சுற்றுலா போன இடத்தில் காணாமல் போன குழந்தை
அமெரிக்காவில்
இடா மாகாணத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவம். 2015ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி டியோர்
கன்ஸ் என்ற இரண்டு வயது குழந்தை காணாமல் போகிறது. என்னவானது என்பதை இன்றுவரைக்கும்
க்ளூ ஏதாவது கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது. ஆனால் எதிர்பார்த்த எந்த தடயங்களும்
கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம்.
சால்மன் சாலிஸ்
தேசிய வனப்பகுதிக்கு அருகில் ஜெசிகா மிட்செல் அவரது கணவர் டியோர் கன்ஸ் சீனியர் ஆகியோர்
சுற்றுலாவுக்காக வந்திருந்தனர். டியோர் கன்ஸ் சீனியரின் தாத்தாவும் அவரது நண்பருடன்
அங்கே இருந்தார். அவரிடம்தான் குழந்தை டியோர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் தனது
நண்பருடன் சேர்ந்து மீன் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும்போது, லிட்டில் மேன் எனும்
குழந்தை டியோர் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்த பாருக்கு
மதுபானம் அருந்த சென்றிருந்தனர். குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
வந்து பார்த்தால் ஒருவருக்கொருவர் நீ பார்த்தாயா என கைகாட்டிக்கொண்டு இந்திய கிரிக்கெட்
அணி போல நின்றார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லை.
இருநூறுக்கும்
மேலான காவல்துறையினர், தன்னார்வலர்கள் இரண்டு கி.மீ. தொலைவுக்கு குழந்தை டியோரை தேடினார்கள்.
குழந்தையின் உடை, ரத்தம், கத்தி, கம்பு என எதுவுமே கிடைக்கவில்லை. குற்றவாளி யாரெனவும்
ஊகிக்க கூட முடியவில்லை. 2016ஆம் ஆண்டு வழக்கை விசாரித்து வந்த ஷெரிஃப் லின் போவர்மேன்,
குழந்தை காணாமல் போனதற்கு பெற்றோர் மிச்செல், டியோர் கன்ஸ் சீனியர் ஆகிய இருவர்தான்
காரணம் என கூறினார். குழந்தையை பெற்றோரே காணாப்பிணமாக்கிவிட்டு நடித்தார்களா என பதறாதீர்கள்.
இப்படி கூறுவதற்கு காரணம் இருந்தது. காவல்துறையினரின் பாலிகிராப் சோதனையில் பெற்றோர்
பொய் சொன்னார்கள். முன்னுக்கு பின் முரணாக என தினத்தந்தியில் கூறுவார்களே அந்த ரகத்தில்
அவர்களின் பேச்சு இருந்தது. ஷெரிஃப் எளிமையாக, குழந்தையின் பெற்றோர்கள் பேசியதில் மிக
குறைவாகவே உண்மை இருந்தது என்று ஊடகங்களில் பேசினார்.
போவர்மனுக்கு
பிறகு வந்த ஷெரிஃப், பென்னர் சம்பவ இடத்தில் இருந்த பெற்றோர், தாத்தா, அவரின் நண்பர்
என நான்கு பேர்களையும் சந்தேகப்பட்டார். விசாரித்தார். விசாரணை அறிக்கை எல்லாம் பல
பக்கங்களில் எழுதினார்கள். ஆனாலும் குற்றவாளியை ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. எப்படி
பார்த்தாலும் பெற்றோர்கள் மீது சந்தேகம் அதிகரித்து வந்தது. 2019ஆம் ஆண்டு கேடிவிபி என்ற டிவி சேனலில், டியோர்
பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியானது. டியோரின் பெற்றோர் தங்களை குற்றவாளி என சந்தேகப்பட்டதால்
வேலையை விட்டு நீக்கப்பட்டோம் என குறை கூறினர். தற்போது மிச்செலும், டியோரும் விவாகரத்து
செய்துவிட்டு பிரிந்துவிட்டனர்.
இதில் வேடிக்கையான
விஷயம் ஒன்று உள்ளது. குழந்தையின் பெற்றோரே, தங்களது பிள்ளையை கண்டுபிடிக்க தனியார்
டிடெக்டிவ் ஒருவரை காசு கொடுத்து அழைத்து வந்தார்கள். பிலிப் கிளைன் எனும் அவர், நிதானமாக வழக்கை ஆராய்ந்துவிட்டு,
காசு கொடுத்து கூட்டி வந்த பெற்றோர்கள்தான் குற்றவாளிகள் என கூறிவிட்டார். ஆனால் இதற்கான
எந்தவித ஆதாரங்களையும் அவர் காட்டவில்லை. டிவி பேட்டி ஒன்றில் பெற்றோர், டியோரின் தாத்தா பேசியதை உதாரணமாக காட்டினார்.
பின்னாளைய பேட்டி ஒன்றில், மிச்செல், கணவரின் தாத்தாவுடைய
நண்பரான ஐசாக் ரெய்ன்வான்ட் மது அருந்திக்கொண்டே இருந்தார். அவர் மீது சந்தேகமாக உள்ளது
என்றார். சம்பவ இடத்தில் இருந்த நால்வரும் மாறி மாறி குறை குற்றம் சொன்னார்களே ஒழிய
ஒரு முடிவுக்கு வரவில்லை, காடு, மலை என தேடியும் பிள்ளை கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டில்
கூட ஷெரிஃப் பென்னர் தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்,. பெற்றோரிடம் பேசியிருக்கிறோம்
என்று தகவல் கூறினார்.
கீத் மர்பி
பீப்புள்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக