோனோ பெருந்தொற்று தடைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் மாணவர்களின் போராட்டக்குரல் வெளியே வரவில்லை.

சீனாவில் வணிகத் தலைநகரமான ஷாங்காயில் அனைத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டுள்ளன. புடோங்கிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் ஒன்பது மாடி கட்டிடமாக மாறி வசதியான இடத்திற்கு மாறியுள்ளது. இதை வடிவமைத்த நிறுவனத்தின் பெயர் கோன் பெடர்ஷன் ஃபாக்ஸ்.  அமெரிக்காவின் நியூயார்க்கில் நிறுவனம் இயங்கி வருகிறது. இதே நிறுவனம்தான், ஷாங்காயிலுள்ள ஷாங்காய் உலக நிதி நிறுவன மையத்தை வடிவமைத்து கட்டியது. அங்குள்ள அழகான உயரமான கட்டடங்களில் இதுவும் ஒன்று.

சீனாவில 1230க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்துமே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்கள் இந்த வகையில் தங்களின் புதிய வளாகங்களை, கூட்டுறவு முறையில் சீனாவில் அமைத்து வருகின்றன.

சீனாவைப் பொறுத்தவரை மேற்கு நாடுகளை எப்போதுமே நம்பியது கிடையாது. இப்போது உலகளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை அனுமதிக்கிறார்கள் என்றால் அதன் உள்நோக்கம் ஒன்றுதான். மெல்ல அவர்களின் நிர்வாக முறைகளை அறிந்து உள்நாட்டு கல்வி நிறுவனங்களை மேம்படுத்திக்கொள்ள முயல்கிறது. கூடவே, கல்வித்தொழில் சேவை நிறுவனங்கள் மூலம் உள்ளூர் நிர்வாகங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. சீனாவின் ஷாங்காயில் உற்பத்தித்துறை சார்ந்த தொழில்துறை இயங்கி வருகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மூலம் திறமையான இளைஞர்கள் தொழில்துறைக்கு கிடைப்பார்கள் என சீன அரசு நம்புகிறது. இந்த நோக்கம் நிறைவேறினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

தி எகனாமிஸ்ட்

22 ஜூலை 2023


கருத்துகள்