லத்தீன் அமெரிக்காவில் மக்களின் அபிமானம் பெற்ற சர்வாதிகாரி ! நாயூப் பக்லே
கைதிகள் சிறைக்கூடத்தில்.. - எல் சால்வடோர் |
நாயூப் பக்லே |
கிரிப்டோகாயினில் அரசு பண முதலீடு |
மீள முடியாத சிறைவாசம் |
ட்விட்டரில் சர்வாதிகாரி என அறிவித்தபோது... |
சால்வடோரில் உதயமான புதிய சர்வாதிகாரி
கழிவறையில்
அமர்ந்துகொண்டு கிரிப்டோகரன்சியில் மக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்வது, அரசு உத்தரவுகளை,
சட்டங்களை சமூக வலைத்தளத்தில் முதலில் வெளியிடுவது, சிறைக்கைதிகளன் அரைநிர்வாண படங்களை
வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவது, பேஸ்பால் விளையாட்டு வீரர் போல உடையணிந்துகொண்டு
ஊடகங்களை சந்திப்பது என சால்வடோர் மக்களுக்கு அந்த நாட்டு அதிபர் நாயூப் பக்லே காட்டும்
காட்சிகள் நிச்சயம் புதிதான். நாட்டில் அவர் செய்யும் செயல்பாடுகளை பார்ப்பவர்களுக்கு
கோமாளிக்கூத்தாகவே தெரியும். ஆனாலும் மக்கள் அதை பெரிதாக எதிர்ப்பதில்லை. என்ன காரணம்
என்று பார்ப்போம்.
நாட்டின்
புகழ்பெற்ற இமாமிற்கு மகனாக பிறந்தவர், பக்லே. அவருக்கு குடும்பத்தொழிலே விளம்பரப்படங்களை
எடுப்பதுதான். அதற்கென குடும்ப ம் சார்ந்த விளம்பர நிறுவனம் உள்ளது. பக்லேவின் மூன்று
சகோதரர்கள்தான், இப்போது அவருக்கு அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். தனது அரசியல் செயல்பாடுகளை
முழுக்க விளம்பரங்கள் போலவே பிறருக்கு காட்டுவதில் பக்லேவுக்கு ஆர்வம் அதிகம்.
சால்வடோர்
நாட்டில், பெரிய மாற்றங்களை ஏதும் செய்து மக்களை மகிழ்விக்கவில்லை. அங்கு, நாட்டை கூறுகட்டி
பல்வேறு மாஃபியாகுழுக்கள் ஆண்டு வந்தன. அவர்களுக்கு அந்தந்த பகுதி மக்கள் கப்பம் கட்டி
வந்தனர். இந்த குற்றக் குழுக்களுக்கு தெரியாமல் யாரும் எங்கும் இடம்பெயர முடியாது.
காவல்துறைக்கு எல்லாம் பெரிய மதிப்பில்லை. அவர்களிடம் யாரும் புகாரும் கொடுப்பதில்லை.
கொடுப்பவர்கள் அடுத்தநாள் சூரிய உதயத்தை பார்க்க முடியாது. இதுதான் இதுவரை இருந்த நிலை.
அனைத்து சூழலும் மாறத்தொடங்கியது 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்துதான். அந்த மாதம்,
ஒரே வாரத்தில் அறுபதுக்கும் மேலான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படியான
சூழலில் பக்லே ஒரு முடிவெடுத்தார். மாஃபியா குழுக்கள். அதற்கு உதவியவர்கள், ஆதரவானவர்கள்
என அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து சிறையில் அடைத்தார். நல்லவர், கெட்டவர் என
ஆதாரங்கள் எல்லாம் அப்புறம், முதலில் சந்தேகப்பட்டால் உடனே தூக்கி சிறையில் போடுங்கள்
என்று அதிபர் கூறிவிட அப்புறம் காவல்துறை ஆடிய ஆட்டம் எல்லாமே பவர்பிளேதான்.
நாட்டில் தோராயமாக 70 ஆயிரம் பேர் (மக்கள்தொகையில் 7 சதவீதம்)சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் தன்னியல்பாகவே
குற்றங்கள் குறைந்தன. ஒரு லட்சம் பேருக்கு நூற்றி ஆறு நபர்கள் இறந்துவந்த சூழலில் இறப்பின் எண்ணிகை ஐம்பதாக குறைந்திருக்கிறது. இது
அமெரிக்க நாட்டிற்கு நிகரானது.
குற்றவாளிகள்,
குற்றவாளிகள் என சந்தேகப்பட்டவர்கள் என அனைவருமே அடித்து, உதைத்து சிறையில் தள்ளப்பட்டனர்.
புதிய சிறையை கட்டவென 23 ஹெக்டேர் நிலத்தை பக்லே ஒதுக்கியுள்ளார்.
நாட்டின்
கிழக்குப்புறத்தில் இதற்கான வேலை நடக்கிறது. என்னதான் குற்றம் என்றாலும் குற்றவாளிகளை
விடுவித்துவிடும் சூழலும் உள்ளதே என நீங்கள் நினைக்கலாம். அதற்கும் பக்லே செக் வைக்கிறார்.
மாஃபியா குழுக்களின் உறுப்பினர் என்றால, ஒன்பது ஆண்டுகள் தொடங்கி நாற்பத்தைந்து ஆண்டுகள்
வரை அடைத்து வைப்பதுதான் அவரின் நோக்கம். அதாவது, குற்றவாளிகளுக்கு வெளியே வரும்போது
கைத்தடி இல்லாமல் நடக்க முடியாது. ஆனால் இதற்கு அரசுக்கு ஆகும் செலவு 1.5 பில்லியன்
டாலர்கள்.
கைதிகளுக்கு
சாப்பாடு போட்டு பராமரிப்பதை பக்லே ஏற்கவில்லை. குடும்பத்தினரே மாதம் குறிப்பிட்ட தொகை
என கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ஆனால் நாடு உள்ள நிலையில் பலரும்
தினசரி உழைத்தால்தான் காசு கிடைக்கும் சூழல்,
இந்த நிலையில் யார் கைதிகளுக்கு வெளியில் இருந்து மாதம்தோறும் காசு கொடுப்பது?
எத்தனை குடும்பங்களால் இதை கொடுக்க முடியும் என எதுவும் தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம்
பக்லே கவலைப்படவில்லை. குற்றவாளி, நிரபராதி என அனைவருமே சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர்
இப்படி அடைக்கப்படும் சிறையில் குறைந்தபட்ச வசதி கூட கிடையாது. கைதிகளை குடும்பத்தினர்
பார்க்கவும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
சால்வடோர்
அரசு, மேலும் புதிய சிறைகளை வேகமாக கட்டி வருகிறார்கள். நாட்டில் குற்றங்கள் குறைந்தால்
வளர்ச்சி கிடைக்கும் என எண்ணக்கூடாது. ஏற்கெனவே
ஊழல் அதிகம் என்பதால் தொழிலதிபர்கள் பலரும் வேறு நாடுகளுக்கு தங்கள் வணிகத்தை மாற்றிக்கொண்டு
வருகிறார்கள். லஞ்சமும் அதிகரித்து வருகிறது. லஞ்சம் கொடுக்க மறுத்தால், மாஃபியா குழுக்களின்
பெயர்களை சொல்லி தொடர்புள்ளது எனதொழிலதிபர்களின் பெயர்களை கூறினால் போதும்,. காவல்துறை
வந்து கொத்தாக அள்ளிக்கொண்டு சென்றுவிடும் நிலை.
கொரோனா காலத்தில் பக்லேவின் அதீத அதிகார நடவடிக்கையை
நீதிமன்றம் விமர்சனம் செய்து கண்டித்தது. அப்போது அமைதியாக இருந்தவர். தேர்தலில் பெரும்பான்மையான
வென்றவுடன் நீதிபதிகளை மாற்றி தனக்கேற்ற ஆட்களை நியமித்தார். தனது சட்டங்களை ஏற்காத
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டார். இதனால் அவர்கள் போட்டியிடும்
தொகுதிகளும் நீக்கப்பட்டுவிட்டன.
நாட்டின்
உள்நாட்டு உற்பத்தியில் 76 சதவீதம் கடன்தான் உள்ளது. ஆனால் இதை சொல்ல முயன்ற ஐஎம்எஃபின்
அறிக்கையை கூட நிறுத்தி வைத்திருக்கிறார் பக்லே. ஓய்வூதிய திட்டத்தை விரிவுபடுத்துவது,
காவல்துறைக்கு சலுகைகளை வழங்குவது என செயல்பட்டு அதிகார வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டவர்,
பிறகு யாரையும் மதிக்கவில்லை. கீழே இருப்பவர்கள் மீது மதிப்பில்லை, மேலே இருப்பவர்கள்
மீது கௌரவம் இல்லை. தன்னோடு இருப்பவர்களை லட்சியமே செய்வதில்லை என வாழ்ந்து வரும் வினோதமான
சர்வாதிகாரி பக்லே.
என்னதான்
சர்வாதிகாரி என்றாலும் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சும்மாயிருக்க மாட்டார்களே . அவர்களை
வளைத்து கட்டுப்படுத்த அரசுக்கு விரோதமாக அமைதியைக் குலைக்கும் விதமாக குற்றக்குழுக்களுக்கு
ஆதரவாக செய்தி வெளியிட்டால் பதினைந்து ஆண்டுகள் தண்டனை என சட்டம் இயற்றப்பட்டது. தண்டனையை
நினைத்த பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக மூச்சே காட்டவில்லை. உண்மையை எழுத நினைத்த
பலரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள்.
வல்லுறவு
குற்றஞ்சாட்டப்பட்டவரை, நீதிமன்றத்தில் நிறுத்தாமல் காவல்துறை சுட்டுக்கொன்றால், மக்கள்
உடனே இனிப்பு கொடுத்து கொண்டாடுவார்களோ அந்த மனநிலையில் சால்வடோர் மக்கள் உள்ளனர்.
ஏனெனில் குற்றக்குழுக்களின் அராஜகம் அந்தளவு மோசமாக இருந்தது. அதனால் அதிபர் பக்லேவுக்கு
அடுத்த தேர்தலில் கூட வாக்களிக்கும் மக்களின் சதவீதம் 90 என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
அதிபருக்கு வயது 41 ஆகிறது என்பதால், மக்களுக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
குற்றவாளிகள்
ஏன் உருவாகிறார்கள், அதற்கான சூழ்நிலையை மாற்றுவது என அதிபர் பக்லே முயற்சி செய்திருந்தால்
சிறைக்கூடங்களின் எண்ணிக்கை கூடியிருக்காது. குற்றவாளிகளை அடைத்து வைப்பது தற்காலிக
தீர்வு மட்டுமே. அவர்கள் வெளியில் வரும்போது , குற்றங்களின் அளவு மீண்டும் எல்லையை
மீறும். ஆனால், அதிபர் பக்லே அதைப்பற்றியெல்லாம் எள்ளளவும் யோசிக்காமல் சிறைகளையும்,
செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனைகளையும் கட்டி வருகிறார்.
இணையத்தில் பக்லே தனக்கென இணைய ராணுவத்தை வைத்திருக்கிறார்.
அவரையோ, அவரது திட்டங்களையோ யாரும் குறைசொல்லி அல்லது விமர்சித்துவிட முடியாது. அந்தளவு
இணையத்தாக்குதல் தீவிரமாக இருக்கிறது.
ஆளுங்கட்சி,
எதிர்க்கட்சி என நாட்டில் இரு தரப்பு தேவை. அப்போதுதான் அரசு செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி
எடுத்துச்சொல்லி அதை திருத்த முடியும். பக்லே ஒரே நாடு, ஒரே கட்சி என தனது கட்சியை
பலப்படுத்தி வருகிறார். வருகிற 2024 தேர்தலிலும் அவர்தான் வேட்பாளராக நிற்க உள்ளார்.
அருகில் உள்ள
நாடுகளான ஹோண்டுராஸ், ஜமைக்கா, குவாத்திமாலா ஆகிய நாடுகளும் கூட அதிபர் பக்லேவின் குற்றம்
குறைக்கும் நடவடிக்கையைப் பின்பற்றி சிறைகளை கட்டி வருகின்றனர். குற்றக்குழுக்களை காவல்துறை
மூலம் பிடித்து அடைக்க முயன்று வருகின்றனர். மேற்சொன்ன நாடுகளிலும் குற்றங்களை குறைக்க
முடியாமல் அரசுகள் தடுமாறி எதை தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் உள்ளன.
பக்லே அரசு,
சால்வடோர் நாட்டில் முழுமையாக நீதிமன்றத்தை உடைத்து ஜனநாயகத்தை அழித்தொழித்துவிட்டது.
இதனால், சிறையில் தவறுதலாக கைதானவர்களைக் கூட மீட்க முடியவில்லை. காவல்துறை கைதானவர்களை
சிறையில் அடைத்துவிட்டு பிறகுதான் ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில்
குற்றக்குழு விசாரணையில் ஒரே நேரத்தில பல நூறுபேர் வந்து நிற்பதால், நீதிபதிகளுக்கும்
என்ன செய்வது என புரியாத நிலை. நீதித்துறை அமைச்சர், குற்றக்குழுக்களுக்கான விசாரணை
இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறியிருக்கிறார். எந்த இரண்டு ஆண்டு என தெரியவில்லை.
ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். உடலில் டாட்டூ குத்தியிருப்பது, பிறர் கூறும் புகார்,
காவல்துறைக்கு வரும் சந்தேகம் என இவைதான் ஒருவரை குற்றவாளி என ஊர்ஜிதம் செய்து சிறைக்கு
அனுப்புவதற்கான முக்கிய காரணங்கள்.
தண்டனையை
முதலில் கொடுத்துவிடுவோம். பிறகு, தண்டனைக்கான காரணங்களை தேடுவோம் என பக்லே அரசு இயங்குகிறது.
சர்வாதிகாரம் அப்படித்தானே அதிகாரங்களை கையில் குவித்து வைத்துக்கொண்டு மக்களை வேட்டையாடுகிறது.
அதேகதைதான் இங்கும்.
(இந்த கட்டுரையைப்
படிக்கும்போது இந்தியா என்ற நாட்டின் சமகாலம் நினைவுக்கு வந்தால் அது தற்செயலானதே)
தி எகனாமிஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக