செயற்கை நுண்ணறிவு ஆய்விலும், வணிகப்படுத்துதலிலும் தடுமாறும் கூகுள்!

 




சுந்தர்பிச்சை, இயக்குநர், கூகுள்



2016ஆம் ஆண்டே கூகுள், செயற்கை நுண்ணறிவு பாதை பற்றிய  அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. ஆனால் செயல்பாடு என்ற வகையில் பின்தங்கிவிட்டது. எனவே, சாட்ஜிபிடி மைக்ரோசாப்டின் முதலீட்டைப் பெற்று முதலில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதனால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது கூகுளின் இயக்குநர் சுந்தர் பிச்சைதான்.

அமெரிக்க டெக் நிறுவனங்களின் வசீகர இயக்குநர்கள் என்று சொல்லும் எந்த அம்சங்களும் இல்லாத அகவயமான தலைவர், சுந்தர். திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதில் காட்டிய தீவிரம் அவரை தலைவராக்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என யாருடைய மக்கள் செல்வாக்குக்கும் எதிராக சுந்தரை நிறுத்தமுடியாது.

கூகுளின் ஐஓ மாநாட்டில் கூகுள் மெயிலுக்கு ஹெல்ப் மீ ரைட் எனும் வசதி, கூகுள் மேப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் 3 டியில் பார்ப்பது, புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் செம்மைபடுத்துவது, கூகுள் பார்ட் எனும் சாட் ஜிபிடிக்கு போட்டியானசெயற்கை நுண்ணறிவு, அதற்கான பால்ம் 2 எனும் லாங்குவேஜ் மாடல்  என ஏராளமான விஷயங்களை பேசினார்கள். ஆனால், பலரும் தெரிந்துகொள்ள விரும்பியது. கூகுள் சர்ச்சில் செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ன என்பதைப் பற்றியதுதான். கடந்த ஆண்டு தேடுதல் வருமானம் 160 பில்லியனாக இருந்தது. தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு, அறுபது சதவீத வருமானத்தை கூகுள் சர்ச்தான் பெற்றுத்தருகிறது.

கூகுள் சர்ச் பற்றி சுந்தர் ஏதாவது பேசுவார் என பலரும் நினைக்க, அந்த தலைப்பை அப்படியே துணைத்தலைவரும் கூகுள் சர்ச்சிற்கு பொறுப்பாளருமான கேத்தி எட்வர்ட்சிற்கு தள்ளிவிட்டார். அவர் எஸ்ஜிஇ எனும் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி பேசினார். சாட் ஜிபிடியில் ஒரு கேள்வி கேட்டால், அதுவே இணையத்தை அலசி பதில்களைக் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறது. இந்த சூழலில், கூகுள் சர்ச்சின் தேவை என்ன என்று கேட்டடால் அதற்கு எந்த பதிலும் இல்லை.

கூகுள் சர்ச் என்பது மக்களுக்கு தகவல் தேடல் என்றாலும் அதை வைத்து பல கோடி ரூபாய் விளம்பர வருமானத்தை கூகுள் பெறுகிறது. சாட் ஜிபிடி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வேகம் இன்னும் நேர்த்தியாகும்போது, கூகுளின் தேவை குறைந்துவிடும். மற்ற சேவைகளை அடிப்படையாக வைத்தே இனி கூகுள் சமாளித்து வாழ வேண்டியதிருக்கும். வருமான அடிப்படையில் இப்போது ஆல்பபெட் பதினேழாவது நிறுவனமாக உள்ளது. தொடர்ச்சியாக இதுபோல வருமானத்தை தக்க வைப்பதும், டெக் சந்தையில் தாக்குப்பிடிக்கவும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் வேகம் காட்டுவது அவசியம்.

 சாட் ஜிபிடி அறிமுகத்தை ஐபோன், பர்சனல் கம்ப்யூட்டர் அறிமுகமானது போல தொழில்நுட்ப மறுமலர்ச்சி ரேஞ்சுக்கு கொண்டாடியவர்கள் அதிகம். அந்த வலைதளத்திற்கு சென்று சோதிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். சாட்ஜிபிடியில் கேள்வி கேட்டு பதில் பெறலாம். கட்டுரை எழுதலாம். வணிகத்திற்கான பிளானை வடிவமைத்து பெறலாம். இதெல்லாம் கூகுள் சர்ச்சில் கிடைக்காது. அங்கு, கிடைப்பது பல்வேறு வலைத்தளங்களின் முகவரி மட்டுமே. மைக்ரோசாஃப்டின்  பிங் சர்ச் எஞ்சின் சந்தையில் மூன்று சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. இதில் சாட் ஜிபிடியை இணைப்பதன் மூலம் சந்தையில் வளர்ச்சியை பெற நினைக்கிறது. இந்த வகையில் 13 பில்லியன் டாலர்களை ஓப்பன் ஏஐ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

கூகுள், 2021ஆம் ஆண்டே லாம்டா என்ற சாட் பாட் ஒன்றை உருவாக்கியது. ஆனால், அது பாகுபாடு கொண்டதாக எளிதாக தொடர்புகொள்ள இயலாத இயல்பில் இருந்தது. எனவே, கூகுள் அதை வெளியே விடவில்லை. விட்டால் இருக்கும் நல்ல பெயரும் கெட்டுவிடும் என நினைத்தது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்குழு உலகளவில் சிறந்தது. அதை குறைவாக எடை போட்டுவிட முடியாது. ஆனால்,அதைப் பயன்படுத்தி ஒரு பொருளை குறிப்பாக மக்கள் பயன்படுத்தும் பொருளை உருவாக்கச் சொல்லும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது.

