கடற்கரை நகரத்தில் காதலனின் அக்காவைக்கொன்ற குற்றவாளியைக் கண்டறியும் இளம்பெண்! சம்மர் ஸ்ட்ரைக்

 














சம்மர் ஸ்ட்ரைக் 2022

கே டிராமா

பனிரெண்டு எபிசோடுகள்

ராக்குட்டன் விக்கி ஆப்

 

 

த்ரோ தி டார்க்னெஸ் என்ற கிரைம் தொடர்பான கே டிராமா பனிரெண்டு எபிசோடுகளைக் கொண்டதுதான். கொரிய டிவி தொடர்கள், இப்போது பதினாறு எபிசோடுகளில் இருந்து பனிரெண்டாக குறையத் தொடங்கியுள்ளன. இது கொஞ்சம் நல்லவிஷயம்தான். சம்மர் ஸ்ட்ரைக்கும் அந்தவகையில் ஆறுதலைத் தருகிறது.

சக மனிதர்களால் மோசடிக்கு உள்ளான இருவர், கடற்கரை குறு நகரம் ஒன்றில் சந்தித்து காதல்வயப்படுவதுதான் முக்கியமான மையப்பொருள். ஆனால், அதைமட்டுமே சுவாரசியமாக காட்டுவது கடினம். எனவே, அதில் கொலைக்குற்ற வழக்குகளை சேர்த்திருக்கிறார்கள்.

மோசமில்லை. இந்த தொடரைப் பார்க்க நன்றாகவே இருக்கிறது. வெறும் காதல், பொறாமை என்று இல்லாமல் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள், மனிதர்களின் பொறுத்துக்கொள்ள முடியாத சுயநலம், சொத்துக்களை பெற தாழ்ந்துபோகும் மனித குணம், அத்தனையையும் தாண்டி நிற்கும் அன்பு, மனிதநேயம் என தொடர் வசீகரமாக உள்ளது. பல்வேறு பாதிப்புகளை அடைந்த துன்பங்களை அனுபவித்த மனங்கள் ஒன்றாக சேர்ந்து இன்பம் காண்கின்றன. ஒருவருக்கு நேரும் பிரச்னைகள் பிறர் அந்நியமாக கருதாமல், நமக்கென்ன என்று நினைக்காமல் உதவிசெய்து நட்பாகிறார்கள். பிரிக்கமுடியாத உறவுக்குள் புகுகிறார்கள். இதை இயக்குநர் காட்சிரீதியாக நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

சியோலில் புத்தக பதிப்பு நிறுவனத்தில் வேலை செய்பவள், இயோ ரம். அவளுக்கு உணவகத்தில் வேலை செய்துவரும் அம்மா, திருமணமான சுயநலமான அண்ணன் ஒருவர் உண்டு. அதுதான் அவளின் குடும்பம். ஆறு ஆண்டுகளாக டேட்டிங் செய்யும் காதலன் ஒருவன் இருக்கிறான்.

அலுவலகத்தில் இயோ ரம், அடிமை போல நடத்தப்படுகிறாள். அலுவலக வேலையைக் கடந்து மேலதிகாரியின் காபி கப் கழுவது, டீ, காபி வாங்கி வருவது என நடத்தப்படுகிறாள். அத்தனையும் அவள் பொறுக்கிறாள். அவள் அம்மாவுடன் வசிக்க வீடு ஒன்றை வாடகைக்கு பிடிப்பதுதான் லட்சியமாக உள்ளது. இதற்கிடையில் அவளது அம்மா, திடீரென இறந்துபோகிறாள். காதலனும் பிரிந்து போகிறான். அந்த துக்கம் அவளை வதைக்கிறது. ஆனால், வேலைக்கு போகும் நெருக்கடி அவளுக்கு இருக்கிறது. ஆனால், ஒருநாள் வசந்தம் தொடங்குவதை ரயிலில் இறங்கியபோது பார்க்கிறாள்.  மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. அந்த அழகில் அவள் தன்னை மறக்கிறாள்.

இந்த அழகை பார்க்காமல் நாம் இத்தனை நாட்கள் வேலை வேலை என இருந்துவிட்டோமே என நினைத்துப் பார்த்து வருந்துகிறாள். அடுத்த ரயிலை பிடித்து வீட்டுக்கு திரும்புகிறாள். அப்போது அலுவலகத்திலிருந்து போன் வருகிறது. சைக்கோபாத் டீம் லீடரிடம் நான் வேலையை விட்டுவிலகிக்கொள்கிறேன் என வெளிப்படையாக சொல்லிவிடுகிறாள்.

பிறகு, இருநாட்கள் அமைதியாக உறங்குகிறாள். அதுவரை இல்லாத உற்சாகத்தை மனதில் பெறுகிறாள். பிறகு அலுவலகத்திற்கு சென்று தனது பொருட்களை எடுத்து வருகிறாள். அப்போது, டீம் லீடர் அவளை அவமானப்படுத்தி பேசுகிறான். இயோ ரம், அவன் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதை அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டு, ஆதாரமான செய்திகளை அலுவலக குழுவிற்கு அனுப்பி நெடுநாளையை வன்மத்தை தீர்த்துக்கொள்கிறாள். அதோடு அவளுக்கு செல்வதற்கு வீடு, சொந்தம் என யாருமில்லை.

