ஹவாலா குற்றவாளியை திக்கு முக்காடச் செய்யும் அப்பாவி கணக்காளன்! பால தந்தானா - தெலுங்கு

 






பால தந்தானா - தெலுங்கு


பால தந்தனா

தெலுங்கு

ஶ்ரீவிஷ்ணு, கேத்தரின் தெரசா

தமிழில் போடு தந்தானா

தமிழ்ப்படம் யூட்யூப் சேனல்


‘’கெட்டது செய்றவங்களை கேட்வி கேட்கறதில்ல. ஆனா, நல்லது பண்றவங்கள கேள்வி கேட்கிறோம். இதுல என்ன நியாயம் இருக்கு. அதனால, சந்து மும்பைல என்ன பண்ணிட்டிருந்தான்னு நா கேட்கல’’ என படத்தின் இறுதியில் சசிரேகா மனதுக்குள் நினைத்தபடி சந்துவின் பின்னாலே நடந்த்து  வெளியே வருகிறார். உண்மையில் இது சுவாரசியமான இறுதிக்காட்சி. இதை வைத்து ஸ்பின்ஆஃப் படம் ஒன்றை எடுக்காம். சந்து மும்பையில் என்ன செய்துகொண்டிருந்தார் என … அதுவும் சுவாரசியமாகவே இருக்கும்.

தெலுங்கில பால தந்தானா, தமிழில் போடு தந்தானாவாகியிருக்கிறது.

ஸ்லோபர்னர் படம். மெதுவாகத்தான் கதையில் என்ன நடந்திருக்கிறது என தெரிந்துகொள்கிறோம். அதுவரை, வெப்சைட் செய்தியாளரான சசிரேகா போலவேதான் நாமும் இருக்கிறோம்.

பிரபாநியூஸ்.காம் என வெப்சைட் ஒன்றில் செய்தியாளராக சசிரேகா வேலை செய்கிறார். இவருக்கு செய்தி என்றால், மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறார். அப்படி பாடுபட்டு எழுதும் செய்திகளால் நிறைய பிரச்னைகள, மிரட்டல்கள் வருகின்றன. நிஜத்தில் என்றால் கௌரி லங்கேஷ் போல சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார். ஆனால் படத்தில் சசிரேகா நாயகி என்பதால் கடைசிவரைக்கும் உயிரோடு இருக்கிறார். நாயகனால காதலிக்கப்படுகிறார். அவரும் அவரை காதலிக்கிறார்.  

நகரில் உள்ள புகழ்பெற்ற ‘தசாமையம்’ என்ற ஆதரவற்றோர் காப்பகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. இதை செய்தியாக்கி போட சசிரேகா முயல்கிறார். ஆனால், அங்கு வேலை செய்யும் சந்து என்ற கணக்காளர், ‘’அப்படி போடாதீர்கள். 50 ஆயிரம் காசு தருகிறேன்’’ என நைச்சியமாக பேசுகிறார். பிறகும் அவரை தொடர்ந்து வந்து  ‘’ஸ்கூட்டி கொடுக்கிறேன்’’ என்கிறார். பிறகும். ஸ்டாக்கிங் செய்து போனில் பேசுவதை ஒட்டுக்கேட்டு காதலிக்க முயல்கிறார். உண்மையில் வேடிக்கை என்னவென்றால், இந்த முயற்சி தோற்றபிறகு அனாதைப் பிள்ளைகளின் வாழ்க்கை என்று பேசுகிறார். உண்மையிலேய அசல் பத்திரிகையாளராக சசிரேகா இருந்திருந்தால் சந்து செய்யும் அங்கதத்தை அவர் உணர்ந்திருப்பார்.

படத்தில் இறுதியாகத்தான் அவர் யோசிக்கிறார்.  

 சசிரேகாவுக்கு வாழ்க்கையில் சிக்கல் இல்லாமல் இல்லை. அவருடைய அக்கா மகளை நீதிமன்றம் மூலம் கஸ்டடியில் எடுக்க மாமாவுக்கு பத்து லட்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இது நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ளும் ஏற்பாடு. இப்படி தேவை இருந்தாலும் கூட சசிரேகா, நேர்மையாக இருக்கிறார். சந்து கொடுக்கும் காசை வாங்க மறுக்கிறார்.

சந்துவின் அப்பாவித்தனம் அவளுக்கு பிடித்திருக்கிறது. ஆண் என நெஞ்சை நிமிர்த்தாமல் அனைத்து விஷயங்களிலும் அவளை முன்னால் விட்டுவிடுகிறான். அடிக்க உதைக்க வந்தால் அவளின் முதுகுக்கு பின்னால் பதுங்கிக்கொள்கிறான். பெண்கள் காதல் கொள்ள இது போதாதா?

இந்த நேரத்தில் ஹவாலா மோசடி செய்யும் ஆளான ஆனந்த் கபாலி என்பவரால் பிரச்னை உருவாகிறது. அவரின் ஆட்கள் மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள். இதைப்பற்றிய செய்தியை எழுத சசி, தானே புலனாய்வு செய்கிறாள். இதில் சந்துவும் உதவுகிறான். இந்த விவகாரம் பெரிதாகும்போது, சசிரேகாவின் வீட்டுக்குப் வரும் மர்ம மனிதன்,  ஹவாலா மோசடியாளன் ஆனந்திடமிருந்து இரண்டாயிரம் கோடி காணாமல் போய்விட்டது என துப்பு கொடுத்துவிட்டு அவளை துப்பாக்கியை காட்டி எச்சரித்துவிட்டு செல்கிறான். அவள், உடனே பின்விளைவு பற்றி யோசிக்காமல் காணாமல் போன ஆனந்தின் கள்ளப்பணம் பற்றிய கட்டுரையை எழுதுகிறாள். ஆனந்திற்கு நெருக்கடி முற்றுகிறது. சில நாட்கள் கழித்து,  இரண்டு ஜீப்களில்  வரும் ரவுடிகள் அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் சந்துவை அடித்து இழுத்து செல்கிறார்கள்.

உண்மையில் சந்துவை எதற்கு அடிக்கிறார்கள், தூக்கிசென்றார்கள் என்பதை சசிரேகாவோடு சேர்ந்து நாமும் அறிகிறோம். சந்துவைப் பற்றிய ட்விஸ்ட், இறுதியில் வரும் திகைப்பான விஷயங்கள், இன்னும் கொஞ்சம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கலாம்.  படத்தில் சொல்லப்படும் விஷயங்கள் திடீரென வி ஃபார் வென்டெட்டா படத்தை நினைவுபடுத்தின.

தமிழில் டப்பிங் செய்தவர்கள், படத்தின் தீவிரத்தை புரிந்து வேலை செய்திருக்கிறார்கள் என்பது ஆறுதலாக இருக்கிறது.

இயக்குநர் படத்தில் கூறியுள்ள விஷயத்திற்கு பட்ஜெட் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இருந்தாலும் பட்ஜெட்டில் எடுத்தாலும் ஓரளவுக்கு நிறைவாகவே எடுத்திருக்கிறார். காட்சி ரீதியான அனுபவம் குறைந்து போய்விட்டது. ஶ்ரீவிஷ்ணு, முதலில் பதுங்கிப் பிறகு பாயும் பாத்திரம். பீட்டர்ஹெய்ன் உபயத்தில் சண்டைக்காட்சியிலும் தேறிவிடுகிறார். படத்தில் காதல் இருக்கிறதா என்றால் ஆம் இல்லை என இரண்டு பதில்களைக் கூறலாம். படத்திற்கு மணிசர்மான பெரும்பாலானா நேரங்களில் ஓஎஸ்டி போட்டே காப்பாற்றுகிறார். இவருடைய இசை இல்லையெனில் படம் பார்ப்பவர்கள் நெளிய ஆரம்பித்திருப்பார்கள்.

படத்தில் சசிரேகாவின் மாமா, குழந்தையைக் கொண்டுவந்து ஒப்படைக்க சொல்லும் காரணம் ஒட்டவேயில்லை. வெறும் ஹீரோ பில்டப்பாகவே மிஞ்சுகிறது. 

படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கான சுவாரசியங்கள் ஏதும் இல்லை. ஒடிடி, டெலிகிராமில் டவுன்லோடு செய்து பார்ப்பவர்கள் பார்க்கலாம்.  வணிக காரணங்களுக்காக குத்துப்பாட்டு ஒன்று, சசிரேகா (கேத்தரின் தெரசா) ஸ்லீவ்லெஸ்ஸில் வந்து பாடும் காதல் பாடம் ஒன்றுண்டு. வழக்கமான தெலுங்குப்படங்களுக்கான எந்த விஷயமும் படத்தில் இல்லை. புதுமையான கதை என்பதற்காக படத்தைப் பார்க்கலாம். இயக்குநர் படத்தை சற்று நிதானமாக அணுகிவிட்டார். எனவே, படம் நிதானமாக  நத்தை போல நகர்கிறது. இயக்குநர் இப்படித்தான் இருக்கவேண்டுமென முடிவு செய்து  எடுத்திருக்கிறார்.  எனவே பிழை சொல்ல ஏதுமில்லை. படத்தில் தொடக்கத்தில் உள்ள சுவாரசியம் இறுதிவரையில் இல்லாமல் போகிறது.

கோமாளிமேடை டீம் 

-------------

Initial release: 6 May 2022
Music by: Mani Sharma
Production company: Vaaraahi Chalana Chitram

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்