மனித உரிமைப்போராளி சோனி சோரி நேர்காணல்

அரசமைப்பு சட்டத்தின் படி செயல்படும் அரசு, ஏன் வன்முறையைத் தூண்டிவிடுகிறது?


சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டரைச் சேர்ந்த மனித உரிமை போராளியும், ஆம் ஆத்மியின் மாநில தலைவருமான சோனி சோரி அண்மையில் அவர் மீது நடந்த தாக்குதல் குறித்தும், மாநில ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரிக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம், காவல்துறை மற்றும் நக்ஸல்கள் இடையிலான சண்டை மற்றும் மாநிலத்திலுள்ள பழங்குடியினர் குறித்தும் நம்மிடையே விரிவாக உரையாடுகிறார். 

                                 ஆங்கிலத்தில்: இஷான் மிடல்

                                  தமிழில்: வின்சென்ட் காபோ











அண்மையில் உங்களை சிலர் தாக்கினார்கள் அல்லவா?(பிப்ரவரி 21) தாக்கியவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைத்ததா?

அவர்களின் முகம் எனக்குத் தெரியாது. பாஸ்தர் ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரியின் இந்த விவகாரத்தின் பின் இருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன். பாஸ்தரின் உள்ளே காவல்துறை அத்துமீறுவதை எதிர்த்து குரல் கொடுத்த விவகாரத்திலிருந்து  அவரும் நானும் போரிட்டு வருகிறோம். 

உங்களைத் தாக்கியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?

ஆமாம்.

வழக்கு தொடர்பாக யாரையாவது கைது செய்துள்ளார்களா?

இல்லை. இதுவரையிலும் இல்லை. காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் முரணாக என்னைத்தாக்கியதாக என் குடும்பத்தை சேர்ந்தவர்களையே கைகாட்டுகிறார்கள். என் உறவினரான லிங்கராம் கொடோப்பி மற்றும் என் தங்கையின் கணவரையும் குற்றவாளி என்கிறார்கள்.

உங்களை என்ன மாதிரியான பொருட்கள் கொண்டு தாக்கினார்கள் என்று அறிவீர்களா?

இல்லை. அது பற்றி எனக்குத் தெரியாது. என் மீது அப்பொருளை வீசக்கூட இல்லை. முகத்தில் வைத்து தேய்த்தார்கள். ”இப்போது உன் முகத்தை கருப்பாக்குகிறோம். இனியும் நீ அடங்கவில்லையெனில் உன் மகளுக்கு மோசமானதை நிகழ்த்துவோம். அவளால் ஒழுங்காக நடக்க கூட முடியாது” என்று கூறினார்கள். திரு . கல்லூரி மற்றும் காவல்துறை அடக்குமுறைகள் குறித்து அவர்களுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். எனவே இவர்கள்தான் என்மீது முகத்தை கருப்பாக்கும் திரவத்தை தடவியிருப்பார்கள் என்று நம்புகிறேன். 15 நிமிடத்திற்கு பிறகு என் முகம் தீப்பற்றியது போல எரிவதை உணர்ந்தேன். 

அண்மையில் ஜே.என்.யுவில் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சாரியா உள்ளிட்ட தேசவிரோத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஆதரித்து  உங்களுக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உள்ளதாக பேசியுள்ளீர்கள் ஏன்?

நான் சட்டீஸ்கரில் உள்ள சிறையில் இருக்கும்போது ஜே.என்.யுவில் விவகாரம் வெடித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. எனக்கும் அவர்களுக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் சமூகத்தின் தீமைகளை எதிர்த்து போரிடுகிறோம் என்பதுதான். 

அவர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றால் காவல்துறையின் மூலம்  முதலில் விசாரணை செய்ய வேண்டியதுதானே. தேச விரோத கோஷங்கள் ஆதாரம் கிடைத்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவர்களை சிறையில் அடைத்தது தவறான செயல்பாடு.  நகைமுரணாக, பெட்டகெல்லூர் கற்பழிப்பு விவகாரத்தில் பழங்குடி பெண் ஒருவரை பாதுகாப்பு படை கற்பழித்தது. அது குறித்து அப்பெண் காவல்துறையில் புகாரளித்து பல மாதங்கள் ஆன பின்னும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜே.என்.யுவில் பாஸ்தரில் நிகழும் சண்டையை என் முகம் பிரதிபலிக்கிறது என்று கூறினீர்கள். விரிவாக கூறமுடியுமா?

பழங்குடியினர் மீது நடக்கும் தாக்குதல்கள், வல்லுறவுகள், கொலைகள் ஆகியவைதான் என் முகத்தில் வெளிப்படுகின்றன. ஆனால் இதில் என்முகம் மட்டும் தனியாக இல்லை. ஆயிரக்கணக்கான பெயரறியாத, முகமற்ற தனி நபர்கள் பலர் பாஸ்தரில் உள்ளனர்.  நாடு பாஸ்தரில் என்ன நடைபெற்று வருகிறது என்பதையும் எங்களது போராட்டம் எப்படிப்பட்டது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். 

பாஸ்தரின் நிலைக்கு யாரை குற்றம்சாட்டுகிறீர்கள்?

மாநில அரசின் கொள்கைகள்தான் காரணம்...

காவல்துறை, நிர்வாகத்துறை...?

காவல்துறையை எப்படி குற்றம் சாட்ட முடியும்? இது அரசின் தவறு. அரசிடமிருந்துதானே  காவல்துறை ஆணைகளைப் பெறுகிறது.

நக்சலைட்டுகளும்தான் பழங்குடியினருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்?

காவல்துறை, நக்ஸல்கள் என இருவரும் ஆயுதம் தரித்து வன்முறையைத் தூண்டுகிறார்கள். ஆனால் நக்ஸலைட்டுகளுக்கு ஒரு கருத்துநிலை உண்டு. மாநில அரசு, முதலாளித்துவம் போன்றவற்றை அவர்கள் நம்புவதில்லை. அவற்றை எதிர்த்து போரிடுகிறார்கள். அந்நிலைமையில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 

ஆனால் அரசு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு சட்டம் குறித்து நம்பிக்கை கொண்டிருக்கிற நிலையில் ஏன் வன்முறையைத் தூண்டுகிறது. பழங்குடி மக்கள் அரசுக்கு தகவல் கொடுப்பவர்களாக மாற வேண்டும் இல்லாத நிலையில் சிறையில் தள்ளப்படுவார்கள். அவர்கள் அரசுக்கு தகவல் கொடுப்பவர்களாக மாறினால் நக்ஸல்களால் நிச்சயமாக கொல்லப்படுவார்கள். நக்ஸல்கள் செய்வது தவறுதான். ஆனால் அரசும் காவல்துறையும் மக்களை அவர்கள் புறமாக தகவல் கொடுப்பவர்களாக மாற்றுகிறார்கள். அதாவது, பழங்குடியினர் ஒன்று அவர்கள் புறம் இருக்கவேண்டும் இல்லையெனில் நக்ஸல்களிடம் இருக்கவேண்டும் என்று நிலையை உருவாக்குகிறார்கள். 


அரசமைப்புச்சட்டம் ஜனநாயகம் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?

நிச்சயமாக. அதனால்தானே இவ்வளவு துன்பத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். மோசமான சூழலில் இதற்கு பழிக்கு பழி வாங்கவும் எண்ணுகிறேன். ஆனால் அப்படி நான் செயல்பட்டதில்லை. ஆயுதம் எடுத்து போராடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. 

2011 ஆம் ஆண்டு நக்ஸல்களுக்காக எஸ்ஸார் குழுமத்திடம் பாதுகாப்பு பணம் பெற்றதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே, மிரட்டி பணம் பறித்தல், குற்றச்சதி, காவல்துறையினரை தாக்கியது, வாகனங்களை தகர்க்க முயற்சித்தது என்று உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்த குற்றச்சாட்டுக்கள் என்மீது எழுப்பப்பட்டபோது, நான் தண்டேவாடாவில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தேன். நான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்  ஆஜர் செய்யப்பட்ட போது அரசு நியமித்த ஆசிரியரான என்னை என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து  விசாரணை செய்யப்படவேண்டும் என்று கூறினேன். ஆனால் என் தரப்பை யாரும் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டம், 1956 படி கைது செய்யப்பட்டேன். வழக்கு 2011 ஆண்டிற்கு முன்பிருந்தே நடந்து வருகிறது என்று கூறப்பட்டது. நீதிபதியிடம் அப்போது முன்பே என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டேன். காவல்துறை என்னை விடுதலை செய்து விட்டனர். 

நான் விடுதலை செய்யப்பட்டால் ஒரு ஆண்டிற்கான சம்பளத்தை ஏன் கொடுக்ககூடாது? 250 மாணவர்களைக் கொண்ட விடுதிக்கு காப்பாளராக பணியாற்றி வந்தேன். நான் எப்போது காவல்துறை வாகனங்களில் தப்பிக்க முயன்றேன்? நான் நக்ஸலைட்டுகளோடு தொடர்புகொண்டிருக்கிறேன் என்றால் அரசு ஏன் எனக்கு ஊதியம் வழங்கி வருகிறது?  எஸ்ஸார் வழக்கில் நான் கையும் களவுமாக பிடிபட்டேன் என்று கூறுகிறார்கள். அப்போது ஏன் என்னை கைது செய்ய நான்கு ஆண்டுகள் மேல் தாமதித்து வருகிறார்கள்?

உங்கள் மீது பல வழக்குகள் இருக்கிறதே?

காவல்துறை நாங்கள் இருக்கும் பகுதியை நக்ஸல்கள் இருக்கும் பகுதி என வரையறை செய்ய விரும்புகிறது. சல்வா ஜூடும் படையினை வரவழைத்து அவர்கள்  மூலம் எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறது.  அங்கு நக்ஸல்கள் அந்த நேரத்தில் பள்ளிகளை அழித்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஐந்து அல்லது ஆறு விடுதிகளைச் சேர்ந்த காப்பாளர்களை வரவழைத்து பேசினார்கள். நான் தனியாக சென்று அவர்களிடம், அவர்கள் விடுதிகளை அழிப்பது நியாயமில்லை என்று கூறினேன். பாதுகாப்பு படைவீரர்கள் விடுதிகளில் பள்ளிகளில் தங்குவதால்தான் அவற்றை அழிப்பதாக காரணம் கூறினார்கள். நீங்கள் மக்களின் நலனுக்காக போராடி வரும்போது மாணவர்களின் விடுதிகளை அழிப்பது எப்படி நியாயமாகும் என்று கேட்டேன்.  விடுதியினை பாதுகாப்பு படை வீரர்கள் தங்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கு என்னை சத்தியம் செய்யச்சொன்னார்கள். அப்படி நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு தண்டனை கிடைக்கும் என்றார்கள். நான் மாவட்ட ஆட்சியரிடம் படைகளை அப்பகுதிக்கு அனுப்பவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தேன். 

ஆனால் உங்கள் மீது இத்தனை வழக்குகள் தொடுக்கவேண்டும்?

நக்ஸலைட்டுகள் என் விடுதியை எப்படி அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்பது படையினருக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கிறது. எங்கள் பகுதி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பேசி வந்தேன். அழிந்த விடுதிகளை திரும்ப கட்டுவது குறித்தும் பேசினேன். நக்ஸல்களை  ஒப்பந்தக்காரர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாக கூறி எங்கள் பகுதிக்கான பொருட்களை வேறு பகுதிக்கு கொண்டு சென்றார்கள்.  நான் இதைக்குறிப்பிட்டு கூறியதால் நான் நக்ஸல் அனுதாபி என்று காவல்துறை என்னை முடிவு செய்துவிட்டார்கள். 

உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?

எஸ்ஸார் வழக்கு ஒன்று மட்டுமே நிலுவையிலுள்ளது. 

2011 ஆம் ஆண்டு தாண்டேவடா எஸ்.பி. அங்கிட் கார்க் மீது வல்லுறவு, சிறையடிக் கொடுமை குறித்து புகார் பதிவு செய்தீர்கள். அதன் நிலை என்ன?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. திரு. கார்க்  அவர்களுக்கு காவல் துறையில் திறமையான செயல்பாட்டிற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வழக்கு பதிவு செய்து நான்கு மாதங்கள் இருக்கும் அல்லவா?

(அக்டோபர் 8-9, 2011 அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சோனி சோரி ஜக்தல்பூர் காவல் நிலையத்தில்  திரு. கார்க்கினால் தாக்கப்பட்டு, அவரின் யோனியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதோடு, கற்களும் திணிக்கப்பட்டது)

நீங்கள் இவ்வழக்கில் வென்றுவிடுவீர்கள் என்று நினைக்கிறீர்களா?

ம் நாட்டின் அமைப்பினை பொறுத்து உறுதியாக கூறமுடியாது. அதனோடு இணைந்து எதனையும் கூற விரும்பவில்லை. பாஸ்தரில் நிகழும் தவறுகள் நிரூபணம் ஆகி அதற்கு தகுந்த  நீதி கிடைத்தால் போதும். 

சட்டீஸ்கரில் முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும், தற்போது ஆட்சி செய்யும் பி.ஜே.பிக்கும் ஏதாவது வேறுபாடுகள் உண்டா?

சல்வா ஜூடும் படை காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேந்திர கர்பாவினால்தான் உருவாக்கப்பட்டடது. அவர் அந்த காரணத்திற்காகவே கொல்லப்பட்டார். அவர் வன்முறையை உருவாக்கினார் என்று கூறவில்லை. ஆனால் அதற்கான காரணத்தை உருவாக்கினார் என்று கூறவருகிறேன். இத்தனைக்கும் அவர் ஆதிவாசிகளின் தலைவர் வேறு. அந்த படை வன்முறைக்கு திரும்பிவிட்டது. 
காங்கிரஸ் அன்று போட்ட விதையை இன்று பி.ஜே.பி அறுவடை செய்கிறது. 

உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்களே?

என் மூத்த அண்ணன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.  எனக்கு அரசியல்ரீதியில் சாய்வு ஏதுமில்லை. திருமணமாகி குழந்தைகளை கவனித்துக்கொண்டு ஆசிரியர் வேலை செய்துகொண்டிருந்தேன். நாங்கள் மகிழ்ச்சியான நடுத்தர வர்க்க குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், சிறை வாழ்வு ஆகியவை அனைத்தையும் மாற்றி போட்டுவிட்டது.

அரசியலில் ஈடுபட ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

நவம்பர் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழக்கில் எனக்கு இடைக்கால பிணை வழங்கியது. நான் சட்டீஸ்கரில் வாழ அனுமதிக்கப்படவில்லை என்று பல்வேறு வதந்திகள் உலவின. நான் என் வழக்கறிஞரான பிரசாந்த்ஜியிடம் என் இடத்திற்கு திரும்பி போவது குறித்து பேசினேன். அவர் அரசுக்கு எதிராக நான் பேசுவதால் சிறையில் நான் எப்படி நடத்தப்படுவேனோ என்று கவலைப்பட்டார்.  நீ தொடர்ச்சியாக வேலை செய், அதற்கான பிரச்சனைகளை சமாளி, என்று கூறியவர் கட்சியில் இது குறித்து பேசினார். நான் என் குடும்பத்தினரிடம் இது குறித்து ஆலோசித்தேன். பிறகு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த பின் சட்டீஸ்கர் திரும்பினேன். 

ஏன் நீங்கள் பி.ஜே.பியில் சேருவது குறித்து சிந்திக்கவில்லையா?

அவர்களின் சட்டத்தினால் நான் பட்டது போதும். எஸ்ஸார் வழக்கினால் என் கணவரை சந்திக்க சிறிதளவு நேரம் கூட ஒதுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு என் கணவர் இறந்துவிட்டார். அரசு இருவிதமான செயல்முறைகளோடு செயல்படுகிறது என்பதாக உணர்கிறேன். 

முன்பு ஆதிவாசிகள் காவல்துறை,நக்ஸல் என இருவருக்குமிடையே சிக்கிக்கொள்வதாக கூறினீர்கள்.  நீங்கள் இந்த இருவரில் யாரிடம் சார்பு கொண்டிருக்கிறீர்கள்? யாரை ஆதரிக்கிறீர்கள்?

நான் எப்போது துப்பாக்கிகளை ஆதரிப்பதில்லை. இருவருமே துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். காவல்துறையினருக்கு நீங்கள் தண்ணீர் கொடுத்தால் அல்லது அவர் ஆதிவாசி வீட்டிற்கு வந்தால் உடனே நக்ஸல்கள் வந்து எதற்கு அவர் அங்கு வந்தார்? ஏன் அவருக்கு தண்ணீர் கொடுத்தாய்?  என்று கேட்பார்கள். நக்ஸல்களுக்கு நீங்கள் தண்ணீர் கொடுத்தால் நக்ஸல்கள் கேட்ட அதே கேள்வியை அவர்களும் கேட்பார்கள். 

காவல்துறை பல்வேறு அத்துமீறல்களை செய்ததாக தெளிவாக கூறுகிறீர்கள். ஓப்பீடாக வைத்துக்கொள்வோம். நக்ஸல்கள் இம்முறையில் சரியானவர்களா? அல்லது இருவருக்குமே எந்த வேறுபாடும் இல்லையென்று கூறுகிறீர்களா?

பாஸ்தரிலுள்ள நக்ஸலைட்டுகளினால்தான் ஆதிவாசிகள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். நக்ஸலைட்டுகள் காட்டின் உள்ளே அடர்வான இடங்களில் மலைப்பகுதியில் வாழ்கிறார்கள். நக்ஸல்கள் மட்டும் இல்லையென்றால் இங்கு அரசு தான் என்ன செய்யவேண்டுமோ அதை எப்போதோ நேரடியாகவே செய்து கொண்டிருக்கும். அரசு மக்களை பயன்படுத்திக்கொள்வதை நக்ஸல்கள் தடுத்து வருகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் அரசு மக்களை எப்போதோ கொன்றொழித்து இருப்பார்கள். 

பாஸ்தர் கனிம வளம் நிரம்பிய இடம் ...

ஆமாம். 


கனிம வளங்கள் இருக்குமிடத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். தொழில் வளர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

நான் மட்டுமல்ல பாஸ்தர் மக்களும் கூட இதனை ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் சண்டை அது குறித்துதான். சுரங்கம், புதிய கட்டிடங்களும் வரும். ஆனால் இதனை நாங்கள் ஏற்பதில்லை.  இங்கே தொழிற்சாலை உருவாகி, கார்கள், வேலைகள் கிடைக்கும் இதனை விரும்பவில்லையா என்று கேட்டபோது அவர்கள் அதனை மறுத்துவிட்டார்கள். 

தாண்டேவாடாவில் விமான நிலையம் வருவதாக பேச்சு இருந்தது. இதனால் பலர் தங்கள் நிலத்தை இழந்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் விமானத்தில் செல்லலாம் என்று கூறினேன்.அதற்கு அவர்கள், ராய்பூருக்கு பேருந்தில் செல்லலாம் என்றார்கள். பின்   விமானநிலையத்தின் தேவை என்ன? 

தேசிய கனிம வள நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கனிமங்களை விற்பதன் மூலம் அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. அவர்கள் அதனை முதலீடாக மாற்றிக்கொள்கிறார்கள். எங்களுக்கு அங்கு துப்புறவு தொழிலாளியாக கூட வேலை கிடைப்பதில்லை. மருத்துவமனை பெயரில் மட்டுமே இருக்க, அங்கு எந்த வித வசதியும் இல்லை. இங்கு சம்பாதிக்கும் பணத்தை வேறு மாநிலங்களுக்கு செலவழிக்கிறார்கள். எங்களது நிலத்தில் கிடைக்கும் பொருளிலிருந்து கிடைக்கும் பணம் எங்கள் நல்வாழ்விற்கு பயன்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் எங்களுக்காக எதுவும் செய்வதில்லை பிறகு ஏன் அவர்கள் இங்கு வர வேண்டும்?

சட்டீஸ்கரில் இரு வழக்குரைஞர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் ஒரு பெண் பத்திரிகையாளர் வீடும் தாக்கப்பட்டு அவரும் வெளியேற வற்புறுத்தப்பட்டார். இது சட்டீஸ்கரில் புதிய நிகழ்வா?

அப்படியெல்லாம் இல்லை. இது அரசு எப்போது செய்வதுதான். யார் ஆதிவாசிகளின் உரிமைகள், விருப்பங்கள் குறித்து பேசினாலும் அவர்கள் தேசத்துரோகியாக மாற்றப்பட்டுவிடுவார்கள். இம்முறையில்தான் அவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். 

நீங்கள் உங்கள் வாழ்க்கை குறித்து பயப்படவில்லையா?

இல்லை. எனக்கு எந்த பயமுமில்லை. எந்த மோசமான சம்பவமும் எனக்கு நடந்துவிடாது. நான் சிறையில் பல கொடுமைகளை சித்திரவதைகளை அனுபவித்துள்ளேன். இப்போது வரை அது தொடர்கிறது. மக்கள் சிறை மற்றும் மரணம் குறித்து பயப்படுகிறார்கள். நான் இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளேன். மரணம் ஒத்த அனுபவங்களை கொண்ட சூழ்நிலை அது. எது குறித்தும் எனக்கு பயமில்லை. 

நன்றி: டெக்கன் கிரானிக்கல், 13 மார்ச் 2016





























பிரபலமான இடுகைகள்