நினைவுக்கேணி-பாவண்ணன் இரா.முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்









      நினைவுக்கேணி



             பாவண்ணன் இரா.முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்



தொகுப்பாசிரியர்
அன்பரசு ஷண்முகம்
  கார்த்திக் வால்மீகி  


     
 

தொகுப்பாசிரியர்
அன்பரசு ஷண்முகம்
கார்த்திக் வால்மீகி

தட்டச்சுப்பணி
இளம்பிறை

மின்னூல் வடிவமைப்பு
தி ஆரா பிரஸ், இந்தி்யா.

மின்னஞ்சல்
sjarasukarthick@rediffmail.com

வெளியீட்டு அனுசரணை
www.Komalimedai.blogspot.in


கிரியேட்டிவ் காமன்ஸ் 2015 உரிமத்தின் கீழ் வெளியிடப்படும்
இந்த மின்னூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வணிகமுறையில் பயன்படுத்தும்போது  மேற்குறிப்பிட்ட வலைப்பூ முகவரியினையும்,
மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட வேண்டும்.


தொகுப்பாசிரியர் உரை


மதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நூல் 21 கடிதங்களைக்கொண்டுள்ள சிறுநூல் ஆகும். தாராபுரம் இரா.முருகானந்தம் அவர்களுக்கு பாவண்ணன் 2005, 2006, 2007 காலகட்டத்தில் எழுதிய பல்வேறு நூல்களைப்பற்றிய, கட்டுரைகளைப்பற்றிய, சமூக விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களை இக்கடிதங்களில் கண்டதே இவற்றை தொகுப்பதற்கான ஒரே காரணம் எனக்கூறலாம். கடிதம் எழுதுவது என்பது நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நாம் நினைக்கும் கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறதா என்று அறிய முயற்சிக்கும் எழுதுவதற்கான ஆரம்ப பயிற்சியும் கூட.

இவ்வெழுத்துக்கள் ஏதோ ஒன்றை இவற்றை தொகுக்கும்போது எங்களுக்கு ஏற்படுத்தியது. அது சமூக பொறுப்புகொண்ட ஒரு இதயத்தின் அறக்குரல் என்று நம்புகிறோம். மாற்றத்திற்கான போராட்டம் என்பது தமிழ்சமூக சூழலில் தொடர்ச்சியாக அதனை இடைநிற்காது முன்னெடுப்பதே ஆகும். ஒரு ஆங்கிலேயருக்கு அனைத்து பகுதி மனிதர்களை ஒன்றாக இந்தியர் என்று பார்த்து செயல்பாடுகளை செய்ய இயலுகிறது. இன்று நம்மால் அப்படி எண்ணக்கூட தயக்கம் உள்ளது சமகாலத்தின் அவலம் அல்லவா?

இக்கடிதங்களை கொடுத்துதவியும், தொடர்ந்து காந்தி குறித்த பல்வேறு சிந்தனைகளை கலந்துரையாடி தொடர்ந்து எங்களுக்கு வலுவேற்றி உற்சாகப்படுத்தும் நெகிழ்வுத்தன்மையான நண்பர் சபர்மதி அறக்கட்டளைத் தலைவர் இரா.முருகானந்தம் அவர்களின்றி இந்நூல் மட்டுமல்ல எங்களது உழைப்பும், பணியும் சாத்தியமாகியே இருக்காது. இதோடு கணியம் ஆசிரியர் மற்றும் Freetamilebooks.com நிறுவனரான ஸ்ரீனிவாசன் மற்றும் அவர்தம் குழுவின் தொழில்நுட்ப உதவிகளும், ஆதரவும் பெருமளவு    எங்கள் கருத்துக்களை பலரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. எங்களைத்தொடர்ந்து நல்ல தரமான   நூல்களை உருவாக்க பெரும் உந்துதல் தருவது சமூகத்திற்கு தம்மை எரித்துக்கொள்ளும் தன்னலமற்ற மனிதர்களின் வாழ்வும்தான். நன்றி!
அன்பரசு ஷண்முகம்
கார்த்திக் வால்மீகி

1

மகத்தான நிறைவு
24.12.04
அன்புள்ள நண்பருக்கு

வணக்கம், மல்லேஸ்வரம் முகவரியிலிருந்து எங்கள் அலுவலகம் ஜெயநகர் என்னும் புது இடத்திற்குப் பெயர்ந்து எட்டு மாதங்களாகின்றன. இப்போது எல்லோருக்கும் மேலே உள்ள வீட்டு முகவரியைத்தான் கொடுத்து வருகிறேன். அஞ்சலகத்தில் கடிதம் கொடுத்திருந்தாலும் சரியான முறையில் உரிய முகவரிக்கு திரும்பி வருவதில்லை. வந்தாலும் கைக்குச் சேருவதில்லை. நான்கு மாடிகளில் பதினாறு அலுவலகங்கள் உள்ள  கட்டிடம் அது. அஞ்சல் ஊழியர் வாசல் வரை வந்து கண்ணுக்குத்தெரியும் ஏதாவது ஒரு பெட்டியில் குப்பையைக் கொட்டுவது போல கொட்டிவிட்டுப் போய்விடுவார். பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து எடுக்கவேண்டியதை எடுத்துக் கொண்டு வேறு பெட்டியில் வீசி விடுவார். இப்படி வீசப்பட்டு, வீசப்பட்டுத்தான் உங்கள் மடல் என் கைக்கு வர இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

வறுமை என்னும் வதைமுகாம், சமூகத்தின் அழகு கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் எனக்கு நம்பிக்கை அளிப்பனவாக உள்ளன. எந்தப் புற நிர்பந்தங்களுக்கும் வளைந்துகொடுக்காமல் நம் மனம் சுட்டும் மதிப்பீடுகள் சார்ந்து வாழ முடிவெடுப்பது என்பது இக்காலத்தில் மிகப்பெரிய காரியம். இப்படி இளமையில் நாம் எடுக்கும் முடிவுகளே எஞ்சிய காலத்துக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிநடத்துகின்றன. இவ்வாழ்வில் லௌகீக நோக்கில் நாம் இழப்புகளை சந்திக்கலாம். சில இன்பங்களைக்கூட நாம் இழக்கலாம். ஆனால் நம் மனம் கொள்ளும் மகத்தான நிறைவுக்கு நிகரானது எதுவுமில்லை.



ஸ்ரீராமிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை. தொலைபேசி அழைப்புமில்லை. சமீபத்தில் அவருடைய சிறுகதை ஒன்றை 'படித்துறையில்' படித்தேன். நீங்கள் உங்கள் ஊரில் இருந்தபடி தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல புதிய புத்தகங்கள் ஓராண்டு இடைவெளிக்குள் இப்போது நூலகங்களுக்கு வந்து விடுகின்றன. இது பெரிய மாற்றம்தான். ஆனால் இந்த ஆண்டு நூலகங்களுக்கு போதிய ஒதுக்கீடு இல்லாமல் புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்று சொன்னார்கள். உங்கள் நலம் விழைகிறேன்.
அன்புடன்,
பாவண்ணன்.













2

வாழ்க்கையும் பண்பாடும்
1.1.05
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. தினமணிக்கட்டுரையைப் பற்றிய உங்கள் கடித வரிகள் மகிழ்ச்சியைத் தந்தன. இன்றைய காலச்சூழலில் தன்னலமற்றவர்கள் ஒருவரைப் பார்த்தாலும் அவர்கள்பால் மரியாதையான எண்ணம் தானாக எழுகிறது. இத்தகைய வாழ்க்கைமுறையும், பண்பாடுமே மற்ற நாட்டு மக்களுக்கு மதிப்பீடாக நிலைபெற வேண்டும்.

கடந்த ஆண்டு (2003) வரை எழுதப்பட்ட தினமணிக்கட்டுரைகள் 'எட்டுத்திசையெங்கும் தேடி' என்கிற தலைப்பில் நூலாக வந்துள்ளது. வெளியீடு: அகரம் பதிப்பகம், மனைஎண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613007.

ஒருமுறை ஸ்ரீராம் தொலைபேசியில் பேசினார். அவருடைய சிறுகதைத் தொகுப்பொன்று வர இருப்பதைப் பற்றி சொன்னார். கனவுப்பட்டறைப் பதிப்பகம் வெளியீடு. இந்நேரம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2005.
அன்புடன்,
பாவண்ணன்.






3

துருக்கி தேச கவிதையொன்று...

23.4.05
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். இன்று ஏதோ ஒரு புத்தகத்தை அடுக்கில் இருந்து எடுக்கும்போது உங்கள் கடிதம் அதிலிருந்து விழுந்தது. எனக்குள்ளேயே ஒரு சந்தேகம். உங்களுக்கு பதில் எழுதினேனா? இல்லையா? என்று ஞாபகத்தில் இல்லை. எழுதி இருந்தால்தான் என்ன? இன்று ஒன்று எழுதுவோமே என்று நினைத்தேன்.

உங்கள் வாழ்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. நன்றி. இப்போது எங்கே இருக்கிறீர்கள்? சென்னையிலா? தாராபுரத்திலா? அங்கேயும் வெயில் கடுமைதானா? இங்கே வெயில் ஆளை வறுத்து எடுக்கிறது.

சமீபத்தில் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த கவிதையின் திசைகள் எனும் நூலைப்படித்தேன். மிக நல்ல கவிதைகள். எட்டு அயல்நாட்டு கவிஞர்கள் எழுதியவை. நசீம் ஹிகன் என்னும், துருக்கி தேசத்து கவிஞரின் கவிதைகள் மனதை உறைய வைக்கின்றன. இரண்டு மூன்று நாட்கள் அவரது கவிதைகளையே அசைபோட்டபடி இருக்கிறேன். நல்ல அனுபவமாக உள்ளது. சமீபத்தில் ஸ்ரீராம் ஏதாவது ஊர்ப்பக்கம் வந்தாரா?

அன்புடன்,
பாவண்ணன்.




4

நதியின் நிறம் என்ன?
5.8.05
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? உங்கள் கடிதம் கிடைத்தது. அரசியல் துறையைப் பொறுத்தமட்டில் எனது நியாய மரபு என ஒன்று உண்டு. எனக்குத்தெரிந்து இந்தியாவில் காந்தியடிகள் மட்டுமே இம்மரபு சார்ந்து நின்றவர். எந்நிலையிலும் தனக்கு நஷ்டமே விளைந்தாலும், நியாயத்தின் பக்கமே நின்றவர். எந்த தனிமனிதரையும் விட நியாயம் பொது என நினைத்தவர் அவர். அதனால் ரத்தக்களரியான இடங்களில் கூட தனிமையில் நடந்தவர் அவர். அவரை விட வேறு யாரிடமும் அப்படிப்பட்டதன்மை இல்லை என்பதை அவருடைய காலத்திலேயே இந்தியா உணர்த்திவிட்டது!? அவரும் நெஞ்சு நிறைய துயரத்தோடு வாழ்ந்திருக்கக்கூடும்.

இப்புள்ளியில் நதியின் பயன், அதன் கடைசிப்புள்ளியில், வசிப்பவனையும் முழுமையாக சேர வேண்டும் என்கிற நியாயம் எடுபடாமல் போனதையும் புரிந்துகொள்ளலாம். தோன்றும் இடம் என்பதாலேயே அனுபோகத்திற்கு உரியதாகிவிட்டது. எந்த நியாயத்திற்கும் கட்டுப்பட மறுக்கிற பொதுமக்களும், எல்லாவற்றையும் விட நாற்காலியே பெரிது என அற்ப அரசியல்வாதிகளும் இருக்கும்வரை இம்மனோபாவத்தில் மாற்றம் ஏற்பட வழியில்லை. எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் பாவம்? நியாயம் அறியாதவர்கள் அல்ல அவர்கள்.

ஒவ்வொருமுறையும் நியாயத்தைப்பேசும் போதெல்லாம் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் ஊர்பற்றிலாத ஊதாரிகளாகச் சித்தரிக்கப்படும் வாசகங்களுக்கு இரையாகிப்போகிறார்கள். சில வீடுகள் கல்லடி படுவதும் உண்டு.

 எல்லாவற்றையும் சாதி, மத, மொழி நிறம்பூசி புரிந்துகொள்கிற அல்லது நிறம்பூசி பேசுகிற மனிதர்கள் முன் கையறு நிலையில்தான் நல்ல மனிதர்கள் நிற்க வேண்டியுள்ளது. கர்நாடகமானாலும், சரி. தமிழ்நாடானாலும் சரி. இதில் மாற்றம் ஏதுமில்லை.
அன்புடன்,
பாவண்ணன்.
 






















5

நிலாக்குருவியின் குரல்

31.10.2005
அன்புள்ள நண்பருக்கு,

'தீண்டாத வசந்தம்' மதிப்புரை உங்களைக் கவர்ந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இன்னும் ஒரு சில அம்சங்களும் எழுதி இருந்தேன். நீளம் காரணமாக விடுபட்டுவிட்டது போலும். எடுத்துக்காட்டாக, அதில் இடம் பெறும் நிலாக்குருவியின் சோகக்குரல், அதை அழகான படிமமாக மாற்றி இருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களின் இதய வலிகளின் அடையாளமாக மாற்றி இருக்கமுடியும். அந்த வாய்ப்பு நாவலில் தவறவிடப்பட்டது.

சு.ராவின் மறைவு மிகப்பெரிய வெறுமையை மனதில் உருவாக்கி இருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மனம் மீள இன்னும் சில நாட்கள் ஆகும். அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரை ஒன்று எழுதி இருந்தேன். எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர் 24.10.2005 தினமணியில் வெளிவந்தது. துரதிருஷ்டவசமாக இதுவும் பாதியாக சுருக்கப்பட்டு வந்தது. வேறு சந்தர்ப்பம் வாய்க்கும்போது, இன்னும் விரிவாக எழுத வேண்டும். முயற்சி செய்கிறேன். நண்பர் ஸ்ரீராமின் திருமண அழைப்பிதழ் வந்துள்ளது. வந்து கலந்துகொள்ள ஆசையாகத்தான் உள்ளது. எப்படி அமையுமோ தெரியவில்லை. பார்க்கலாம்.
அன்புடன்,
பாவண்ணன்.





6

மனதிலும் குளிர்
22.11.05
பெங்களூர்.
அன்புள்ள நண்பருக்கு,

 வணக்கம். நலம்தானே? இந்தப்பதிலை சற்று தாமதமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். சு.ரா.வின் திடீர் மறைவு மனதில் ஒருவித வெறுமையாய் கவிந்திருக்கிறது. அச்சோர்விலிருந்து மீளமுடியாத நிலையில் இருந்தேன். இப்போது தேவலாம். நேற்று இங்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினோம். பேச்சு ஒரு வடிகாலாக அமைந்துவிட மனபாரம் சற்றே குறைந்துள்ளது.

உயிர்மை, புதியபார்வை இதழ்களில் வெளிவந்த கதைகளைப் பற்றிய உங்கள் குறிப்புகள் மகிழ்ச்சியளித்தன. வாசிப்பின் நுட்பம் உங்களுக்குள் கைகூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மனம் என்னளவில் எழுச்சி கொண்டு அல்லது துவண்டு முடிவுகளை நோக்கி நகர்ந்து செல்லும் பயணத்தை முன்வைக்க நினைத்த கதை. உரையாடல்கள் வழியே அவர்கள் பெறும் ஆறுதலையும், அவற்றின் சின்னமாயும், அவற்றை உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளை இழந்துபோன நிலையும் உருவாக்கிய தவிப்பையும் இரு வெவ்வேறு புள்ளிகளில் நிறுத்தி, ஒன்றை நோக்கி ஒன்று நெருங்குவதாக சூழல் அமைகிறது. இப்படித்தான் நான் சொல்ல நினைத்தேன். முடிவை ஊகிக்கக்கூடிய விதத்தில் கதை கொண்டிருப்பது வாஸ்தவம்தான். வேறு விதத்தில் எப்படி இதை அமைத்திருக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.





