வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

 


இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்  செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.  இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்  இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு ஏறத்தாழ சென்றுவிட்டது. பெருநிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களைக் கூட கையகப்படுத்தி காய்கறி விற்பனையையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன.

உலகளவில் பத்து ஆண்டுகளாக வால்மார்ட் , அமேஸான் ஆகிய நிறுவனங்கள் இ மார்க்கெட் சந்தையில் போட்டியிட்டு வருகின்றன. 75 சதவீத சந்தையை இரு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. மீதியுள்ள சந்தையை சிறு நிறுவனங்களான ஸ்விக்கி, ஸோமாடோ, பிக் பேஸ்கட், ஸெப்டோ, மீஸோ, பிளிங்கிட், நைகா, டன்ஸோ ஆகியவை வைத்திருக்கின்றன. உணவு, உடை, எலக்ட்ரானிக்ஸ், காய்கறி, மருந்துகள் என அனைத்தையும் இந்த நிறுவனங்களின் ஆப்பில் ஆர்டர் செய்யலாம். டெலிவரி பெறலாம்.

உள்ளூரில் போலிகள் அதிகம் என பெண்கள் பலரும் ஆன்லைனில் அழகு சாதனப் பொருட்களை ஆர்டர் செய்துவருகிறார்கள். ஒப்பீட்டளவில் விலையும் உள்ளூரை விட மிக குறைவாகவே இருக்கிறது.

பெருந்தொற்று காலமான மூன்று ஆண்டுகளில் ஆன்லைன் நிறுவனங்கள் மக்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டன. பணத்தை போன் வழியாக கட்டுவது தொடங்கி பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது வரை நிறைய மாறிவிட்டன.  போன் என ஒன்று இருந்தால் அதில் கூகுள் பே, பேடிஎம் இருக்கவேண்டுமென கட்டாயம் உருவாகிவிட்டது. க்யூஆர் கோடில் வேகமாக பணத்தைக் கட்டிவிட்டு மக்கள் வேகமாக கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சமாச்சாரம் சீனாவில் வீ சாட் ஆப்பிலேயே இணைந்திருக்கிறது. தொழிலதிபர்களுக்கு மகிழ்ச்சி தரும் வளர்ச்சி, தொழிலாளர்களுக்கு நலன் தருவதாக இல்லை. சேவை தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தரப்படாமல் நிறுவனங்கள் கசக்கி பிழியத் தொடங்கியுள்ளன. 23 மில்லியன் சேவை தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தரப்படுவது இல்லை. மேலும், மதவாதத்தை மத்திய அரசு மறைமுகமாக / நேரடியாக ஆதரிப்பதால் சேவை தொழிலாளர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

 பிளிங்கிட் என்ற ஆப்பில் பணியாற்றும் தொழிலாளர்கள் வாரம் ஏழு நாட்களும் இடைவேளை இன்றி உழைக்க கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு டெலிவரிக்கான  தொகை 15 ரூபாயாக குறைக்கப்பட்டுவிட்டது. இதற்கு எதிராக கடந்த ஏப்ரலில் போராட்டம் நடத்தினார்கள். சேவை தொழிலாளர் பற்றி யாரேனும் புகார் தெரிவித்தால் தண்டனையாக உடனே சம்பளத்தில் வெட்டு விழுகிறது. இதுபற்றி காவல்துறையில் புகார் செய்பவர்களை பிளிங்கிட் நிறுவனம் மிரட்டி வருகிறது. இந்த ஆப் ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். பெரும்பாலான ஆப்கள், பணியாளர்களை மிக மோசமாகவே நடத்துகிறார்கள்.

இந்த முறையில் இளைஞர்கள், பத்து மணிநேரம் வேலை செய்து 300 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதில் இருநூறு ரூபாய் பெட்ரோலுக்கே சரியாக போய்விடுகிறது. அவருக்கு என்ன மிஞ்சும்.  உழைப்பு மட்டும்தான். ஏறத்தாழ இலவசமாக உழைப்பைக் கொடுத்து நிறுவனத்தை முன்னேற்றுகிறார்.

எதற்கு இளைஞர்கள் இந்த டெலிவரி வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வேலையின்மை காரணத்தால்தான். கிடைக்கும் வேலையை செய்தேனும் கொஞ்சம் காசு சம்பாதிக்க முடியுமா என போக்குவரத்து சிக்னலைக் கூட கவனிக்காமல் பத்து நிமிட டெலிவரிக்காக பறக்கிறார்கள். ஆனால் இறுதியாக மிஞ்சுவது சில குவளைக்கான தேநீர் காசு மட்டும்தான். இதில் சிறுபான்மையினராக இருந்தால் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என தீண்டாமை பிரச்னைகளும் உள்ளன. அரசியல் கட்சிகள் மூலம் மத வெறுப்பும், இனவாதமும் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதே முக்கியமான காரணம்.

கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு இணையத்தில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவது என்பதில் உள்ள நுட்பம் இன்னும் பிடிபடவில்லை. அவர்களும் விரைவில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

ஹன்னா எல்லிஸ் பீட்டர்ஸன்

ஆகாஸ் ஹாசன்

கார்டியன் வீக்லி கட்டுரையைத் தழுவியது.

pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்