கிராஃபிக் டிசைனரைக் காதலிக்கும் பூனை இளைஞன்! மியாவ் தி சீக்ரெட் பாய் - கே டிராமா

 












மியாவ், தி சீக்ரெட் பாய்

கே டிராமா

ராக்குட்டன் விக்கி ஆப்

 

இந்த கொரிய தொடர், எப்போதும் கொரிய தொடர்களில் உள்ள வன்முறை, பள்ளி சித்திரவதை,  பெற்றோர் செய்யும் பாலியல் வன்முறை, அடி உதை என ஏதும் இல்லாதது. சற்று நீளமாக இருந்தாலும் நிதானமாக பார்த்தால் மெல்ல அதன் தன்மைக்கு பழகிவிடுவீர்கள்.

நகரத்தில் உள்ள மனிதர்களால் தாங்க முடியாத தனிமைக்கு ஆதரவாக செல்லப்பிராணிகள் இருக்கிறார்கள். உண்மையில் மனிதர்களை விட செல்லப்பிராணிகளை காதலிக்கும் தனிநபர்களே அதிகமாகி வருகிறார்கள். இதைபற்றிய கற்பனைக் கதைதான் மியாவ், எ சீக்ரெட் பாய்.

ஒருவர் தன்னோடு சந்தோஷத்திலும் துக்கத்திலும் இருக்கும்போது கூடவே ஆதரவாக இருக்கும் பூனை ஒன்றை காதலிக்க தொட்ங்கினால் எப்படியிருக்கும்? அந்த பூனை, வளர்ப்பவரின் உடல் மணம் கொண்ட ஏதாவது பொருள் உடலில் பட்டாலே மனித உருவம் கொள்கிறது. தன்னை வளர்ப்பவரை அதீதமாக காதலிக்கத் தொடங்குகிறது. பாதுகாக்கத் தொடங்குகிறது.

தொடரில் வரும் கிராஃபிக் டிசைனர் பெண்ணான கிம் சோல் ஆ, தனியாக அறையில் வாழ்ந்து வருகிறாள். அதே நகரில் அவளது கவிஞரான அப்பா, தனியாக உட்கார்ந்து நூல்களை படித்தபடி காலத்தை கழிக்கிறார். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, மகளை தனி அறை பார்த்து போகச்சொல்லிவிடுகிறார். அவரும் தனது கவிதையை ரசித்துப் படித்த பெண்ணை மணம் செய்துகொண்டு கிராமத்திற்கு சென்று விடுகிறார்.

கிம் சோல் ஆவிற்கு, அப்பாவை பிரிவது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் வயதிற்கு ஒரு துணை தேவை என்பதை மெல்ல புரிந்துகொள்கிறாள். அப்பாவிற்கு கவிதை பிடிக்கும். மகளுக்கு ஓவியங்கள் வரைவது பிடிக்கும். இருவரும் மெல்ல தங்களுக்கு பிடித்த வேலைகளை வேலை நேரம் போகச் செய்யத் தொடங்குகிறார்கள். கிம் சோல் ஆவிற்கு பள்ளி காலத்தில் இருந்தே ஜே சன் என்ற மாணவன் மீது காதல் இருக்கிறது. அவன் இப்போது தோலில் பல்வேறு பொருட்கள் செய்யக் கற்று, அதோடு கஃபே ஒன்றையும் திறந்திருக்கிறான். அவன் வீட்டிற்கு எதிரில்தான் கிம் சோல் ஆ குடியேறுகிறாள். கிம் சோல் ஆ தனது காதலை வெளிப்படையாக ஜே சன்னுக்கு கூறினாலும், அகவயமானவனான  அவன் அக்காதலை ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இதனால் கிம் சோல் ஆவிற்கு என்ன செய்வதென தெரியாமல் காத்திருக்கிறாள்.

இந்த நேரத்தில் அவள் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரான புதிய சித்தியின் மகன் போக் பூங் என்பவர் வருவதாக தகவல் கிடைக்கிறது. அதற்கு முன்பே கிம் சோல் ஆ, ஜே சன்னிடமிருந்து செர்கெய் என்ற பூனையை பெற்று வளர்த்து வருகிறாள். அதை தனது காதலின் நினைவாக ஹோங் ஜோ என பெயரிட்டு வளர்க்கிறாள். அந்த பூனை, கிம் சோல் ஆவின் ஸ்பரிசம் பட்டு இளைஞனாக மாறுகிறது. அவனை கிம் சோல் ஆ, வீட்டின் உரிமையாளரின் பையன் போக் பூங் என நினைத்துக்கொள்கிறாள்.

ஹோங் ஜோவிற்கு தனது எஜமானர் கிம் சோல் ஆ மீது காதல் பூக்கிறது. ஏற்கெனவே இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் அது கிம் சோல் ஆவிற்கு நினைவில்லை. காரணம், பூனையின் வேகமான வளர்ச்சி. கிம் சோல் ஆவி வெளிவயமான பெண். அதேசமயம் சந்தோஷமாக தான் விரும்புகிறவனை காதலிக்கவேண்டும். அவனோடு நேரத்தை செலவிடவேண்டும் என நினைப்பவள். ஆனால் ஜே சன், அவளின் காதலுக்கு ஆம், இல்லை என எந்த பதிலும் சொல்வதில்லை. இந்த நிலையில் ஹோங் ஜோவின் அன்பிற்கு மெல்ல அடிமையாகிறாள். அந்த காதல் மனநிலையில் தனது பெயர் போக் பூங் இல்லை என ஹோங் ஜோ சொன்னாலும் அதை அவள் கவனிப்பதில்லை.

கிம் சோல் ஆவிற்கு அலுவலக நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் பெற்றோர் உணவகம் வைத்திருக்கிறார்கள். அவனுக்கு கிம் சோல் ஆ, காதலில் வருத்தமுற்று இருப்பது பிடிப்பதில்லை. எனவே, அவன் ஜே சன்னிடம் நீ அவளை காதலிக்கவில்லை என்றால் வேறு இளைஞர்களை தேடிப் பிடிப்பேன். அவளை தொந்தரவு செய்யாதே என்கிறான். ஜே சன்னுக்கும் கிம் சோல் ஆவை எப்படி கையாள்வது, காதலிப்பதா, உறவை கைவிட்டுவிடுவதா என தெரிவதில்லை. இதற்கும் அவனிடம் கடந்தகால கதைகள் இருக்கின்றன. இந்த நிலையில் ஹோங் ஜோ மெல்ல தன்னை மனிதன்போல மாற்றிக்கொண்டு கிம் சோல் ஆவின் தனிமையைப் போக்குகிறான். அவளோடு பேசுகிறான், பழகுகிறான். இது கிம் சோல் ஆவிற்கு கிளர்ச்சியாக இருக்கிறது. இதைப் பார்த்து ஜே சன் பொறாமை  கொள்கிறான். அவனுக்கும் அவன் கொடுத்த பூனைதான் இளைஞனாக மாறியிருக்கிறது என்று தெரியவில்லை.  பகுதிநேரமாக மனிதனாக இருக்கும் ஹோங் ஜோவை கண்காணிக்க தொடங்குகிறான். அவன் மனிதனல்ல பூனை என்பதை கண்டுபிடிக்கிறான். அதற்கு பிறகு கிம் சோல் ஆவிடம் உண்மையை கூறினானா, ஹோங் ஜோ இதை எப்படி எதிர்கொண்டான், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான வேறுபாட்டை அவன் உணர்ந்தானா, காதல் காலியாகாமல் இருந்ததா என்பதை காட்சிப்பூர்வமாக அற்புதமாக கூறுகிறார்கள்.

நடிகர்கள் எல் (ஹோங் ஜோ), ஷின் யென் யுன்(கிம் சோல் ஆ) ஆகியோரது நடிப்பு அற்புதம். ஷின் யென் யுன்னுக்கு தொடரில் சவால்கள் அதிகம். பூனையப் பார்த்துத்தான் அவர் பெரும்பாலும் தனது காட்சிகளை நடிக்கவேண்டியதிருக்கிறது. அதையும் பிரமாதப்படுத்துகிறார்.

தனது தனிமையைப் போக்கி நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருக்க அவள் வலிந்து ஜே சன்னிடம் பழக முயல்வாள். ஆனால் பூனையாக இருந்தாலும் ஹோங் ஜோ தைரியமாக அவளது கையைப் பிடித்தபடி அவளுக்கு நான் இருக்கிறேன்  என கூறும் காட்சியின், ஷின்னின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அடுத்து, அவள் தனது காதலை ஜே சன் ஏன் மறுக்கிறான் என்பதை கேட்டு அழும்  காட்சி. அவன் மறுத்த காரணத்தை அறிந்து, உண்மையை என்னிடம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டிருக்கிலாமில்ல என கோபத்தில் பேசுவது, அப்பாவுடன் கிராமத்தில் அமர்ந்து தனது காதல் பற்றி, வெப்டூன் பற்றி பேசுவது என நிறைய காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.

ஒவ்வொரு எபிசோடும் பூனை பற்றிய பொன்மொழிகளை, பிறர் கூறியதை சொல்லி தொடங்குகிறது. தலைப்பு வரும் டைட்டில் கார்ட் அனிமேஷனே அழகாக இருக்கிறது. அதிலேயே தொடரின் மையப்பொருளை கூறிவிடுகிறார்கள்.

இந்த தொடரைப் பார்க்கும்போது நகர வாழ்க்கையில் உள்ள மனிதர்களின் சந்தோஷம், மகிழ்ச்சி, தனிமை, துயரம் ஆகியவை மனதில் அலையோடிக்கொண்டிருக்கிறது. சுயலாபங்களைக் கொண்ட மனிதர்களை விட அன்பு என்ற ஒரே விஷயத்திற்காக உள்ள செல்லப்பிராணிகள் பற்றிய கவனத்தை தொடர் அதிகரிக்கிறது.  அன்புக்காக ஏங்குவது, அதை பெற மனிதர்கள் செய்யும் பல்வேறு கோமாளித்தனங்கள், மதிப்புமிக்க ஒன்றை இழந்தபிறகு அதை திரும்ப பெற மனித மனம் செய்யம் பிரயத்தனங்கள், அகவயமானர்களின உலகம், அவர்களின் பிரச்னைகள், அன்பை வெளிக்காட்ட  படும் பாடு என நிறைய விஷயங்களை தொடர் மனதுக்கு நெருக்கமாக பேசுகிறது.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்