அயோத்திதாசரின் பெயரை மறைத்து விமர்சித்த ஆளுமைகளைப் பற்றிய நூல் - பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜங்கம்

 





பெயரழிந்த வரலாறு - அயோத்திதாசர் 


பெயரழிந்த வரலாறு

அயோத்தி தாசரும் அவர் காலத்திய ஆளுமைகளும்

ஸ்டாலின் ராஜாங்கம்

காலச்சுவடு

தமிழ் வழியில் படித்து ராயப்பேட்டையில் சித்த மருத்துவமனைச்சாலை நடத்தி வந்த அயோத்திதாசர், பௌத்த மதத்தை பட்டியலின மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களை அதைநோக்கி ஈர்த்தார். இதற்கென தனது நாளிதழில் பல்வேறு தொடர்களை எழுதி அதை நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதேபோல இரட்டைமலை சீனிவாசன், சிங்கார வேலர், லட்சுமி நரசு ஆகியோர் பட்டியலின மக்களுக்கு பல்வேறு பங்களிப்புகளை ஆற்றினர்.

அன்றைய காலத்தில் மக்களிடையே புகழ்பெற்றிருந்த பிராமண கவிஞர்கள், எழுத்தாளர்கள் பட்டியலின மக்களுக்காக பாடுபட்ட அயோத்திதாசரின் செயல்பாடுகளை எங்குமே குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட நேர்ந்தாலும் கூட பெயரைக் கூறவில்லை.

இந்தவகையில் அவரது செயல்பாடு குறிப்பிடப்படாமல் அழிந்துபோனது. இதை ஸ்டாலின் ராஜாங்கம், அன்றைய போக்கு அப்படித்தான் இருந்தது. உவேசா, பாரதி மட்டும் அயோத்திதாசரின் பெயரைக்குறிப்பிடாமல் இல்லை. அயோத்திதாசரும் மேற்சொன்னவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விமர்சித்தார் என்று கூறுகிறார். அயோத்திதாசரின் செயல்பாட்டில் தனது இனத்தாரின் முன்னேற்றம் இருந்தது. எதிர்தரப்பில் கூட அதே நிலைதான்.

இந்து தர்மங்களை காத்து நின்ற உவேசா, பாரதி ஆகியோர் அயோத்திதாசரின் சமூக முன்னேற்ற செயல்பாடுகளை மறைத்து செயல்பட்டதை அறியும்போது வேதனை எழுகிறது. உண்மையில் இந்த நூலை படித்து முடித்தபிறகு, எந்த மனிதரும் விருப்பு வெறுப்பு கடந்த செயல்பாட்டை கொண்டில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அதிலும், தாழ்த்தப்பட்டவர்கள் இந்து தர்மத்தை சனாதனத்தை மீறிவிடுவார்கள் என்ற ஆத்திரத்தில் பாரதி, அயோத்திதாசரின் குடும்பத்தை இழிவு செய்து பத்திரிகையில் எழுதி விமர்சித்துள்ளார்.

நூலில் அயோத்திதாசரின் நிலைப்பாட்டை பிற ஆளுமைகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்தி ஆசிரியர் விளக்கியுள்ளார். அதன் அடிப்படையில் அயோத்திதாசரின் செயல்பாடு சிறப்பாகவே அமைந்துள்ளது. இரட்டைமலை சீனிவாசனின் ‘பறையன்’ இதழும், தமிழன் இதழும் பல்வேறு வகையில் வேறுபட்டாலும் கூட பட்டியலின மக்களின் நலன் என வரும்போது, ஒத்திசைவாக செயல்பட்ட செய்தி ஆச்சரியம் தருகிறது. இந்த வகையில் அயோத்திதாசர் சற்று நெகிழ்வாகவே செயல்பட்டுள்ளார். அடுத்து  ஆங்கிலவழியில் கல்வி கற்ற சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர்  பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் ஒன்றாக செயல்ப்பட்டு வந்த  செயல்பாடும் கவனிக்கத் தக்கது.

அயோத்திதாசரின் செயல்பாடு, நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய தெளிவை பெயரழிந்த வரலாறு வழங்குகிறது. கூடவே, அவருடைய சமகாலத்தவர்களின் மனதிலுள்ள கருத்துகளையும் அவர்களது செயல்பாடுகளை வைத்து கணித்து கூறுகிறது. இதற்கு ஆளுமைகளின் கருத்துகள், விமர்சனக்கட்டுரைகள், நூல்கள், பத்தி எழுத்துகள் என பலவும் எடுத்தாளப்பட்டுள்ளன.

‘தமிழன்’ நாளிதழ் ஏன் சிறந்த நாளிதழாக உள்ளது என யோசித்தால், முக்கியமான செய்திகளை வெளியிட்டுள்ள வகையில் என பதில் கூறலாம். அம்பேத்கருக்கு உதவிய பரோடா மன்னரின் உதவி பற்றி அறிந்தவுடனே அதை செய்தியாக வெளியிட்டுள்ளார் அயோத்திதாசர். ஏனெனில் எத்தனை நாளிதழ்கள் இதை கவனப்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அயோத்திதாசர் அதை முக்கியமான செய்தியாக கருதியுள்ளார். மன்னரை பாராட்டி  பா இயற்றி பாடியுள்ளார்.

பௌத்த மதத்தை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் கவனப்படுத்துவது, அதன் அடையாளங்களை கண்டறிவது என அயோத்திதாசர் செயல்பட்டுள்ளார். இதே வகையில் ‘பௌத்தமும் தமிழும்’ நூலில மயிலை சீனி வேங்கடசாமி பல்வேறு கருத்துகளை கூறியுள்ளதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

பௌத்தத்தை தழுவிய மக்கள் எப்படி தாழ்த்தப்பட்ட மனிதர்களாக மாற்றப்பட்டு, அவர்கள் மீது சாதி இழிவு திணிக்கப்பட்டது என்று அயோத்திதாசர் கூறுவது காரண ரீதியாக யோசிக்கும்போது பொருத்தமாகவே இருக்கிறது. பிராமணர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில் அவர், ஆங்கில ஆட்சியாளர்களை ஆதரித்துள்ளார். சுதேசி இயக்க ஆதரவாளர்களை, தலைவர்களை கடுமையாக தமிழன் நாளிதழில் விமர்சித்து வந்துள்ளார்.

பாரதியார், பட்டியலின மக்களை ஈனச்சாதி, பறை நாய் என்று கூறுவதை அயோத்திதாசர் எப்படி பார்க்கிறார். அப்படி கூறப்படுவதை ஏன் எதிர்க்கிறார் என்ற பார்வை முக்கியமானது. இந்த பார்வையே இரட்டை மலை சீனிவாசனையும், அயோத்திதாசரையும் கருத்தியல் அடிப்படையில் பிரித்திருக்கிறது. 

ஒருவகையில் பெயரழிந்த வரலாறு, பட்டியலின மக்களைப் பற்றிய பார்வை சுதந்திரப்போராட்ட காலத்தில் எப்படியிருந்தது என்பதை கூறும் ஆவணமாக உள்ளது.

கோமாளிமேடை டீம்

https://www.amazon.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-Peyarazhintha-Varalaru-Essays-ebook/dp/B08GM88JG5

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்