ஞாபகசக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகள் சில!
மனித கால்குலேட்டர்களுக்கு
இன்று பெரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை. அந்தளவுக்கு சூப்பர் கணினிகள் வளர்ந்துவிட்டன.
கூகுளின் தேடலுக்கு பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு உதவுகிற காலம் இது. இந்த காலத்திலும்
சில விஷயங்களை மூளையில் நினைவு வைத்துக்கொண்டு தேவையானபோது கூறுகிற மனிதர்கள் ஆச்சரியம்
தருவதோடு சற்று பொறாமையையும் ஏற்படுத்துகிறார்கள்.
உணவகங்களில்
மெனு கார்டை நாம் பார்த்துக்கொண்டிருக்க சிறப்பு உணவுகளை கூறிவிட்டு, அதன் தயாரிப்பு
முறைகளை படபடவென ஒப்பிப்பவர்களை பார்த்தால், உணவை விட அவர் எப்படி இத்தனை விஷயங்களை
நினைவில் கொள்கிறார் என்று தோன்றும். ஏனெனில் பலருக்கும் நேற்று காலையில் என்ன சாப்பிட்டோம்
என்பதே அண்டன் பிரகாஷ் கட்டுரையை புரிந்துகொள்வது போல கடினமாக, மீள நினைத்துப் பார்க்க
முடியாததாக இருக்கிறது.
தேவையானபோது
குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் இருந்து மீள எடுத்து பேசி கைதட்டல் வாங்குவது என்பது
பெரிய சாமர்த்தியம். சற்று பொறாமை இருந்தாலும் கைதட்டிவிடுவதுதான் பெரிய மனுஷன் செய்யும்
வேலை.
மூளையில்
உள்ள ஹிப்போகாம்பஸ் பகுதிதான் நினைவுகளை உருவாக்குகிறது. அதுமட்டும்தானா என்றால் அமிக்டால
என்ற பகுதி மற்றும் சில வேறு உறுப்புகளும் இப்பணியில் உதவுகின்றன. பாடங்களை மனப்பாடம்
செய்து தேர்வு எழுத மனவளக்கலை, வாழும் கலை பயிற்சி என அலைந்த ஆட்கள்தான அதிகம். இதுபோல
மாயமந்திர, தாந்த்ரீக வழிகள் அல்லாமல் இயற்கையாக சில பழக்கங்களைப் பின்பற்றினால் சில
மாற்றங்களை உருவாக்க முடியும்.
உடற்பயிற்சி
கட்டழகு கைகள்
எழுதிய மலையமான் போல கடுமையாக உடற்பயிற்சி செய்யவேண்டுமென்பதில்லை. உங்கள் உடல் எடையைப்
பயன்படுத்தி செய்யும் ஏராளமான பயிற்சிகள் உள்ளன. அதை செய்தாலும் மூளைக்கு நல்லதுதான்.
முதலில் உடலில் ரத்த ஓட்டம் வேகமாகும். இதன் வழியாக மூளையில் உள்ள செல்கள் புத்துணர்வு
பெறும். இதன் வழியாக நினைவுகள் மேம்படும்.
ஏரோபிக் பயிற்சிகள்,
பால்ரூம் டான்ஸ் ஆகியவற்றை மேரிலேண்ட், பிரிட்டிஷ்
கொலம்பியா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவப்பள்ளி, இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
பரிந்துரைக்கிறார்கள். ஓடுவது, நடப்பது என்பதை முடிவு செய்து உடனே தொடங்குங்கள். காலுக்கு
பூமா,நைக் எது சிறப்பு,ஷார்ட்ஸ், டீ ஷர்ட் என்ன பிராண்ட் வாங்கலாம் என யோசித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.
உணவு
மூளைக்கு
குளுக்கோஸ் தேவை. அது பார்லே ஜி, பிரிட்டானியா, நெஸ்லேவின் சாக்லெட்டுகளில் கிடைக்கும்
என பலர் தேடி வருகிறார்கள். அது தவறு. காய்கறி, மீன் ஆகியவற்றில் உள்ள இயல்பான சர்க்கரையே
மூளைக்கு குளுக்கோஸ் ஆக மாறுகிறது. நேரடியான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் உடலுக்கு
ஆபத்து. மூளையின் செயல்பாட்டை அவை தடுக்கின்றன.
முழுமையான
தானியங்கள், காய்கறி, பருப்பு, பீன்ஸ், பெர்ரி, கோழி, மீன் ஆகியவை கொண்ட மைண்ட் எனும்
டயட் முறை உள்ளது. அதைப் பின்பற்றினால் போதுமானது. இந்த முறையை 2015ஆம் ஆண்டு ரஷ் மருத்துவ மையம்,
ஹார்வர்ட் பொது மருத்துவ பள்ளி ஆகியோர் இணைந்து ஆய்வுசெய்து உருவாக்கினர்.
வறுத்த, பொரித்த,
இனிப்பு நிறைந்த உணவுகள், சிவப்பு இறைச்சி ஆகியவற்றை தவிர்த்தால் அதிக காலம் வாழ்ந்துவிட
முடியாது. ஆனால் நோய்களின் சித்திரவதை இல்லாமல் இருக்கலாம். இந்தவகையில் முதுமையில்
வரும் அல்சீமர் கூட வருவதற்கான வாய்ப்பு குறையுமாம்.
தூக்கம்
எப்படி பூனை
நாள் முழுக்க தூங்கி ஓய்வெடுக்கிறதோ அதேபோல மனிதர்கள் இரவில் தூங்கவேண்டும். அப்போதுதான்
மூளை நாளெல்லாம் பதிவான தகவல்களை ஓடவிட்டு தேவையான தகவல்களை சேமித்து பிறவற்றை அழித்து
நினைவகத்தை சேமிக்க முடியும். தூங்காமல் வேல செய்பவர்களுக்கு உடல், மனம் என இரண்டுமே
கெட்டுப்போய்விடும். ஏழு அல்லது எட்டு மணிநேரம் தூங்குவது முக்கியம். குறைந்த நேர தூக்கமே
போதும் என சிலர் யூட்யூபில் பீதி கிளப்புவார்கள். அந்த வீடியோ பார்த்தால் தூக்கமும்
வராது உங்கள் மதிப்புமிக்க போன் டேட்டாவும் வீணாகும்.
சவால்
மூளைக்கு
சவால் விடும் சுடோகு, குறுக்கெழுத்து , வினாடி வினா என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து
விளையாடலாம். பலர் ஆபீசில் வேலையை செய்யாமல் பெரும்பகுதி நேரம் சீட்டுக்கட்டு விளையாடுவார்கள்.
அதையே செஸ், சுடோகு என மாற்றிக்கொள்ளலாம். குறைந்தபட்சம் அலுவலகத்திற்கு நன்மை கிடைக்காதபோதும்.,
விளையாடுபவர்களுக்கு வேறு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். அதாவது, மூளை சுறுசுறுப்பாக
இயங்கும் என கூற வந்தேன்.
தைராய்டு
ஹார்மோனில் பிரச்னை ஏற்பட்டால் மூளையில் சுறுசுறுப்பை குச்சியை வைத்து குத்தினாலும்
உருவாக்க முடியாது. ஒன்றை சட்டென நினைவுபடுத்த முடியாது. கவனமாக ஒரு வேலையை செய்ய முடியாது.
இதற்கு தைராய்டு பிரச்னை மூலகாரணம்.
நீரை அருந்தாதவர்களுக்கு
மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இவர்களுக்கும் ஒரு விஷயத்தை சட்டென மீள எடுத்துப்
பார்த்து பேசுவது கடினமாக இருக்கும். அப்படியே உறைந்து நின்றுவிடுவார்கள். இந்த நிலையில்
விட்டமின் பி12 மாத்திரைகள் சாப்பிடலாம். இதன்மூலம் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்கும்,
ரத்த செல்கள் கூடும்.