எனவே, அறையில் உள்ள காலண்டரில் கடற்கரை நகரம் ஒன்றைப் பார்க்கிறாள். அதுதான் ஆங்கோக். எனவே, இருக்கும் காசை எடுத்துக்கொண்டு அங்கே பயணிக்கிறாள்.

இது இயோ ரம்மின் கதை.

அடுத்து ஆன் டே பியோம் என்ற பார்ட் டைம் நூலகரின் கதை. கணித கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்வதில் மிக திறமையான ஆள். ஆனால் அதெல்லாம் எதற்கு என அமைதியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்தபடி ஆங்கோக் நூலகத்தில் பகுதிநேரமாக நூலகராக வேலை பார்த்து வருகிறான். இவரைத்தான் இயோ ரம் முதலில் வந்து சந்தித்து வாடகைக்கு தங்குவதற்கான ஏஜென்சி பற்றி கேட்கிறாள். அந்நிய ஆட்களிடம் பேசாத பியோம்,பிறர் உதவி என்று கேட்டால் செய்யக்கூடியவன். அதை பிறருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளக் கூடிய ஆள். ஒரு பேப்பரில் ஏஜென்சிக்கு செல்லும் வழியை வரைந்து கொடுக்கிறான்.

டே பியோமின் சொந்தக்கார அக்கா ஆங்கோக்கில் நூலகர். எனவே, இருவரும்தான் நூலகத்தில் எப்போதும் இருக்கிறார்கள்.. அங்கு வரும் வேறு இருவர் பள்ளி மாணவி போம், அவளைக் காதலிக்கும் ஹூன் ஆகிய இருவர்தான். வேறு யாரும் அங்கு வருவதில்லை. இயோ ரம் அங்கு உறுப்பினராகி நூல்களை எடுத்து படித்துக்கொண்டே இருக்கிறாள். அது வாழ்விற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.  

பியோமிற்கு ஒரு கடந்தகால வலி இருக்கிறது. அவனது அக்கா, ஆங்கோக்கில் உள்ள அவர்களது பில்லியர்ட்ஸ் கிளப்பில் தலையில் அடிபட்டு இறந்து கிடக்கிறாள். அவளைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. ஆனால் சிறுவனாக இருக்கும் பியோம், கொலைக்கு காரணமாக  தனது அப்பாவைக் கைகாட்டுகிறான். காவல்துறையும் வழக்கு முடித்துவைக்க விசாரிக்காமல்  அவரை கைது செய்கிறது. இந்த துக்கம் தாங்காமல் அவனது அம்மா, சில நாட்களிலேயே இறந்துபோகிறார். இந்த வருத்தம் பியோமை பாதிக்கிறது. எனவே, அவன் பள்ளி செல்வதை விரைவில் நிறுத்திவிட்டு நூலகத்தில் வேலை செய்யத் தொடங்குகிறான்.

 இயோ ரம் வாடகைக்கு தங்கும் இடம், பியோமின் அக்கா இறந்துபோன பில்லியர்ட்ஸ் கிளப்தான். அவளை பியோமிற்கு என்ன காரணத்தாலோ பிடித்துப்போகிறது. அவள், கடலும் கிழவனும் நூலில் உள்ள தன்னம்பிக்கை வாசகத்தை படித்துவிட்டுத்தான் ஆங்கோக்கில் தனது வாழ்வைத் தொடங்குகிறாள். இயோ ரம் படபடவென பேசும் குணம் கொண்டவள். பிறருக்கு இரங்கும் குணம் கொண்டவள். பொருளாதார ரீதியாக  கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவுவதை கைவிடுவவதில்லை.

பியோமின் வாழ்க்கை அதிகாலையில் வாக்கிங் செல்வதில் தொடங்கும். பிறகு நூலக வேலைகள். கணிதம் சார்ந்த திறமை இருந்தாலும் கூட அதைப்பற்றியெல்லாம் அவன் பெரிதாக கவலைப்படுவதில்லை.

இயோ ரம் நூலகத்திற்கு சென்று நூல்களை எடுத்து படிக்கிறாள். பிறகு அறைக்கு வந்து சமைத்து சாப்பிடுகிறாள். அவளுக்கு வாழ்க்கையை வாழ்வதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என தோன்றுகிறது. அந்த கட்டிடத்தை அதிக விலைக்கு விற்க கட்டிட உரிமையாளரின் மகன் முயல்கிறார். ஆனால், இயோ ரம் வாடகைக்கு வந்த காரணத்தால் அவரின் முயற்சி தடைபடுகிறது. இதனால் அவர் அவளை காலி செய்ய வைக்க சில தவறான வழிகளை முயல்கிறார். ஆனால் விரைவிலேயே இயோ ரம்மின் உதவும் குணம் பிடித்துப்போய் நண்பராகிவிடுகிறார்.

இயோ ரம்மின் கட்டிடத்தில் அறையில் அடிக்கடி யாரோ வந்து அவளை மிரட்டும் வாசகங்களை எழுதிவிட்டு செல்கிறார்கள். அது பக்கத்துவிட்டு மனநிலை சரியில்லாத பையனோ என எண்ணும்படி சூழல் இருக்கிறது. அதன் பின்னணியைத் தோண்டி எடுத்து பார்த்தால், பியோமின் அக்கா, பள்ளி மாணவி போமின் பாட்டி எப்படி இறந்துபோனார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. 

இயோ ரம்மின் வாழ்க்கைக்கான இடம்தான் கதையில் அதிகம் உள்ளது. அதைக்கடந்து பள்ளி மாணவி போம், அவளது பள்ளிக்காதலன் ஹூன், அவளது நண்பன் டே ஹோ ஆகியோர் வருகிறார்கள். இவர்களது வாழ்க்கையும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இயல்பும் காட்சி ரீதியாக நன்றாக உள்ளது.

இயோ ரம், போயிம், போம் , ஹூன் என இரண்டு ஜோடிகளின் காதல் தொடரில் அற்புதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஏஓஏ இசைக்குழுவைச் சேர்ந்த பாடகி சியுல்ஹியோன்தான் தொடரில் இயோ ரம் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாடல்களை பாடியவர் என்பதால், அதற்கு அணிந்த ஆடைகளையே எடுத்து வந்து உடுத்தி நடித்திருக்கிறார். நாகரிகம் அதிகளவு பரவாத கடற்கரை நகரத்தில் சிறிய ஷார்ட்ஸ்கள், உடலுக்கு சற்று பெரிதான வெள்ளை நிற சட்டை அணிந்து கவர்ச்சி காட்டுகிறார். இதெல்லாம் தாண்டி நடிக்க முயன்றிருக்கிறார் என்பதே முக்கியமானது.

சில ஏமாற்றங்களுக்குப் பிறகு பியோம், தனது கணித ஆராய்ச்சியை ஸ்விட்சர்லாந்து பேராசிரியருடன் இணைந்து செய்யத் தொடங்குகிறான். அவனது அக்கா, தேர்வெழுதி நூலகராக சியோலுக்கு செல்கிறாள். இயோ ரம், போமின் வெப் டூன் காமிக்ஸிற்கு கதை எழுதத் தொடங்குகிறான். ஹூன், அமெரிக்காவிற்கு சென்றாலும் போமை மறக்க முடியாமல் திரும்ப ஆங்கோக்கிற்கு வந்து விடுகிறான்.

இயோ ரம், போமிற்கு உதவுவதற்காக அவர்களது வீட்டில் வாடகைக்கு வந்து தங்குகிறாள். வாடகை, சில செலவுகளுக்காக வார நாட்களில் ஆறு நாட்களுக்கு காலையில் வீடுகளுக்கு பால் போடும் வேலையைச் செய்யத் தொடங்குகிறாள். காசு குறைவாக கிடைத்தாலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது. பியோம், தனது காதலி இயோ ரம்முக்கு ஏற்றபடி இரவில் வாக்கிங் செல்லத் தொடங்குகிறான்.

இயக்குநரின் கருத்து தெளிவானது. நகரமோ, கிராமமோ உங்களுக்கு பிடித்த வேலையை செய்தபடி வாழ்வது முக்கியம். வருத்தத்திலும், கடந்த காலத்திலும் வாழ்ந்து நிகழ்காலத்தை வீணாக்க கூடாது என கூறியிருக்கிறார். தொடர் முடியும்போது இயோ ரம்மும், பியோமும் கரங்களைக் கோர்த்துக்கொண்டு ஹூன் – போம் ஆகியோருக்கு பின்னால் நடக்கிறார்கள்.

குடும்பமே இல்லாமல் ஆங்கோக்கிற்கு வந்த இயோ ரம்மிற்கு தங்கையாக போம், சகோதரனாக போமின் அண்ணன் நாயுல், ஹூன் , காதலனாக பியோம், உதவும் நட்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மகன், மனநல குறைபாடு கொண்ட மகனைப் பெற்று உணவகம் நடத்தும் பெண்மணி என பலரும் குடும்பம் போல மாறுகிறார்கள்.

வசந்தகால விடியல் போல மனதிற்கு நம்பிக்கை தருகிற டிவி தொடர் இது.

கோமாளிமேடை டீம்

 

First episode date: 21 November 2022 (South Korea)
Based on: I Don't Feel Like Doing Anything; by Joo Young-hyun
Directed by: Lee Yoon-jung; Hong Moon-pyo
Executive producers: Lee Joo-ho; Lee Joon-hee (CP)
Genre: Melodrama; Romance; Slice-of-life;

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்