ஸ்ரீராம் திருமணத்தையொட்டி நண்பர்கள் அனைவரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இரவை இலக்கிய இரவாக மாற்றிக்கொண்ட சந்தர்ப்பத்தில் உரையாடல்களில்  பங்கு பெற இயலாமை வருத்தமாகத்தான் உள்ளது. மழை ஓய்ந்து குளிரத்தொடங்கிவிட்டது என்று ஆறுதலாக இருந்த சமயத்தில் மீண்டும் மழை நேற்று முதல் பொழிந்து தள்ளுகிறது. பாதையெங்கும் ஒரே சொதசொதப்பு. நடப்பதே பெரிய வித்தை போல் உள்ளது. பிற பின்.
அன்புடன்,
பாவண்ணன்.




















7

  எழுதும் பிரக்ஞை
3.1.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? உங்கள் கடிதம் கிடைத்தது. மனதில் முட்டி நிற்கும் வரிகளை உடனடியாக எழுதியாகவேண்டும். தள்ளிப்போடவே கூடாது. தள்ளிப்போடுவது என்பது அதைச்செய்யாமல் இருப்பதற்கு நாமே கண்டறியும் சாக்குபோக்குதான். இப்போது தலையில் கனமான ஒரு பாரம் உள்ளது என்று எடுத்துக்கொள்வோம்.  எப்போது தாங்க முடியாமல் வலி உயிரை வாட்டுகிறதோ, அப்போது என்ன செய்வோம்? இறக்கி வைத்துவிட்டுத்தானே மறுவேலை பார்ப்போம். இன்னும் கொஞ்சநேரம் போகட்டுமே என இருப்போமா? மனதில் தளும்பி நிற்கும் பாரமும் கிட்டத்தட்ட அதுபோலத்தான். எழுதித்தான் அப்பாரத்தை இறக்கவேண்டும்.

பிரசுரம் பற்றி தொடக்கத்தில் முதலில் எந்த எண்ணமும் வைத்துக்கொள்ள வேண்டாம். முடித்த உருவம் திருப்தியானால் புதிய பார்வை, காலச்சுவடு, உயிர்மை, தீராந்தி என பல படைப்பிதழ்களுக்கு அனுப்பி வைக்கலாம். முதலில் எழுதத் தொடங்குக. அதுவே எழுத்தின் ரகசியம். 'ரத்தம்' கதையைப்பற்றிய உங்கள் அவதானிப்புகள் அதை எழுதும்போது எனக்கிருந்த மனவுணர்வுகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததில் மகிழ்ச்சியடைந்தேன். வீட்டில் மகனும், மனைவியும் நலமே.

அன்புடன்,
பாவண்ணன்.








8

மதிப்பும் மரியாதையும் எங்கே?
19.1.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? உங்கள் கடிதம் வந்தது. நண்பர் ஸ்ரீராமின் தாயாருடைய மறைவுச்செய்தி அதிர்ச்சியும், துயரும் அளிப்பதாக இருந்தது. உடனேயே அவருக்கு தொலைபேசி செய்து பேசினேன். எங்கும் செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்ததும், உடனடியாக பேசிவிட முடிந்ததும் ஆறுதலாகவே இருந்தது.

உயிர்மை கூட்டத்தில் இப்படி ஒரு வருத்தத்துக்குரிய சம்பவம் நடந்தேறியது இன்றும் கூட என்னால் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. அப்படத்திற்கு எஸ்.ரா வசனம் எழுதினார் என்பதும் தெரியாது. அதனால் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. எழுத்தாள நண்பர்களுக்கிடையே நட்புறவு கடந்த காலத்தில் இருந்ததைவிட, கூடுதலாகி வந்திருக்கிறது என்று நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு. அந்த நம்பிக்கை அர்த்தமற்றதோ என்று எண்ணத்தூண்டுகிறது இச்சம்பவம். பரஸ்பரம் மதிப்பையும், மரியாதையையும் பகிர்ந்துகொள்ள முடியாத உலகில் எப்படி எழுத முடியும்?

அன்புடன்,
பாவண்ணன்.






9

இழந்துகொண்டிருப்பது அதிகம்
25.2.06

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உயிருக்கே உலைவைக்கக்கூடிய ஒரு சம்பவம் எவ்வளவு தற்செயலாக நடந்தேறி படுக்கவைத்துவிட்டது என்பதை அறிய வேதனையாக உள்ளது. ஒருவாய் என்பதால் ஒரு மாத மருத்துவத்தோடு முடிந்துபோனது. இருப்பினும் வயிறு விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்கவும். இளநீர், பழச்சாறு போன்றவை பயன்தரத்தக்கதாக இருக்கலாம். அவற்றை டாக்டர் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து உட்கொள்ளவும். நீராகாரம் கூட பொருத்தமானதாக இருக்கலாம்.

பிச்சை மட்டுமல்ல இன்னும் பல பெரியவர்களின் உழைப்பு பிரதான இலக்கிய உலகின் பார்வையில் படாமலே போய் சேர்ந்திருக்கிறார்கள். அ.கா. பெருமாள் காலச்சுவடு இதழில் எழுதிய குறிப்பில் உ. சுப்ரமணியன் என்பவர் ரஜனீஷ் பற்றி சொந்தமாக 200 பக்கங்கள் வருமளவு ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அவர் மறைந்து போனதில் புத்தகம் வரவில்லை. இப்போது வரும் வாய்ப்பு உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு புத்தகம் படிக்க கிடைத்தால் எவ்வளவு நல்ல அனுபவமாக இருக்கும். நாம் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும் அநேகம். உடல்நலம் பேணவும்.
அன்புடன்,
பாவண்ணன்.




10

வாழ்வும், பயணமும்
9.5.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம் பெற்று வருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த வேதனையோடு எதற்காக தேர்தல் வேலைகளில் இறங்கவேண்டும்? பூரண குணமடையும் சமயத்தை இது தள்ளிப்போடும் அல்லவா? நீங்கள் எங்களுடைய ஊர் வழியாக பிரயாணம் செய்ததை அறிந்து சந்தோஷமாக இருக்கிறது. ஸ்டேஷனில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளி எங்கள் வீடு. அடுத்தமுறை அந்தப்பக்கம் செல்லும்போது எங்கள் வீட்டுக்கு அவசியம் வாருங்கள். பாண்டியன் டைலர் வீடு அல்லது பாரதி ஆர்டிஸ்ட் வீடு எங்கே என்று கேட்டால் யார் வேண்டுமானாலும் காட்டுவார்கள். என் பெயரைச்சொல்லிக் கேட்டால் தடுமாற்றம் நேர்ந்துவிடும்.(முகவரி 17பி, கால்நடை மருத்துவமனைத்தெரு, வளவனூர் - 605128) கோடை இங்கே வறுத்தெடுக்கிறது. வெப்பமும், வியர்வையும் சோர்வுற வைக்கின்றன. இத்தோடு பயணங்களும் அலைய வைக்கின்றன. புதியபார்வை இதழில் 'நதியின் கரையில் ' என்றொரு தொடர் தொடங்கி இருக்கிறேன். வாழ்வனுபவக் கட்டுரைகள். பார்த்துவருவீர்கள் என்று எண்ணுகிறேன்.

இரண்டு கவிதைத்தொகுப்புகளை மட்டுமே புதிதாகப் படித்தேன். வேறு ஒன்றும் தொடவில்லை. நானும் குடும்பத்தாரும் நலமே. பிறபின்.

அன்புடன்,
பாவண்ணன்.



  11

நல்லனுபவ நூல்கள் இரண்டு
11.5.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? இந்தமுறை பிரயாணங்கள் சற்றே அதிகமாகி விட்டன. ஊர் திரும்பவும் தாமதம். முருகன் பற்றிய உங்கள் கணிப்பு சரிதான். அந்த மதிப்புரையை இன்னும் சற்றே விரிவாக இரண்டு பக்கங்கள் கொள்ளும் அளவுக்கு எழுதி இருந்தேன். அவர்கள் அதைச்சரிபாதியாகச் சுருக்கி வெளியிட்டுள்ளார்கள். என்ன செய்ய? அவருடைய இன்னொரு நாவலும் (அரசூர் வம்சம்) வந்துள்ளது. சுவாரசியமான படிக்கவேண்டிய நாவல். தலைமுறை இடைவெளிகளால் மதிப்பீடுகள் மாறிவிடுவதை நல்ல முறையில் பதிவுசெய்துள்ளார். நூலகத்தில் கிடைத்தால் படித்துப்பார்க்கவும். மலையாள நாவல்கள் இரண்டு படித்தேன். மொழிபெயர்ப்புதான். முதல் நாவல் என்.பி.டி வெளியீடு.

மலையாற்றூர் இராமகிருஷ்ணன் எழுதிய 'இயந்திரம்' அரசு நிர்வாக இயந்திரத்தின் மையல்களாகக் கருதப்படும் அதிகாரிகளின் மனவுலக/புறவுலக வாழ்வை சித்தரிக்கும் நாவல். அடுத்ததாக கோவிலன் என்பவர் எழுதிய 'தட்டகம்' என்னும் நாவல். இது சாகித்திய அகாதெமி வெளியீடு. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் வசிக்கிற சில குடும்பங்களின் வம்சவரலாறாக விரிவடைகிறது நாவல்.  இரண்டுமே படிக்க நல்ல அனுபவம் தருபவை. வயிற்றுப்புண் குணமாகி இருக்கும் என்று நம்புகிறேன். பிறபின்.
அன்புடன்,
பாவண்ணன்.


12

கோடையில் வாழ்வு
10.6.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் மகிழ்ச்சி அளித்தது. நான்தான் விடை எழுதப் பெரிதும் தாமதப்படுத்திவிட்டேன். தியோடர் பாஸ்கரன் உங்கள் ஊர்க்காரர் என்று அறிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் மாற்றி மாற்றி எழுதும் கட்டுரைகள் புதிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதங்களிலும் உற்சாகம் கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்கும். அ.முத்துலிங்கம், தியோடர் பாஸ்கரன், ஞாநி போன்றோர் எழுதும் கட்டுரைகளை எப்போதும் விரும்பி படிப்பேன்.

என் குடும்பத்தைப் பற்றி கேட்டிருந்தீர்கள். இங்கு நானும் என் மனைவியும், மகனும் மட்டுமே உள்ளோம். மகன் தற்சமயம் பிளஸ்டூ  முடித்துள்ளான். பொறியியல் படிப்பு சேர்க்கவேண்டும். அதற்காகத்தான் பல அலைச்சல்கள். ஊரில் தாயாரும், இரு தம்பிகளும் தங்கையும் உள்ளார்கள். எல்லாரும் மணமானவர்கள். ஊர் வளவனூர். பாண்டிச்சேரிக்கும், விழுப்புரத்திற்கும் இடையில் இருக்கும் ஊர். கோடையில் அங்குதான் இருந்தேன். தகிக்கும் வெப்பம். சுட்டெரிக்கும் வெயில். தாங்கவே முடியவில்லை. வருத்தமாக உள்ளது.
அன்புடன்,
பாவண்ண்ணன்.





13

அந்தரத்தில் நின்ற நீர்
21.6.06
அன்புள்ள முருகானந்தம்,

வணக்கம். நலம்தானே? உங்கள் கடிதம் கிடைத்தது. பதிலெழுத நான்தான் சற்றே தாமதப்படுத்திவிட்டேன். வெளியூர் பயணங்களின் அலைச்சல் சோர்வடைய வைத்துவிட்டது. வெற்றிகண்ட பெண்மணிகள் என்னும் ஒரு புத்தகம் தற்செயலாய் நூலகத்திலிருந்து எடுத்துவந்து வாசித்தேன். கிட்டத்தட்ட எழுபதுபெண்களுக்குமேல் பட்டியலிட்டிருந்தார்கள். அந்த நாட்களில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பெண்கள் முதல் கிரண்பேடி வரை இப்பட்டியலில் அடக்கம். தகவல்கள்தாம் என்றாலும் அவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து நடத்தும் விதமும் மிகவும் உத்வேகம் ஊட்டுபவையாக இருந்தன.

முப்பதுநாள் சிறைவாசம் பற்றி கல்கி எழுதிய அனுபவக் கட்டுரைகளும் படித்து முடித்தேன். ராஜாஜி முதல் சொக்கலிங்கம் வரை (போரும் அமைதியும் - தமிழில் மொழிபெயர்த்தவர்) அப்போது சிறையில் இருந்திருக்கிறார். எல்லாரைப்பற்றியும் தகவல்களைத் தருகிறார். படிக்க இந்த நூலும் நிறைவாகவே இருந்தது. அந்தரத்தில் நின்ற நீர் என்னும் கன்னட மொழிபெயர்ப்புக் கதைத்தொகுப்பும் படிக்க கிடைத்தது. படிக்கத் தகுந்த கதைகள் கிட்டத்தட்ட ஆறு இருந்தன. சிலவற்றைப்பற்றி ஒரு குறிப்பு எழுதி தீராநதி இதழுக்கு அனுப்பியுள்ளேன். பிறபின்.

அன்புடன்,
பாவண்ணன்.


14

கலந்துரையாடல் முக்கியம்
13.7.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? உங்கள் கடிதம் வந்தது. சென்னைப்பயணம் உங்களுக்கு உற்சாகம் அளித்திருக்கக்கூடும். அந்த ஊக்கத்தின் விளைவாகவே அமைப்பொன்றை கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கவேண்டும் என நம்புகிறேன். விரும்பும் வாய்ப்பும் சரியாக அமையும் நிலையில் நிச்சயம் என்றேனும் ஒருமுறை வந்து கலந்துகொள்வேன். இப்படி நண்பர்கள் கூடி கலந்துரையாடுவது பார்வைகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு நிச்சயம் உதவும். 'கற்றிலனாயினும் கேட்க' என்பதைப்போல நமக்கு நேரிடையாகப் படிக்க வாய்ப்பில்லை என்றாலும் படித்ததைப் பத்துப்பேர் சொல்லும்போது கேட்டுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

கடந்தவாரம் வேலூர் சென்றபோது, தீராநதி வாங்கினேன். ஸ்ரீராம் கதை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. துரதிருஷ்டவசமாக துயிலில் மறதியில் தொலைத்துவிட்டேன். வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்தான் வாங்கிப்படிக்கவேண்டும். உங்கள் நலம் விரும்புகிறேன்.
அன்புடன்,
பாவண்ணன்.








15

காலச்சக்கரத்தில் துளிர்க்கும் பண்பு
6.9.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்வசம் இல்லாத பிரதியைத்தேடி எடுத்து புதியபார்வை பிரசுரித்திருப்பதில் எனக்கு கூடுதல் சந்தோஷம். அப்போது நிமித்தமாக மாறி மாறி பல இடங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டே இருந்த காலம். எங்கள் அம்மா ஊரில்(வளவனூரில்) தம்பிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் கடிதத்தையே நகலெடுத்து அனுப்பியிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் பண்பு முற்றிலும் இல்லாமல் போகவில்லை. அரிதாகி விட்டிருக்கிறது.

 காலச்சக்கரத்தின் மறுசுழற்சியில் அது மறுபடியும் துளிர்க்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஆண்டு எங்கள் கிராமத்தில் என் ஏழு நூல்களை என் அம்மாவும், என் மனைவியின் அப்பாவும் (இருவரும் சகோதர சகோதரிகள்) வெளியிட்டார்கள். என் பால்ய சிநேகிதர்கள் 14 பேர் வாங்கிக் கொண்டார்கள். ஏழு வேறு நண்பர்கள் நூல்களைப்பற்றிப் பேசினார்கள். முற்றிலும் புதிய அனுபவம் அது. அக்கணத்தை நான் இப்போது எண்ணினாலும், மனம் எழுச்சி பெற்றுவிடும். வயிற்றுப்புண் எப்படி உள்ளது? சித்த மருத்துவம் கூட இதற்கு நல்லது எனச்சொல்லுவார்கள். மணத்தக்காளி போன்ற கீரை வகைகள் புண்களை ஆற்றும். கவனமாக உடல்நலம் பேணவும்.

அன்புடன்,
பாவண்ணன்.





16

அள்ளிக்கொண்டுபோன பெண்
--.10.06
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? உங்கள் ஊரில் வாசகர் வட்டம் இயங்கத்தொடங்கியிருப்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். படித்ததைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்தியல்ரீதியாக விவாதிக்கவும், இத்தகு அமைப்புகள் நல்ல பயிலரங்குகளாக விளங்கும்.

வடக்குவாசல் இதழை நானும் பார்த்தேன். கணையாழி இதழ்கள் இங்கு கிடைப்பதில்லை. நானும் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டேன். ஊர்ப்பக்கம் சென்றபின் நண்பர்களிடம் பார்க்க வழியுண்டு. அவசியம் பார்க்க முயற்சி செய்கிறேன். இடையில் புதியபார்வை, தீராநதி இதழ்களில் அவருடைய சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றாக இருந்தன.

என்.பி.டியைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவர்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூலை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். மதுரைப்பக்கம் சேர்ந்த சுப்புலட்சுமி எனபவர் அப்போது பொறுப்பிலிருந்தார். சிறுவயது மரணம் அவரை அள்ளிக்கொண்டு போய்விட்டது. தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு அது. அவருக்குப்பிறகு அந்த நிறுவனத்தோடான தொடர்பு கைவிட்டுப் போய்விட்டது. இரண்டு நாடகவிழாக்கள் இங்கே நடந்து முடிந்தன. இந்தியமொழி நாடகங்கள் பங்கேற்பு. நான் ஒரே ஒரு நாடகம் மட்டுமே பார்த்தேன். நேரம், பிரயாணம்தான் பிரச்சனை.

அன்புடன்,
பாவண்ணன்.

17

நீர் கரிசனம்
3.2.07
அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. புத்தகக் கண்காட்சிக்கு என்னால் செய்ய இயலாமல் போய்விட்டது. பொங்கலை ஒட்டி ஊரிலேயே இருக்கும்படி நேரிட்டுவிட்டது. என்னமோ தெரியவில்லை ஊருக்குச்சென்றால், அங்கிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல மனம் வருவதே இல்லை. நீங்கள் சொல்வது உண்மைதான். புத்தக விலைகளை இன்னும் கொஞ்சம் குறைத்து வைக்கலாம்தான். சமீபத்தில் இரண்டாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். ஐந்தாறு பக்கங்கள் மட்டுமே படிக்க முடிந்தன.

நதிநீர் தேசியமயமாவது கூட கனவாகப்போகும் போல உள்ளது. இன்று பாலாற்றின் குறுக்கே பத்தாவது அணைக்கட்டு கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசு தொடங்குவதாக செய்தி வந்துள்ளது. மாநில அரசைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மைய அரசிடம் இல்லை. தன்னிடம் நிதி கேட்காதவரை சரி என்று ஒதுங்கிவிட்டது. இன்றும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தமிழகம் கடுமையான நீர்நெருக்கடியில் தவிக்கும் என்றே தோன்றுகிறது. மழைநீர் மட்டுமே நமக்குள்ள ஒரே மூலாதாரம். அதைப் பேணிக்காக்கும் வழிமுறைகளிலாவது நாம் தீவிரமாக இறங்க வேண்டும். அரசியல்வாதிகள் எல்லா மாநிலங்களிலும் வேஷதாரிகளாக உள்ளார்கள். மற்றவர்களைப் பற்றிய கரிசனப்பார்வை தன் செல்வாக்கை மக்களிடையே இறக்கிவிடும் என்று அச்சம் கொள்கிறார்கள். நாங்கள் அனைவரும் நலமே. உங்கள் நலம் விரும்புகிறேன்.

அன்புடன்,
பாவண்ணன்.


18

பழங்குடி மனிதாபிமானம்
9.3.07
அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் படித்து முடித்த விஷயங்களைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. காவேரிப்படுகையைப் பற்றி பழ.நெடுமாறன் தினமணியில் எழுதிய கட்டுரையும், கே.எஸ். ராதாகிருஷ்ணன் புதியபார்வையில் எழுதிய கட்டுரையும் நல்ல பதிவுகள். மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் உள்ளவை. மற்றவை உணர்ச்சி வேகத்தில் உரைக்கப்படுபவை. மேற் குப்பகுதியில் உள்ளவர்கள் தம்மிடம் உள்ளவர்கள் தம்மிடம் உள்ள நீரை பங்கிட்டுக்கொள்வதில் கீழ்ப்பகுதியில் உள்ளவர்களோடு மோதியிருப்பது வரலாறு நெடுக உண்டு. ஆனால் அதை எல்லாம் எவ்விதம் தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் அணுகுமுறை மாறி மாறி வெளிப்படுகிறது. ஜிம் கார்பெட் எழுதிய 'எனது இந்தியா' நூலில் இடம்பெறும் ஓர் அனுபவக்குறிப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது. இதே போன்றே சூழல் அப்போதும் ஏற்படுகிறது. பற்றாக்குறையான நீரை இரண்டு பேரும் பங்கிட்டு போதாமையில் தள்ளாடுவதை விட, நல்லபடி பயிர் விளைச்சலுக்கு பயன்படுத்தி, விளைச்சலில் பங்கு கொடுத்துவிடலாம் என்று தீர்ப்பாகிறது. அதற்கு இருவரும் ஒப்புதல் அளிக்கிறார்கள். பழங்குடிகளுக்கு இருக்கிற மனிதாபிமானம் கூட நாகரிக்குடிகளுக்கு இல்லாத காலம் இன்று. பெருமூச்சு விடுவதைத்தவிர வேறுவழியில்லை.

அன்புடன்,
பாவண்ணன்.



19

ஆங்கிலேயரின் விசாலமான மனம்
17.3.07


அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் படித்த நூல்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். கடந்த ஆண்டே வாங்கி வைத்திருந்தாலும், ஜிம் கார்பெட்டின் 'எனது இந்தியா' தொகுப்பை இப்போதுதான் படித்துமுடித்தேன். ஆங்கிலேயராக இருந்தாலும், இனம், மொழி, வேறுபாடுகளைக் கடந்து எளிய மக்களை யோசிக்ககூடிய மனப்பக்குவம் அவருக்கு இருந்தது.

ஒப்பந்த தொழிலில் தனக்கு கிடைத்த லாபத்தை மூலதனமாகக் கொண்டு கிராமத்துக்கு பல மைல்கள் நீளத்துக்கு சுற்றுச்சுவர் கட்டிவைத்த குறிப்பைப் படித்தபோது மனம் வியந்தேன். கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் பிடித்திருக்கிறது அவருக்கு. விலங்குகள் கண்ட நேரத்தில் கிராமத்தில் புகுந்து விடக்கூடாது என்ற எண்ணத்துக்காக ரொம்ப இயல்பாக வேலைக்காரர்களுக்கு வீடுகள் கட்டித்தருகிறார். காலரா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார். கொத்தடிமையை சொந்தப்பணம் கொடுத்து மீட்கிறார். தொழில் தொடங்க தன் பணத்தை இன்னொருவருக்கு தருகிறார். இப்படி ஒரு நல்ல உள்ளத்தைப்பற்றி இன்றைய இளம்தலைமுறை அவசியம் படிக்கவேண்டும். ஜப்பானிய எழுத்தாளரான முரகாமியின் எழுத்துக்களை வம்சி பதிப்பகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அன்புடன்,
பாவண்ணன்.


20

பலியாகும் பால்யம்

5.5.07
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே. கடந்த இரண்டு வாரங்களாக சற்றே உடல்நலக்குறைவாகிவிட்டது. பதில் எழுதத் தாமதமாவதற்கு அதுதான் காரணம். இங்கு கோடை வறுத்தெடுக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு அனல்காற்று. பெல்காம் பக்கத்தில்  அனல்காற்றினால் பாதிக்கப்பட்டு சிலர் மரணமடையும் அளவுக்குப்போய்விட்டது. மழைக்காக ஏங்குகிறது மனம். ஏழெட்டு நாளாவது தொடர்மழை இருந்தால்தான் பூமி குளிரும்.

தீராநதியில் வெளிவந்த படைப்பு கதையல்ல. கட்டுரைதான். கதையென்னும் தவறான அடைமொழியுடன் வந்துவிட்டது. உங்கள் அமைப்பு குழந்தைகளுக்கு துணையாக இருக்க என் வாழ்த்து. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களே பெற்றோர்கள்தான். அவர்களுடைய நிறைவேறாத கனவுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் குழந்தைகளின் பால்யம் பலியாகிவிடுகிறது. எல்லாக் குழந்தைகளிடமும் ஏதோ சிறிய அளவு படைப்பூக்கம் உண்டு. மெழுகுவர்த்தித்திரி போலவே. அதைத்தூண்டி எரிய வைக்கவேண்டும். தி.ஜாவின் தேர்ந்தெடுத்த கதைகள் காலச்சுவடு மூலம் தொகுப்பாக வந்துள்ளது. வாசிக்க சுகமாக இருக்கிறது. முடிந்தால் படித்துப்பாருங்கள்.

அன்புடன்,
பாவண்ணன்.



21

காந்திய வழி
12.6.07
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலம்தானே? சற்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் பல வேலைகள் சுணங்கிவிட்டன. இப்போது தேறி அலுவலகம் வந்து கொண்டிருக்கிறேன். இடைவேளையில் சில நல்ல நூல்களை படித்து முடித்தது ஆறுதலாக இருந்தது. தியடோர் பாஸ்கரன் எழுதிய 'இனிவரும் தலைமுறைக்காக' நல்ல தகவல்களும், இனிய அனுபவக்குறிப்புகளும் கொண்ட தொகுப்பு. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள 'கத்தியின்றி ரத்தமின்றி' புத்தகமும் காந்திய வழியில் போராடி பல வெற்றிகளை சாதித்த ஜெகந்நாதன் - கிருஷ்ணம்மாள் தம்பதியினரைப்பற்றிய நூல். பெரிதும் மன எழுச்சி கொடுக்கக்கூடிய நூல். எங்காவது கிடைத்தால் தவறவிடாதீர்கள். அவசியம் படித்துப்பாருங்கள். இவர்களுடைய நேர்காணல் சமீபத்தில் அம்ருதா மாத இதழில் வந்துள்ளது. மிக முக்கியமான ஒரு பதிவு. காந்தியும், தமிழகச்சனாதனிகளும் என்றொரு நூலை அ. மார்க்ஸ் எழுதி உள்ளார். அதுவும் முக்கியமான ஒரு பதிவு. காலச்சுவடு இதழில் வந்திருந்த பாஸ்கரனின் நேர்காணல் நல்ல இனிய அனுபவம். தெளிவாகவும், செறிவாகவும் இருந்தது.
பிறபின்.
அன்புடன்,
பாவண்ணன்.












நன்றி இதனை முழுமையாக வாசித்த அனைவருக்கும்!. இந்நூல்  ஏதேனும் ஒருவகையில்  எளிய விஷயத்தையேனும் அறியத்தந்திருக்கும் என்று நம்புகிறோம்.


துணைபுரிந்தவை
லினக்ஸ்மின்ட் 17 இயக்குமுறைமை.
லிப்ரே ஆஃபீஸ் ரைட்டர்.
ஐபஸ் தமிழ் மென்பொருள்.
இன்க்ஸ்கேப் வரைகலை மென்பொருள்.

 ஸம்பூர்ணம்
   

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்