நூலின் மீது காதல் கொண்டவர்களைப் பற்றிய நூல் - பைபிலியோஹாலிசம் - டாம் ராபே

 



பைபிலியோஹாலிசம் நூல் அட்டை

டாம் ராபே





பைபிலியோஹாலிசம்

டாம் ராபே


பாரதி புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் ச.சுப்பாராவ் என்பவர் புத்தக காதல் என தொடரை எழுதி வருகிறார். மாதம்தோறும் நூல்களைப் பற்றிய நூல்களை அறிமுகம் செய்கிறார். அதில்தான் பைபிலியோஹாலிசம் என்ற நூல் கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றி.

பைபிலியோஹாலிசம் என்றால் நூல்களை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம். இந்த வகை குறைபாடு கொண்ட ஆட்கள் உலகில் நிறையப் பேர் உண்டு. இவர்கள் நூல்களை வாசிக்கிறார்களா என்றால் அதில் கவனம் இருக்காது. செம்பதிப்பு, மலிவுவிலைப்பதிப்பு, கெட்டி அட்டை, பளிச்சிடும் தாள் என ஒரே நூலை பல்வேறு தரத்தில் வாங்கி வீடு முழுக்க அடுக்கி வைத்திருப்பார்கள்.

நூல்களை வாங்கி வீட்டில் கொண்டு வந்து அடுக்குவதே இவர்களது வேலை. இப்படி நூல்களை வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், அரிய நூல்களை வாங்குபவர்கள், நூல்களை வாசிப்பதே வாழ்க்கை என இருப்பவர்கள என ஏராளமானவர்கள் பற்றி பகடியான முறையில் டாம் ராபே  விவரித்து எழுதியிருக்கிறார். ஏனெனில் அவரே பைபிலியோஹாலிக்தான்.

நூல்களை வாசிக்கும் வேட்கை கொண்டவர்கள் பற்றி வரலாற்று தகவல்களும் சான்றுகளும் நூலில் உள்ளன. இதனால் நூல்களை வாசிப்பதை கடமையாக செய்துவருபவர்கள் மனதிடம் கொண்டு அதை தீவிரப்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரே நூலை பல்வேறு வகையில் பிரதிகளாக வாங்கி வைத்திருப்பதை டாமின் மனைவி கண்டுபிடிப்பதும், அதனால் மனைவிக்கும் அவருக்கும் சண்டை வருவதை பற்றிய சம்பவமே பைபிலியோஹாலிசத்திற்கு சிறந்த உதாரணம்.

நூல்களை வாங்கி அடுக்கி வைப்பது எப்படி, அதை பிறருக்கு வாசிக்க இரவல் கொடுப்பதில் செய்யவேண்டியது என்ன, இ நூல்கள், வரவு, வாசிப்பு வேடகை, நூல்களை எங்கு உட்கார்ந்து எப்படி வாசிப்பது, உணவு வகைகளை சாப்பிடுவதோடு மேசையில் நூல்களுக்கும் இடம் ஒதுக்குவது பற்றியெல்லாம் டாம் எழுதி வியப்பூட்டுகிறார்.

நூல் 130 பக்கங்களைக் கொண்டது. எனவே, வாசிப்பவர்கள் எளிதாக வாசித்துவிடலாம். நிறைய விஷயங்கள் உள்ளீடாக கூறப்படுவதால் மெதுவாக படிப்பது நல்லது.

வாசிப்பு மீது காதல் கொண்டவர்களுக்கான நூல்.

கோமாளிமேடை டீம்

நன்றி

ச.சுப்பாராவ் - புதிய புத்தகம் பேசுது இதழ் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்