ராணுவத்தில் உள்ள சூது செய்யும் கொலைகாரர்களை பழிவாங்கும் வழக்குரைஞர்கள்!
மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் - கே டிராமா |
மிலிட்டரி
பிராசிகியூட்டர் டாபர்மேன்
கொரிய டிராமா
தொடர்
ராக்குட்டன்
விக்கி ஆப்
கொரிய ராணுவத்தில்
நடைபெறும் ஊழல்கள், அதற்கான சூத்திரதாரிகளை இரு ராணுவ வழக்குரைஞர்கள் சேர்ந்து சுளுக்கெடுப்பதுதான்
பதினாறு எபிசோடுகளின் கதை.
நாயகன் பெயர்தான்
டாபர்மேன். அப்படியல்ல டோ பே மன். அவனது எதிரிகள் அவனது பணத்திற்கான விசுவாசத்தைப்
பார்த்து அவனை டாபர்மேன் என்ற அழைத்து மகிழ்கிறார்கள். ஒருகட்டத்தில் நாயகன் , தன்னைப்
போலவே உள்ள டாபர்மேன் நாயை வளர்க்கிறார். தொடரின் தலைப்பு வந்துவிட்டதல்லவா?
பள்ளியில்
படிக்கும் டோ பே மன்னின் பெற்றோர் ராணுவத்தில் வழக்குரைஞர்களாக இருந்து கார் விபத்தில்
மர்மமாக இறந்துபோகிறார்கள். அதிலிருந்து ராணுவம் , சேவை என்றாலே கசப்பாக இருக்கிறது
டோவுக்கு. எனவே, ராணுவ சேவை வயது வந்தாலே தன்னை ஏதாவது குற்றங்களில் ஈடுபடுத்திக்கொண்டு
பள்ளியில் இருந்து வெளியே வந்துவிடுவான். ஆனாலும் கூட வழக்குரைஞர் தேர்வில் விரைவில்
வெற்றி பெற்றுவிடுகிறான். ஆனால், பள்ளி சிறுவனான அவனை எந்த நிறுவனமும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை.
அப்போது அவனுக்கு
முங்க் சூ என்ற வழக்குரைஞர் ராணுவ வழக்குரைஞராக வேலைக்கு சேர் என காசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்.
இருவரும் சேர்ந்து ராணுவத்தில் கட்டாய ராணுவ சேவைக்கு வரும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து
இயங்கி காசு சம்பாதிக்கிறார்கள். அப்படி இயங்கி வரும் டோ பே மன்னுக்கு காசுதான் அனைத்துமே
என்று படுகிறது. நீதி, நியாயத்தைப் பற்றி அவன் அணுவளவும் கவலைப்படுவதில்லை.
இந்த நிலையில்
அங்கு சா வு இன் என்ற புதிய வழக்குரைஞர் வருகிறார். அவர், தனது மேலதிகாரியான் டோ பே
மன்னை தொடர்ந்து கண்காணிக்கிறார். உண்மையில் அவருடைய அப்பாவும், டோ பே மன்னின் பெற்றோரும்
நெருங்கிய நண்பர்கள். ஆனால் அனைவருமே மர்மமான முறையில் திடீரென இறக்கிறார்கள். அதற்கு
காரணமான நபர், ராணுவத்தின் டிவிஷன் கமாண்டரான நோ வா வாங். பெண் தலைவரான இவர் அதிகார
வெறி பிடித்தவர். பதவி, அதிகார வெறியில் பலரையும் ஏன் தனது மகனைக் கூட சூதாட்ட காய்
போல பயன்படுத்துகிறார்.
டோ பே மன், நோ வா வாங்கின் மகனுடைய காலில் விழுந்து தன்னை உயர்த்திக்கொள்ள
நினைக்கிறார். பின்னாளில்தான் தன்னுடைய பெற்றோர் இறந்துபோக காரணமே நோ வா வாங் என அடையாளம்
கண்டுகொள்கிறார். அவரும் சா வு இன்னும் சேர்ந்து பழிவாங்கத் தொடங்குகிறார்கள். முதலில்
ராணுவத்தில் உள்ள ரகசிய அமைப்பான பேட்ரியாட்டிக் சொசைட்டியில் உள்ளவர்களை மெல்ல உடைக்கத்
தொடங்குகிறார்கள்.
தாக்குதல் என்றால் எதிர்தாக்குதல் இல்லாமலா? எதிர்
தாக்குதல் காரணமாக டோ பே மன், சா வு இன்னுக்கு என்ன நடந்தது? குற்றவாளிகளை தண்டிக்க முடிந்த தா என்பதை சுவாரசியமாக
சொல்கிறார்கள்.
தொடரின் பெரும்பகுதி
ராணுவ நீதிமன்றத்தில்தான் நடைபெறுகிறது. டோ பே மன், சா வு இன் என இரண்டு பாத்திரங்களும்
நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சா வு இன்னுக்கு கடைசி வரையில் உதவும் காங் அற்புதமான நண்பர். தொடரை முழுமையாக ஆளுமை செய்வது,
சா வு இன் என்ற பெண் வழக்குரைஞர்தான். இவர்தான் நாயகனை முழுமையாக நேர்மையானவராக மாற்றுகிறார்.
அவன் யார், யாருக்கு எதிராக போராட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறார். அவன் மெல்ல
தனது கடந்த காலத்தை அறிந்தவுடனே எதிரிகளை வேட்டையாடுவதற்கான திட்டமிடலை தொடங்கி மூன்றே
மாதங்களில் ஒட்டுமொத்த எதிரிகளையும் வேட்டையாடி தீர்க்க சவால் விடுகிறான். அதனை சா
வு இன்னும் ஏற்கிறாள்.
சா வு இன்னுக்கு
அப்பாவின் நிறுவனத்தை தான் ஏற்று நடத்துவதோடு, அதற்கு முன்னதாக எதிரிகளையும் முற்றாக
அழிக்கவேண்டிய வேலை இருக்கிறது. அதை செய்ய டா போ மன் உதவுகிறார்.
மறுக்க முடியாத
ஆஃபர் என்ற வசனத்தை தொடரில் பலரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேசுகிறார்கள். பேசுவதைப்
பொறுத்து அதன் அர்த்தம் மாறிக்கொண்டே வருகிறது.
நோ டேம் என்ற
பாத்திரத்தில் நாயை மட்டும் காதலிக்கும் டிவிஷன் கமாண்டர் மகனாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார்.
மெல்ல அவர் தன்னைச் சுற்றியுள்ள கொடூரமான உலகை புரிந்துகொள்கிறார். கூடவே ராணுவத்தில்
சித்திரவதைகள் உடல், மன ரீதியாக அனுபவிக்கும் பிரைவேட் பியான் என்ற நண்பனுக்கு துணையாக
நீதிமன்றத்தில் உண்மை சொல்லும் காட்சி அசத்தலாக உள்ளது. போல்ட் என்ற நாயை அடுத்து நேர்மையான
நண்பன் என ஒருவனாக பியோனை கருதுகிறான்.
கொரிய ராணுவத்தில்
பணக்கார இளைஞர்களை மையமாக வைத்து நடக்கும் ஊழல்களை, அரசியல்வாதிகள் செய்யும் அதிகார
விளையாட்டுகளை முடிந்தளவு நேர்த்தியாக கூற முயன்றிருக்கிறார்கள். தொடர் சற்று சீரியசானது
என்பதால், டோ பே மன்னின் மேலதிகாரியான வழக்குரைஞர் பாத்திரம், அவனது அத்தை, கூலிப்படை
கூட்டம் ஆகியவற்றை நகைச்சுவைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் அனைத்துமே
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
டோ பே மன்
தனது புரோமோஷனைக் கூட மறுத்து வழக்குரைஞராக
அப்படியே தொடர்வதோடு கதை நிறைவு பெறுகிறது. அவனது அத்தை, வழக்குரைஞர் தலைவரை
மணக்கிறாள். டோ பே மன், சா வு இன்னுக்கு கணவனாகிறான். காங், அமெரிக்காவிற்கு சென்றுவிடுகிறான்.
பிற குற்றவாளிகள் அனைவரும் தண்டனை பெறுகிறார்கள். நோ டேம் தனது பங்குகளை சா வு இன்னுக்கு
கொடுத்துவிட்டு நாய் காப்பகத்தில் வேலை செய்யத் தொடங்குகிறான்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக