கொரிய காவல்துறையில் முதல்முறையாக புரொஃபைல் செய்வதை தொடங்கும் இரு அதிகாரிகளின் போராட்டம்!

 





த்ரோ தி டார்க்னெஸ் - கே டிராமா









த்ரோ தி டார்க்னெஸ்

கே டிராமா

12 எபிசோடுகள்

ராக்குட்டன் விக்கி

 

எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்வதில் உள்ள மகிழ்ச்சிக்கென அதை செய்யும் சைக்கோ, சீரியல் கொலைகாரர்கள் கொரியாவில் உருவாகிறார்கள். அவர்களை கொரிய காவல்துறை எப்படி எதிர்கொண்டது. அங்கு குற்றங்களை புரொஃபைல் செய்யும் பிரிவு எப்படி தோன்றியது, அதற்காக இரு காவல்துறை அதிகாரிகள் என்னென்ன சிரமப்பட்டனர் என்பதை கூறும் தொடரிது.

தொடர் முடியும்போது, பிஹேவியர் சயின்ஸ் பிரிவை உருவாக்கியவர்களில் ஒருவரான சாங், தங்களது பழைய அலுவலக அறையை வெறுமையான விரக்தியான கண்களோடு பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் காட்சியோடு தொடர் நிறைவுபெறும்.

த்ரோ தி டார்க்னெஸ் தொடரைப் பார்க்கும் பார்வையாளர்களும் கூட அப்படித்தான் மாறிப்போகிறார்கள். அந்தளவு குற்றம், குற்றத்தின் தீவிரம், ரத்தம், வெட்டப்பட்ட உடல், கொலை செய்த காரணம், வக்கிரமான மனங்களின் நியாயப்படுத்தல்கள், விசாரணைக் காட்சிகள் உள்ளன.

அமெரிக்க புரொஃபைலரான ஜான் டக்ளஸ் எழுதிய மைண்ட் ஹண்டர் என்ற நூலின் கொரிய மொழிபெயர்ப்பை தொடரில் காட்டுகிறார்கள். அந்த நூலை அடிப்படையாக வைத்தே கொரிய காவல்துறையில் குற்றங்களை ஆவணப்படுத்தும் பிரிவைத் தொடங்குகிறார்கள். ஆனால், இந்த பிரிவை பலரும் எதிர்மறையாக பார்க்கிறார்கள். அலுவலக அரசியல் மிகவும் அசிங்கமாக அரங்கேறுகிறது.

குற்றங்களை கண்டறிந்து குற்றவாளிகளை பிடிப்பதை விட நீயா நானா என்ற போட்டியே அதிகம் உள்ள சூழலில் சாங் போன்ற நேர்மையான, முன்முடிவுகள் இல்லாத அதிகாரிகள் என்னவிதமான எதிர்மறையான சூழலை எதிர்கொள்கிறார்கள் என சிறப்பாக காட்டுகிறார்கள்.

தொடரில் வரும் சாங்கின் பாத்திரம் சற்று பரிதாபமானது. இவர், தனது தாயோடு ஆறு வயதில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்கிறார். அங்கு, நேரும் விபத்தில் ஏரியில் தவறி விழுந்துவிடுகிறார். அப்போது நீருக்குள் இறந்துபோய் மிதக்கும் பெண் உடலைப் பார்க்கிறார். அதே இடத்தில் கொலைகாரனையும் அடையாளம் காண்கிறார். இறந்துபோன பெண்ணின் கண்ணில் உள்ள சோகம் அவரைத் தாக்குகிறது. எனவே, காவல்துறை அதிகாரியாக முடிவு செய்கிறார். அன்று தொடங்கி தனது வாழ்வின் பெரும்பாலான நாட்களில் குற்றங்களோடு, குற்றவாளிகளின் மனங்களை தடமறியவே முயல்கிறார். இதனால் சில சமயங்களில் தானும் ஒரு குற்றவாளியோ என அச்சப்படுகிறார். மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது. மெல்ல அதிலிருந்து குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறும் நன்றி வார்த்தைகள் மூலம் மீள்கிறார்.

இருக்கும் காவல்துறை அதிகாரிகளில் சாங் எப்படி வேறுபடுகிறார். அவர், குற்றவாளிகளை அடிப்பதில்லை. உதைப்பதில்லை. அவர்கள் பதிலே பேச முடியாதபடி ஆதாரங்களை முன்வைத்து, மெல்ல அவர்களது மனதில் உள்ள நம்பிக்கையை உடைக்கிறார் இதன் வழியாக அவர்களது குற்றங்களை வெளிப்படுத்துகிறார். கர்ப்பிணியாக இருந்து இறந்துபோன இளம்பெண் கொலை வழக்கில் சாங்கின் பள்ளி நண்பர் மாட்டிக்கொள்கிறார். அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்து சாங்கின் உயரதிகாரி சீஃப் மார்க் குற்றவாளி என ஒத்துக்கொள்ள செய்கிறார்.

அவருக்கு தண்டனையும் பனிரெண்டு ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் சாங் அதை ஏற்பதில்லை. குற்றம் நடந்த இடத்திற்கு பலமுறை சென்று ஆய்வு செய்கிறார். மேலும், காவல்நிலையத்திற்கு வந்த மற்றொரு குற்றவாளி, சாங்கின் நண்பர் குற்றம் செய்யவில்லை என்கிறார். எனவே, அவரைச் சென்று சிறையில் சந்தித்து ஏன் அப்படி சொன்னாய் என்று தகவல் கேட்டு சைக்கோ, சீரியல் கொலைகாரர்களின் மூளை செயல்படும் விதத்தை அறிகிறார்.

ஆனால் அவரின் செயல்பாடு, அவரின் மேலதிகாரி சீப் பார்க்கிற்கு பிடிக்கவில்லை. அவரை அவமரியாதையாக பேசுகிறார். குற்றவாளியை பிடிக்க முடியுமா என சவால் விடுகிறார். பிடிப்பேன் என சாங் கூறுகிறார். அப்போது எதேச்சையாக வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் உணவு சேவை டெலிவரி பையன் கைதாகிறார். அவனைப் பார்க்கும்போது சாங்கிற்கு ஏதோ தவறாக இருக்கிறதே என தெரிகிறது. எனவே, அவரை உளவியல் அடிப்படையில் விசாரித்து தனது பள்ளி நண்பன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி  அவன்தான் என நிரூபிக்கிறார்.

இது சீஃப் பார்க்கிற்கு அவமானமாக போகிறது. எனவே, அவர் தனது பெயரில் உள்ள களங்கத்தை துடைக்க சாங், சிறையில் உள்ள சைக்கோ கொலைகாரனை சென்று பார்த்து வந்ததை நாளிதழுக்கு கூறுகிறார். இந்த தகவல் காவல்துறைக்கு புதிதாக இருக்கிறது. ஒரு குற்றவாளி மூலம் இன்னொரு குற்றவாளியை எப்படி பிடிப்பது என அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது. ஆனால் அது ஒரு ஐடியா.

சாங்கைப் பொறுத்தவரை வேலை செய்வது முக்கியம். பாராட்டு, இகழ்ச்சி என இரண்டையும் பெரிதாக மனதில் எடுத்துக்கொள்வதில்லை. வேலையில் முழு அர்ப்பணிப்பாக இருக்கிறார்.

இதை கவனமாக உற்றுப்பார்க்கும் தடய அறிவியல் தலைவர், அமெரிக்காவைப் போல நாமும் காரணங்களே இல்லாத கொலைகளுக்கு தனி பிரிவைத் தொடங்கவேண்டும் என கேட்கிறார். ஆனால், கொரிய காவல்துறை அதற்கென பட்ஜெட் இல்லை என மறுக்கிறது. தடய அறிவியல்துறை தலைவரின் பேச்சை யாரும் கேட்பதில்லை. அவமானப்படுத்துகிறார்கள்.. ஆனால் அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புரொஃபைல் துறையை தொடங்கவேண்டும் என கூறுகிறார். அவர் இதற்கென அதிகாரி சாங்கை தனது கூட்டாளியாக தேர்ந்தெடுக்கிறார்.

இருவரும் சேர்ந்து வயதான பணக்கார பெண்களை கொல்லும் சுத்தியல் கொலைகாரனை தேடி அலைகிறார்கள். இந்த வழக்கில் பெண் கேப்டன் ஒருவரும் உள்ளே வருகிறார். புரொஃபைலர்களைப் பொறுத்தவரை அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினர் கொடுக்கும் தகவல்களை வைத்து சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள். சாங்கின் அர்ப்பணிப்பான உழைப்பை பார்த்து அவரை தொடக்கத்தில் கடுமையாக திட்டும் பெண் கேப்டன் கூட மெல்ல மரியாதையாக பார்க்க ஆரம்பிக்கிறார். இணைந்து வேலை செய்கிறார்கள்.

தொடரில் மொத்தம் நான்கு சைக்கோபாத், சீரியல் கொலைகாரர்களைப் பிடிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கொலை செய்வதில் மகிழ்ச்சி கொள்பவர்கள். யாருமே பணம், பொறாமை, சொத்து என்பதற்காக ஆயுதத்தை கையில் எடுத்தவர்கள் அல்ல.

கொரிய காவல்துறைக்கு காரணமே இல்லாத கொலை என்பதை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. கூடுதலாக, இந்த குற்றங்களில் பிடிக்கும் குற்றவாளிகளை எப்படி விசாரிப்பது என்பதும் புரிவதில்லை. இவர்களுக்கு சாங் உதவி குற்றவாளிகளை விசாரித்து குற்றத்தை ஏற்கும்படி செய்கிறார். அவரின் வழிகாட்டுதல்களை பின்னாளில் சீஃப் பார்க்கும் கூட பெறும் சூழ்நிலை வருகிறது.

காவல்துறையில் நடக்கும் ஆண், பெண் இன பாகுபாடு, உயர் அதிகாரிகளின் அரசியல், குற்றங்களை விட பதவிகளை காப்பாற்றிக்கொள்ளும் முயறசிகள் என நிறைய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இவற்றைப் பார்ப்பது தொடரை சுவாரசியமாக்குகிறது. ஊடகங்கள் எப்படி பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கவலைப்படாமல் செய்தி எழுதி சம்பாதிக்கிறார்கள் என்பதை சற்று தீவிரமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

மைண்ட் ஹன்டர் நூலில் உள்ள சம்பவங்களை தொடரில் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, சாங் வேலை செய்யும் அண்டர்கிரவுண்ட் அலுவலக அறை அப்படியானதுதான்.

சைக்கோபாத், சீரியல் கொலைகாரர்களின் மனநிலை, அவர்களை உளவியல் ரீதியாக எப்படி விசாரிப்பது, குற்றவாளிகளை புரொஃபைல் செய்வது எப்படி என அறிவதை நன்றாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரிகளுக்கு இடையில் அரசியல், கருத்தியல் சண்டை, வசை பாடுதல் அதிகம் உள்ளது. கொரிய தொடர்களுக்கு அடிப்படையான முத்தம், படுக்கையறை காட்சி, குறும்பான காதல் காட்சிகள் எவையும் தொடரில் கிடையாது. அதை எதிர்பார்ப்பவர்கள் வேறு ஏதாவது தொடர்களுக்கு நகர்வது நல்லது.

 துணிச்சலான மனம் கொண்டவர்கள் பார்ப்பது நல்லது. சற்று எதிர்மறையான தன்மை கொண்ட தொடர். கவனம்.

கோமாளிமேடை  டீம்

Final episode date: 12 March 2022

First episode date: 14 January 2022 (South Korea)
Based on: Those Who Read the Minds of Evil; by Kwon Il-yong and Ko Na-mu
Executive producer: Park Yuong-soo
Genre: Crime; Thriller;
Hangul: 악의 마음을 읽는 자들


கருத்துகள்