தீயணைப்புப்படை கேப்டனுக்கும், மருத்துவருக்கும் இடையே எரியும் காதல் நெருப்பு !

 


 


யாங் யாங் - வாங் சுரான் (ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்)







ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்

சீன டிவி தொடர்

ராக்குட்டன் விக்கி ஆப்

சீனர்கள் எதையும் சுருக்கமாக சொல்லாமல் இழுப்பதில் வல்லவர்கள் என்பதால், தொடர் நாற்பது எபிசோடுகள் நீள்கிறது. ஆனால் பெரிதாக சலிக்காமல் இருக்க ஏராளமான கதைகளை உள்ளே சேர்த்தியிருக்கிறார்கள்.

ஏழை, பணக்காரன் காதல் கதை. அதை இருவரின் பின்னணியாக தீயணப்புத்துறை, மருத்துவம் என மாற்றி கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசம், தேசப்பற்று ஆகியவற்றை மழைச்சாரல் போல சேர்த்து பரிமாறினால் டிவி தொடர் அமோகமாக ரெடி.

தொடரைப் பார்க்க வைக்க நாயகன்,, நாயகியின் அழகுதான் பெருமளவு உதவுகிறது. நாயகன் வெளிவயமானவன், நாயகி அகவயமானவள். அவளுக்கு வரும் பிரச்னைகள் அனைத்துமே அவளது குண இயல்பு சார்ந்த அதை புரிந்துகொள்ளாத அம்மா, மருத்துவமனை சார்ந்த ஊழியர்களால் வருகிறது.

 நாயகன், சோன் யான். நேர்மையானவன். சிறுவயதில் குடும்பத்தை தொலைத்தவன். அவனது அப்பா, நல்லவர். அதனால் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார். காசு இல்லாத காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்று இன்னொருவரை மணந்தது, கட்டுமான வேலை பறிபோனது காரணமாக மனம் நொந்து பனியில் வெளியே  உட்கார்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் சோன் யானை அவனது மாமா, அத்தை கவனித்து வளர்க்கிறார்கள்.

பள்ளியில் சோன் யானுக்கு, புதிதாக வகுப்பில் சேரும் புசுபுசு முடி கொண்ட பணக்காரப் பெண் ஷூ மெங் மீது காதல் வருகிறது. அவளுக்கும்தான். ஆனால், அதை அவர்கள் வெளிப்படையாக கூறுவதில்லை. ஷூ மெங், அகவயமானவள் என்பதால், அவளுக்கு தேவையான பிடிக்கும் விஷயங்களை மெல்ல தெரிந்து சோன் யான் வாங்கிக்கொடுக்கிறான். நண்பனாக காதலனாக இருக்கிறான். ஆனால், இதெல்லாம் ஷூ மெங்கின் வளர்ப்பு அம்மாவுக்கு பிடிக்கவில்லை. மகளை படிக்க கட்டாயப்படுத்தி வெளிநாட்டிற்கு அனுப்புகிறாள். இதனால் சோன் யானிடம் அவனை காதலிக்கவில்லை என பொய் சொல்லிவிட்டு ஷூ மெங் மருத்துவம் படிக்கச் செல்கிறாள். சோன் யான் உடைந்து போகிறான்.

பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.

ஷூ மெங், மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறாள். சோன் யான், தீயணைப்புத்துறையில் வேலை செய்கிறான். ஷூ அவனைப் பார்த்து பேச முயல்கிறாள். ஆனால் சோன் யான் அவளைப் புறக்கணிக்கிறான். தீயணைப்பு நிலையமான ஷி டாய் இருக்கும் இடமும், ஷூ மெங்கின் மருத்துவமனையும் அருகில் இருப்பதால் அடிக்கடி விபத்து, வீரர்களுக்கு காயம் என சந்திக்க நேருகிறது. அப்போது ஷூ மெங், அவனிடம் பேசி மீண்டும் காதலை புதுப்பிக்க முயல்கிறாள். இருவரும் வேறு வேறு உலகில் இருப்பது போல சுற்றியிருப்பவர்கள் கூறுகிறார்கள். ஒத்துப்போகாது என சொல்கிறார்கள். ஆனால் ஷூ மெங்கிற்கு ஆயுள் முழுக்க காதல் என்றால் அது சோன் யானுடன் மட்டும்தான் என நினைக்கிறாள். சோன் யாங், பட்டும்படாமல் விலகிப்போகிறான். உண்மையில் கடந்த காலத்தில் என்ன நடந்தது, சோன் யான், ஷூ மெங்கை ஏன் விலக்குகிறான் என்பதை அறிந்தால் தொடரின் மர்மம் விலகிவிடும். தொடரும் சுபமாக முடிந்துவிடும்.

சீன தொடர்களைப் பொறுத்தவரை ஊழல், அநீதி, சமூக விரோதிகள் என அனைத்துமே உண்டு. ஆனால் தொடரின் முடிவில் அனைவருக்கும் நியாயந்தீர்க்கப்படுகிறது. கொரிய தொடர்களைப் போல துணிந்தவன்தான் பிஸ்தா என பிராக்டிக்கலாக இருப்பதில்லை. கம்யூனிச விசுவாசம், நாட்டுப்பற்று என இரண்டுமே தூக்கிப்பிடித்துத்துதான் தொடர்களை எடுக்கிறார்கள். இந்த தொடரும் அதற்கு விதிவிலக்கில்லை. காதல் என்பதெல்லாம் மக்களை இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதற்கான மசாலா அம்சம்தான். தீயணைப்பு வீரர்கள் இறப்பு, அவர்களுக்கான இறுதிச்சடங்கு காட்சிகளை நன்றாக எடுத்து நம்மை கண்கலங்க வைக்கிறார்கள்.

ஷூ மெங்கின் தத்தெடுத்த வளர்ப்பு அம்மா, பல்வேறு சதிகளை செய்து சோன் யானின் வளர்ச்சியைத் தடுக்கிறாள். அவனது தங்கையின் கல்லூரி படிப்பை முடக்குகிறாள். இதற்கான பரிகாரத்தை வளர்ப்பு அம்மாவின் மகனே பெறுகிறான். காவல் நிலையத்தில் உள்ள அவனை விடுவிக்க,  முழந்தாளிட்டு சோன் யானின் தங்கையிடம் மன்னிப்பு கேட்கிறாள். தனது தவறுகளை ஒப்புக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைகிறாள். ஆனால் காசு கொடுத்து பிணையில் வெளியே வந்துவிடுகிறாள். இதில் என்ன நீதி இருக்கிறது என தெரியவில்லை. வளர்ப்பு அம்மாவை பழிக்குப் பழி வாங்குவது சோன் யான் அல்ல. அவனின் தங்கை. தனது அண்ணன், பெற்றோர் கஷ்டப்பட்டது வருங்கால அண்ணியின் பணக்கார குடும்பத்தால் என்பதை அவள் மறக்கவில்லை. எனவே, வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியாக பழிவாங்குகிறாள். மனநிறைவைத் தருகிற காட்சி இதுவே.

இறுதியாக சோன் யான், வளர்ப்பு அம்மாவை பாலத்தின் இடிபாடுகளிலிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறான். அது அவளது மனதை மாற்றுகிறது. எனவே, மகள் ஷூ மெங்கின் கல்யாணத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவதோடு அவரின் காட்சிகள் நிறைவடைகின்றன.

சோன் யான், தனக்கு லஞ்சம் கொடுக்க முயல்கிறார்கள் என பணத்தை மேலதிகாரியிடம் காட்டுகிறார். வழக்கை திசைதிருப்புகிறார்கள் என கூறுகிறார். ஆனால், தீயணைப்பு துறை நிர்வாகமோ உடனே சோன் யானை தற்காலிக பணிநீக்கம் செய்கிறார்கள். இத்தனைக்கும் அந்த வழக்கில் உண்மைக் குற்றவாளி கண்டறியப்படாத நிலையில், புகார் கொடுத்தவரை குற்றவாளியாக்குகிறார்கள். இது என்ன நீதி? சீன நீதியா? செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த இன்ஸ்ட்ரக்டர் ஜியான் யூ தண்டிக்கப்படுவதில்லை.

 சோன் யானின் உயரதிகாரி. உளவியல் பட்டதாரி. மருத்துவமனையில் சோன் யானைக் காதலிக்க அனுமதி கேட்கிறார். உண்மையில் தன்மேல் மதிப்புள்ள, தன்மானம் உள்ள பெண் இப்படி கேட்க மாட்டார். இயக்குநர் எதற்கு இப்படி ஒரு காட்சியை, உரையாடலை யோசித்தார் என்று தெரியவில்லை.

ஷூ மெங், சோன் யானின் கடந்த கால ராணுவ வாழ்க்கையை அறிய முயல்கிறாள். சரி. அதற்கு, அவன் தங்கையை முன்னமே அணுகினால் எளிதாக தெரிந்துகொண்டிருக்கலாம். இல்லையெனில் அவளது வளர்ப்பு அம்மாவின் காலில் விழுந்து சோன் யானுக்காக கெஞ்சிய மாமா, அவளது குடும்பம் செய்த அநீதிகளை சொல்லப் போகிறார். அந்த உண்மைகளை சோன் யானே தனது வாயால் சொல்லவேண்டுமென்பது ஷூ மெங் வேண்டும் அல்லது விரும்புகிற காதலா?

சோன் யான் தொடர் முழுக்க அநீதி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறார். நண்பர்களை இழக்கிறார். அதற்காக போராடி பணிநீக்கம் செய்யப்படுகிறார். காதலி, அவன் உண்மையாக இல்லை என சொல்லி பிரிகிறாள். சந்திக்கும்போதெல்லாம் வேதனைப்படுத்துகிறாள். தங்கை போலியான அழகு சாதனப் பொருட்க்களை விற்று, போலீசில் மாட்டி அண்ணனை கடன்காரனாக மாற்றுகிறாள்.

அவனது பெற்றோர் தரங்கெட்டவர்கள் என்பதையும், ஏழை என்பதையும் சொல்லிக்காட்டாத ஷூ மெங் தரப்பு ஆட்களே இல்லை எனலாம். இறுதியாக ஷூ மெங் மீது கொண்ட காதலுக்காக அனைத்தையும் மன்னிக்கிறான். ஏற்றுக்கொள்கிறான். இதுபோல ஒரு காவிய பாத்திரத்தை உருவாக்குவது மிக கடினம். சீன டிவி தொடர் இயக்குநருக்கு நன்றிகள் கோடி.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்