கூகுளின் நிறுவனத்திற்குள்ளும் நம்பிக்கை இல்லாமல் சரிவுகள் தொடங்கியிருக்கின்றன. 2020ஆம் ஆண்டு ஆப் ஷீட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கூகுள் வாங்கியது. அதன் இயக்குநர் பிரவீன் சேஷாத்திரி கூகுளில் இணைந்தார். பிறகு சில ஆண்டுகளிலேயே அங்கிருந்து விலகிவிட்டார். சரியான நிர்வாகமின்மை, வேகமாக தேவையறிந்து உழைக்காதது, திட்டமின்மை, விதிவிலக்காக தன்னை கருதிக்கொள்வது ஆகியவை கூகுளின் பிரச்னைகள் என பேட்டி கொடுத்தார். இவரைப் போலவே நிறுவனத்தை விட்டு விலகிய நான்கு பணியாளர்களும் ஒன்று போலவே கருத்து கூறினார்கள்.

சாட் ஜிபிடி வந்தபிறகு கோட் ரெட் என அறிவித்து கூகுள் வேலை செய்துவருகிறது. கூகுளின் சந்தை பங்களிப்பு மெல்ல குறைந்து வருகிறது. பிற டெக் நிறுவனங்களுக்கும் அதற்குமான நிறுவன மதிப்பும் வீழ்ந்து வருகிறது. இதனால், நிறுவனத்தில் பங்குகளை அதிகம் வைத்திருந்தாலும் பொறுப்புகளை கைவிட்டு வெளியே சென்ற செர்ஜி பிரின் மீண்டும் நிறுவனத்திற்கு வந்திருக்கிறார்.

பல நாட்களுக்கு பிறகு செர்ஜி பிரின் மீண்டும் நிறுவனத்திற்கு வந்திருப்பது ஊழியர்களுக்கு உற்சாகத்தை விட அலாரத்தையே அலறச் செய்திருக்கிறது. விளம்பர வருமானம், மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, புகழ் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய சிந்தனைகளை உருவாக்கி செயல்படுத்த கூகுள் தயங்குகிறது என்பதே பெரும்பான்மையோர் வைக்கும் குற்றச்சாட்டு.

எஸ்ஜிஇ எனும் தொழில்நுட்பத்தை கூகுள் சர்ச்சில் பயன்படுத்தி அதன் நிறைகுறைகளை காண கூகுள் முயன்று வருகிறது. ஆனாலும் இந்த செயல்பாடு வேகமாக நடைபெறவில்லை. இதன் மூலம் விளம்பர வருமானம் கிடைக்கும், அல்லது அதிகரிக்கும் என்பதற்கும் கூட உத்தரவாதம் இல்லை. கூகுளின் சேவைகளுக்கு சப்ஸ்கிரிப்ஸன் வசதி உண்டு. ஆனாலும் கூட இதில் கிடைக்கும் வருமானம் விளம்பரங்களில் கிடைப்பது போல அதிகமில்லை. சாட்ஜிபிடியை பயன்படுத்த மாதம் 20 டாலர்களைக் கட்டினால் போதும் என அறிவித்திருக்கிறார்கள். பின்னாளில் கூகுளின் சர்ச்சிற்கு கூட இப்படி அறிவிக்க வாய்ப்புள்ளது.

கூகுளின் வேறு வகை வருமானம் என்றால் க்ளவுட் சேவைகளைக் கூறலாம். நடப்பு ஆண்டில்தான் சற்று வருமான வாய்ப்பு வந்திருக்கிறது. க்ளவுட் சேவையில் கூகுள், 11 சதவீத சந்தை பங்களிப்பு கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடியைப் பயன்படுத்துபவர்கள் அதன்வழியாக மைக்ரோசாஃப்டின் அஸூர் க்ளவுட் வசதியைப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். அமேசானின் க்ளவுட் சேவையும் ஒப்பீட்டளவில் கூகுளுக்கு பெரிய போட்டியைத் தரும்.

டெக் நிறுவனங்கள் மனிதர்களுக்கென தனியாக ஏஐ உதவியாளரை வடிவமைக்க முயன்று வருகின்றன. அடுத்ததாக லாபம் என ஒன்று கிடைக்கவேண்டுமெனில் அது, மனிதர்களுக்கான தனிப்பட்ட ஏஐ உதவியாளரை தயாரித்து வழங்குவதாகவே இருக்க முடியும். இதற்கான ஆராய்ச்சியை கூகுள் டீப் மைண்ட் மூலம் ஏற்கெனவே செய்து வருகிறது. ஆப்பிளின் சிரி, அமேஸானின் அலெக்ஸா போல கூகுளுக்கு அசிஸ்டென்ட் என்ற டிஜிட்டல் உதவியாளர் உண்டு. மைக்ரோசாஃப்ட்டும் இந்த போட்டியில் குதிக்க நினைக்கிறது.

சாட்ஜிபிடி ஒருவர் தேடும் விஷயங்களை பணம் கட்டினால் மட்டுமே என்று கூறி கட்டண சேவைக்கு மாறினால், அதை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறையும். கூகுளை இனி யாரும் தேடுதலுக்கு பயன்படுத்த மாட்டார்கள், அமேஸானுக்கு மக்கள் போகவேண்டியதில்லை என பில்கேட்ஸ் போல உத்தரவாதமாக பேச முடியாது. ஏனெனில் டெக் உலகில் நாளை எதுவும் நடக்கலாம். கூகுள், தனது சேவைகளை செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதில் தடுமாறிவருகிறது. அப்படி மாற்றிக்கொண்டால்தான், உண்மையான போட்டி தொடங்கும்.  

 ஃபார்ச்சூன் இதழில் ஜெர்மி காஹ்ன் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்