எந்த திறமையும்
இல்லாமல் அதிகாரம் செய்தே வாழ்க்கையில் வென்றுவிடலாம் என நினைக்கும்
நச்சு மனிதர்கள் இருந்தால், அவர்களின் இருப்பே மனப்பதற்றத்தை ஏற்படுத்தும். பேச்சு
அலர்ஜியை உண்டாக்கும். வேறு வேலையைத் தேடிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள். அப்படி இல்லையெனில் மூளையில் செரடோனின் சுரக்கும்
அளவு குறைந்துவிடும். இதனால் உங்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாது.
இருமல் மருந்து,
ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு சாப்பிடும் மருந்துகள்
மூளையைப் பாதிக்கும். எனவே, இந்த மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களை கவனமாக படித்து
மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.
குறிப்பாக இருமல் மருந்தில் உள்ள டைபென்ஹைட்ராமைன்
என்ற வேதிப்பொருள் ஆபத்தானது. எந்த மருந்துக்கும் நேரடி விளைவு,. பக்கவிளைவு என இரண்டு
உண்டு. நேரடி விளைவு ஏற்கெனவே உள்ள நோயைத் தீர்ப்பது. பக்க விளைவு அடுத்த நோயை உருவாக்குவது.
இப்படித்தான் ஆங்கில மருத்துவமுறை வெற்றிகரமாக செயல்படுகிறது. எது ஆபத்தான நோயோ அதை
தீர்த்துக்கொண்டு, மருந்துகளை நிறுத்திவிட்டால் பக்கவிளைவுகளின் பாதிப்பு மெல்ல குறையும்.
மன அழுத்தம்
மோசமான மனிதர்களை
வாழ்க்கையில் கண்டிப்பாக சந்திப்போம். மனநல குறைபாட்டிக்கு சிகிச்சை எடுக்காமல் வந்து
அடுத்தவர்களையும் நோயாளியாக மாற்ற முயல்வார்கள். இதுபோல மனிதர்களை அடுத்து முகரையை
பெயர்க்கலாம் என நினைத்தால் அது சட்டப்படி குற்றம். இதனால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றத்தை
மனதுக்குள் அடக்கி வைக்ககூடாது. அதற்காக நாய், பூனை குறைந்தபட்சம் தொட்டிச்செடி வாங்கியாவது
வைத்து அதனிடம் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் இல்லை அப்போதைக்கு
உங்களின் விரக்தி, மன அழுத்தம் குறையும். மற்றபடி செய்து வரும் அந்த வேலையை மாற்றிக்கொள்வது
உடலையும் மனதையும் காக்கும் ஒரே வழி.
நினைவுகள்
மீட்பு
ஒருவரை நிகழ்ச்சியில்
சந்திக்கிறீர்கள். அவரது பெயரைக் கூறி அறிமுகம் செய்துகொள்கிறார். அன்றைய நாளின் இறுதியில்
அவரது பெயரை நீங்கள் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொள்வது அவசியம். முக்கியமானவர் என்றால்
பின்னாளில், அவரை அடே இவனே என கூப்பிடாமல், பெயரைக் கூறி அழைத்தால் மரியாதையாக இருக்கும்
அல்லவா? இதுபோலத்தான் புகைப்படங்களை எடுத்துக்கொள்வதும் கூட. அதைப்பார்த்தால் அந்த
புகைப்படம் எடுத்த சூழ்நிலை, கூட இருந்தவர்கள் என பல நினைவுகள் அலையடிக்கும். இதெல்லாமே
நினைவுகளுக்கான பயிற்சிகள்.
ரீடர்ஸ் டைஜெஸ்ட்
இதழில் பெத் வெய்ன்ஹவுஸ் எழுதிய கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக