பேராசிரியர் சுசி தாரு நேர்காணல்

உரையாடல் ஒன்றின் தொடக்கம்


இந்தியாவில் முதல்முறையாக பால் வேறுபாடு குறித்த கல்விப்பாடம் ஒன்றினை ஹைதராபாத் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்வி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மற்ற கல்வி நிறுவனங்கள் கவனிக்கின்றனவா?

                                      ஆங்கிலத்தில்: எஸ்.பி. விஜயா மேரி
                                      தமிழில்: எம்.டி. ரிச்சர்ட்














இந்த பாடப்புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவரான சுசி தாரு அவர்களிடம் பேசினோம்.

நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புத்தகத்திற்கு என்ன மாதிரியான விளைவு உள்ளது?

நான் இவ்வளவு ஒருமித்த கருத்துகள் இருக்கும் இந்த விஷயத்துக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாடப்புத்தகம் மக்களின் மனநிலையை மாற்றிவிடுமா?

நான் இந்தக்கேள்வியை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக்கொள்வதுதான். உண்மை இதுதான். ஒரு புத்தகம் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது.  நாம் மாணவர்களுக்கு புதிய சிந்தனைகளை , வகுப்பறை நாகரிகத்தை, சமநிலை தன்மை குறித்தும் பிரச்சினைகளை விவாதிப்பதற்கான சூழலினை உருவாக்கிக் கொடுக்க முனைகிறோம் அவ்வளவுதான். புத்தகங்களில் என் அம்மா வேலை செய்வதில்லை என்று ஒரு பகுதி உள்ளது. அவள் பல இடங்களிலும் வெளித்தெரியாத வேலையாளாக இருக்கிறாள்.  ஏன் ஆண்கள் வீட்டு வேலை தவிர்த்து வேறு வேலை எதையும் பெண்களோடு பகிர்ந்து கொள்வதில்லை? இதுபோன்ற விவாதத்தையே இப்புத்தகம் முன்னெடுக்கிறது.

ஏன் இந்தப்புத்தகம் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது? இளங்கலைப் பட்டம் கொண்ட கல்லூரிகளுக்கு இவை கிடையாதா?

இது பல்கலைக்கழகம் எடுத்த முடிவு. இதுபோன்ற பாடங்கள் மற்ற கல்லூரிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.  இம்முறையில் வேலைவாய்ப்புகளும் உருவாகும் தருணத்தில் இவை கவனிப்பு பெறும். பாலியல் துன்புறுத்தல் குறித்து பாதகமான விளம்பரம் தன்னைக் குறித்து வெளிவருவதை எந்த பணியாளரும் விரும்புவதில்லை.

இவை பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எண்ணுகிறீர்களா?

அது குறித்து உறுதியாக கூறமுடியவில்லை.  புதிய பாடப்புத்தகங்களில் பாலியல் தொடர்பான விஷயங்கள் குறித்தும் இலக்கியப்புத்தகங்களிலும் வரும் விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். பால்வேறுபாடு என்பதை நீக்குவதற்கான நடைமுறை வழிகளை காணவேண்டும். மாணவர்களும் மாணவிகளும் இருவரும் இணைந்து பணிபுரிவதற்கான வழிகளை செயல்பாடுகளை உருவாக்கவேண்டும். பள்ளி என்பது இருவரையும் தனிமைப்படுத்த, பிரிக்க பயன்படுத்தக்கூடாது. பள்ளி, குடும்பம் என இரு அமைப்புகளும் மாணவர்கள், மாணவிகள் என இருவரையும் ஒன்றாக பாவிக்க வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும்.

இந்த பாடத்திட்டம் உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு ஏதேனும் உண்டா?

புத்தகங்களை தயார் செய்யும்போது அது குறித்து பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்கவில்லை. உண்மையில் இதனை தயாரித்த அனைவருமே தம்மளவில் ஒரு பெற்றோர்தான். நாங்கள் எங்களை அப்படி கருதியேதான் இந்த புத்தகத்தை உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் உருவாக்கியுள்ள இந்த விஷயங்களை தங்கள் உணவு வேளையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

இப்பாடத்தினை சொல்லித்தரும்போது ஆசிரியர்களுக்கு என்ன விஷயங்களை கூற விரும்புகிறீர்கள்?

இது உண்மையில் ஒரு பிரச்சினைதான். இப்பிரச்சினை குறித்து தன்னார்வலர்கள்  இதனை பிறருக்கு கற்றுத்தரலாம் என்று முதலில் ஒரு யோசனை இருந்தது. இம்முறையில் ஆழமாக இதனை கற்கும் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடங்களை சரியாக நடத்தமுடியும். இப்பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடம் இருந்த ஆர்வம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. பல்கலைக்கழகம் தாண்டிய எதிர்பார்ப்புகளும் எதிர்வினைகளும் மகிழ்ச்சியாக இருந்தன.

மரபான பால் வேறுபாடுகளை சமூகம் கடந்து வர தயாராகிவிட்டது என்று கூறலாமா?

பால் வேறுபாடுகள் என்பதை கடந்து வர தயாராகிவிட்டோம். அவை மாறவும் தயாராகத் தொடங்கிவிட்டன. இன்று கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 42 சதவிகிதம் பெண்கள்தான். பல்வேறு பொருளாதாரப் பின்னணி கொண்ட பெற்றோர்களும் தங்கள் பெண்களை பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். பல்வேறு தொழில்துறையில் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களில் தெருக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள், வாகனங்களை ஓட்டுகிறார்கள், பயணிக்கிறார்கள், திட்டமிட்ட அளவில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கடுமையாக உழைப்பதோடு வாழ்வை எப்படி வாழவேண்டும் என்றும் அவர்கள் அறிந்துள்ளார்கள். குழந்தைவளர்ப்பு, பெண் வளர்ப்பு உள்ளிட்டவற்றையும் ஆண்கள் இன்று பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். அனைத்தும் மிகச்சரியாக உள்ளன என்று கூறவில்லை. இருளான பக்கங்களும் இதற்கு உண்டு. ஆனால் நடைபெறுகின்ற செயல்பாடுகளில் உள்ள வெளிச்சம் நம்பிக்கையளிக்கிறது.

நன்றி: தி இந்து ஆங்கிலம், மார்ச் 27, 20216